PUBLISHED ON : பிப் 09, 2025

சுகாதாரமற்ற உணவு, குடிநீர் வாயிலாகப் பரவும், 'ஜிபிஎஸ்' எனப்படும் 'குல்லன் பாரே சிண்ட்ரோம்', என்பது புதிய தொற்று நோய் இல்லை. பல ஆண்டுகளாக இருக்கும் ஒன்று தான். சில சமயங்களில், சில வகை பாக்டீரியா, வைரஸ் தொற்று பரவல் அதிகமாகும் போது, ஜி.பி.எஸ்., பாதிப்பும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
இந்த வைரஸ், பாக்டீரியாவின் வெளிப்புற அமைப்பில் உள்ள புரதமும், நம் தண்டு வடத்தில் இருந்து தசைகளுக்கு செல்லக்கூடிய நரம்புகளின் ஆரம்பப் பகுதியில் இருக்கும் 'மைலின்' என்கிற புரதமும், வைரஸ், பாக்டீரியாவின் வெளிப் பகுதியில் உள்ள புரதமும் சில நேரங்களில் அமைப்பில் ஒன்றாக இருக்கலாம்.
நம் நோய் எதிர்ப்பணுக்கள், இந்த நரம்பின் ஆரம்பப் பகுதியில் உள்ள புரதத்தை தொற்று கிருமி என்று நினைத்து தாக்கலாம்.
இதனால், நரம்புகள் பலவீனமாகி, கால்கள் மரத்துப் போகும்; உட்கார்ந்தால் எழுந்திருக்க சிரமமாக இருக்கும்; கைகளில் பிடிமானம் குறையும்; கைகளை தலைக்கு மேல் துாக்குவதற்கு சிரமம் இருக்கும். சுவாசப் பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகி மூச்சுத் திணறல் எற்படும்.
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக 'நேர்வ் கன்டக் ஷன் ஸ்டடி- 'என்.சி.வி.,' பரிசோதனை, முதுகு தண்டுவடத்தில் இருந்து நீர் எடுத்து பரிசோதிப்பதன் வாயிலாக ஜி.பி.எஸ்., இருப்பதை உறுதி செய்யலாம்.
தொடர்ந்து, 'இம்மினோ குளோபளின்' என்கிற ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா ஏற்றுவதன் மூலமாகவும் அதிகப்படியாக வேலை செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த முடியும்.
பிரச்னை கட்டுக்குள் வந்தாலும், சிதைந்த நரம்புகள் பழைய நிலைக்கு திரும்பும் வரைக்கும், மூச்சுவிட சிரமமாக இருந்தால், வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படலாம்.
கை, கால் பலவீனமாக இருந்தால் பிசியோதெரபி உட்பட தேவையான பயிற்சிகளை செய்வதால் குணம் பெறலாம். இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை.
டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன்
நரம்பியல் மற்றும் நரம்பு அறிவியல் துறை,
ரேலா மருத்துவமனை, சென்னை
044 - 66667777
info@relahospitals.com