
மாதங்கி, மதுரை: தலையில் அடிபட்டால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது எதனால். தலையில் அடிபட்டு மூளை கலங்கிருச்சா என்று கேட்கிறார்களே. இது உண்மையா?
தலையில் அடிபடும் போது நேரடியாக கண்ணிலும் அடிபடலாம். கண்களுக்கு பின்புறமாக 'ஆப்டிக்' நரம்பு மூளையில் சேர்கிறது. ஒரு பொருளை பார்க்கும் போது அக்காட்சி தரும் செய்திகளை இந்த நரம்பு தான் மூளைக்கு சென்று சேர்க்கிறது. தலையில் அடிபடும் போது இந்நரம்பிலும் அடிபட்டால் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம். மூன்றாவது வகையில் மூளையின் பின்புறத்தில் 'ஆக்ஸிபிட்டல் லோப்' என்ற பகுதியில் அடிபட்டால் பார்வை மற்றும் கண் நரம்புகள் சரியாக இருந்தாலும் அவரால் அவற்றை புரிந்து கொள்ள முடியாது. மூளையின் சிந்திக்கும் திறனை நிர்ணயிக்கும் இடம் 'என்ெஸபலான்' பகுதி. மலேரியா, டெங்கு, கொரோனா தொற்றால் காய்ச்சல் ஏற்படுவது போல சிந்திக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் 'என்ெஸபலோபதி' ஏற்படும். தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல், மூளை கட்டிகள், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாறுதல், சில விட்டமின் குறைபாடுகள், அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சிந்திக்கும் திறனில் மாற்றம் ஏற்படும்.
- டாக்டர் எஸ்.மீனாட்சிசுந்தரம், மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர், மதுரை
பாலாஜி, கொடைக்கானல்: குளிர்காலத்தில் ஏற்படும் முழங்கால், மூட்டு வலியை எதிர்கொள்வது எப்படி, தீர்வு என்ன?
பொதுவாக தண்ணீரில் கால்சியம், ப்ளுரைடு இல்லாதது காரணம். பனி காலத்தில் கவுட் எனப்படும் முடக்கு வாதத்தால் (யூரிக் ஆசிட்) இப்பிரச்னை ஏற்படும். இதை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி , நீர் காய்கறிகள் அதிகளவு எடுத்து கொள்வதன் மூலம் தீர்வு கிட்டும்.
-டாக்டர் அரவிந்த்கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர், கொடைக்கானல்
என். சங்கீதா, ராமநாதபுரம்: எனது மார்பகத்தில் சிறிய கட்டி போல் உள்ளது. வலி இல்லை. இதனால் பாதிப்பு ஏற்படுமா?
இது போன்று மார்பகப் பகுதியில் கட்டிகள் ஏற்பட்டால் அசட்டையாக இருந்து விடக்கூடாது. மார்பகப் புற்று நோய், மார்பகத்தில் வலியில்லாத கட்டியாக உருவாகும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் எளிமையான சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். மார்பகப் பகுதியில் கட்டி, வீக்கம், போன்றவை இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து ஆரம்ப நிலையில் மருந்துகளால் குணப்படுத்த முடியும்.
அடுத்த கட்டத்தில் கதிர் வீச்சு சிகிச்சை சிகிச்சையளிக்கப்படும். முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்களது மார்பகப் பகுதியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கையால் அழுத்தி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- டாக்டர்.எஸ்.சுரேந்திரன், பொது மற்றும் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
சுந்தரி, சாத்துார்: எனது மகனுக்கு 16 வயது ஆகிறது. கடந்த 3 வாரங்களாக சளியுடன் இருமலும் தொண்டை வலியாலும் அவதிப்பட்டு வருகிறான். இதுபோன்ற பாதிப்பு பலரிடம் உள்ளது காரணம் என்ன. வராமல் தடுப்பது எப்படி?
சுகாதாரமற்ற உணவு, குடிநீராலும் பருவநிலை மாறுபாடு காற்று மாசு காரணமாகவும் பலரும் தொண்டை வலியாலும் சளி இருமல் தொல்லையாலும் பாதிக்கப்படுகின்றனர். சளி, இருமல் தொண்டை வலி பாதிப்புக்கு காரணம் வைரஸா, பாக்டீரியா வா என்பதை டாக்டரிடம் காட்டினால் தான் தெரியும்.
டாக்டரின் பரிந்துரை படியே மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.மேற்கண்ட அறிகுறிகளுடன் காய்ச்சல், ஆஸ்துமா இருக்குமாயின் சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறும் போது விரைவாக நலம் பெறலாம்.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். சூடான தண்ணீர் பருக வேண்டும். தொற்று பரவாமல் இருக்க பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது அவசியம்.
- டாக்டர் சுந்தர் கொண்டல்சாமி, பொது நல மருத்துவர், சாத்துார்