
சிவராஜன், மதுரை: உடல் எடை அதிகமானால் சர்க்கரை நோய் வருமா. சர்க்கரை நோயாளிகள் உடலில் புண் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்பது ஏன்.
அதிக எடை உள்ளவர்களுக்கு கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினால் உடல் செல்களில் முழுமையாக செயல்பட முடியாத காரணத்தால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமின்றி அதிக உடல் எடை கொழுப்பு சத்து வேறுபாடுகள், ரத்த அழுத்தம், மூட்டு தேய்மானம், இதய கோளாறு பிரச்னைகளையும் உருவாக்குவதால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை நோயாளிகளின் காலில் ஏற்படும் புண்ணிற்கு முறையான சிகிச்சை செய்து குணப்படுத்தவில்லை என்றால் கால் விரல்களையோ காலையோ இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதற்கு நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன. கட்டுப்பாடில்லா ரத்த சர்க்கரை நரம்புகளை பாதிப்பதால் வலி உணர்வினை இழக்க நேரிடுகிறது. இதனால் புண் ஏற்படுவதை அறியா நிலையும் புண் ஆறுவதற்கான சூழ்நிலையும் பாதிக்கின்றது. சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய நரம்பு பாதிப்பு கால் வடிவமைப்பில் மாற்றம் செய்யக்கூடும். இதனால் காலில் புண் ஏற்படக்கூடும்.
கட்டுப்பாடில்லா ரத்தசர்க்கரை கால் ரத்த ஓட்டங்களை பாதிப்பதால் புண் ஆறுவதற்கு தேவைப்படும் ரத்தஓட்டம் குறைகிறது. அதிக ரத்த சர்க்கரை புண், அதை சுற்றியுள்ள தசைகளில் கிருமிகள் வளர்வதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது.
- டாக்டர் சி.பி. ராஜ்குமார், சர்க்கரை நோய் மற்றும் பொதுநல நிபுணர், தேனி
இல.சக்திவேல், வேடசந்துார்: பல் சிதைவு எதனால் ஏற்படுகிறது. அதை தீர்க்க வழி.
கால்சியம் சத்து ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். கால்சியம் குறைபாட்டால் தான் ஆஸ்டியோ போரசிஸ், ரிக்கட்ஸ் என்ற பல் சிதைவு, தோல் வறட்சி, தசைப்பிடிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு முதுகு வலி, தசை பிடிப்பு, பல் அரிப்பு, பசியின்மை, உடையக்கூடிய நகங்கள், முடி, தோல் வறட்சியாக காணப்படும்.
பாதிப்புகளை தவிர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், பிரக்கோலி, முட்டைக்கோஸ், பாதாம், ஆரஞ்சு ஜூஸ், மத்தி மீன், ராகி, சோயா, காலார்ட் கீரைகள் போன்ற உணவுகளை உண்ண வேண்டும்.
- டாக்டர் எஸ்.லோகநாதன், அரசு தலைமை மருத்துவர், வேடசந்துார்
ஜி.மல்லிகா, போடி: பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல் எதனால் வருகிறது. தடுப்பது எப்படி.
பனிக்காலத்தில் உடல் குளிர்ச்சி அடைவதால் குழந்தைகளுக்கு எளிதில் மூக்கில் நீர் வடிதல், சளி, காய்ச்சல், இருமல் ஏற்படும். இதனை தவிர்க்க குழந்தைகளை காலை, இரவில் வாகனங்களில் வெளியிலும், கூட்ட நெரிசலிலும் அழைத்து செல்லக்கூடாது. மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குளிர்ந்த நீர், மோர், எலுமிச்சை, அன்னாசி, திராட்சை, சாத்துக்குடி பழங்கள் சாப்பிடக் கூடாது. சூடான நீரை பருக வேண்டும். அசைவ, கார உணவுகளை உண்ணலாம்.
குழந்தை பிறந்தது முதல் 5 வயது வரை எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய ப்ளு ஊசி, நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவமாக துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிது அளவு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் இன்றி சளி, இருமல், காய்ச்சல் வருவதை கட்டுப்படுத்தலாம். அவசியம் ஏற்பட்டால் சளி டானிக் கொடுக்கலாம்.
- டாக்டர்.எஸ்.ரவீந்திரநாத், தலைமை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை, போடி
என்.நித்தியகல்யாணி, ராமநாதபுரம்: எனது குழந்தைக்கு 2 வயதாகுகிறது. இதுவரை பேச்சு வரவில்லை. என்ன செய்ய வேண்டும்.
பொதுவாக குழந்தைகளுக்கு பேச்சு வராமல் இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலில் மூளை நரம்பில் பாதிப்பு இருந்தால் பேச்சு வராது. மன நலக் குறைபாடு இருந்தாலும், காது கேளாமை இருந்தாலும் பேச்சு வராது. குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்பதற்காக தாய்மார்கள் எப்படியும் பேசிவிடும் என 4 ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்து அதன் பின் சிகிச்சைக்கு வருகின்றனர். இது தவறான செயலாகும்.
சிரமப்பட்டு தான் பேச்சை கொண்டு வர முடியும். காது கேளாமையால் பேசாமல் இருந்தால் நுாறு சதவீதம் பேச்சு வர வைக்க முடியும். 'காக்லியர் இம்பிளான்ட்' அறுவை சிகிச்சையாலும் பேச வைக்க முடியும்.
பிறந்த குழந்தைகளுக்கு ஓ.ஏ.இ., அறுவை சிகிச்சை செய்வதாலும், மற்ற குழந்தைகளுக்கு பி.இ.ஆர்.ஏ., என்ற அறுவை சிகிச்சை மூலமும் பேச வைக்க முடியும். மேலும் 1 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே காக்லியர் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
அதன் பிறகு இந்த அறுவை சிகிச்சையால் பயனில்லை.
- டாக்டர்.சி.அருண்ராஜ், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
பெ.சண்முகம், சிவகங்கை: எனது உடலில் வெண் தேமல் உள்ளது; எப்படி சரி செய்வது.
சித்த மருத்துவ நோய் கணிப்பின்படி இது உடலில் உள்ள காற்று (வாதம்) தனது அளவில் அதிகரித்தும், நீர் (கபம்) தன்மை திரிந்தும் இருக்கின்ற போது தோலில் தோன்றும் நோய். நவீன மருத்துவ கண்ணோட்டத்தின் படி இதனை பூஞ்சை காளான் தொற்றால் ஏற்படுகின்ற டீனியா வெர்சிகாளர் என்று கூறுவார்கள்.இதை குணப்படுத்த வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். தினமும் காலை மாலை என இரு முறை குளிக்க வேண்டும். பொரித்த உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு கண் விழித்தலை தவிர்க்க வேண்டும்.
திப்பிலி பொடி ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை அளவு காலை இரவு உணவுக்குப் பின் தேனில் சேர்த்து 30 நாள் சாப்பிடலாம்.மேற்பூச்சாக சீமை அகத்தி இலை சாற்றில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து தேமல் உள்ள இடங்களில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஆடைகளை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும். போர்வை படுக்கை விரிப்புகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
- டாக்டர் ச.சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை
கி.முத்துராஜ், அருப்புக்கோட்டை: எனது 8 வயது மகனுக்கு காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. மாத்திரையை கடையில் வாங்கி கொடுத்தும், காய்ச்சல் 2 நாளைக்கு பிறகு மீண்டும் வருகிறது. வைரஸ், டெங்கு, டைப்பாயிடு காய்ச்சலாக இருக்குமா, எந்த மாதிரி சிகிச்சை எடுக்க வேண்டும்.
டைபாய்டு, டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு தான் அதிகம் வரும். முதலில் காய்ச்சல், சோர்வு, வயிற்று வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். ஒரு சிலருக்கு உடம்பில் சிறிய சிவப்பு புள்ளிகள் ஏற்படும். சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் இவற்றால் டைபாய்டு ஏற்படும். பாதுகாப்பில்லாத குடிநீரை உட்கொள்வதன் மூலம் இந்த வகை காய்ச்சல்கள் வரும். கைகளை சுத்தம் இல்லாமல் வைத்துக் கொண்டால் இதன் மூலமும் நோய் பரவும். பெரியவர்களையும் இது பாதிக்கும்.
நீங்களாகவே காய்ச்சல் தானே என்று மெடிக்கல் ஷாப்பில் மாத்திரையை வாங்கி சாப்பிடக்கூடாது. அது ஆபத்தாக முடியும்.
குழந்தைகளின் கைகளை சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். சத்தான பாதுகாப்பான உணவு கொடுக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றினால் பலவித காய்ச்சல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் பொன் ரூபா, அரசு மருத்துவர், அருப்புக்கோட்டை