PUBLISHED ON : பிப் 09, 2025

பெற்றோர் தான், 6 - 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பல் துலக்கி விட வேண்டும். காரணம், 3 வயதிலேயே குழந்தைகள், 'நானே பிரஷ் செய்கிறேன்' என்று சொல்வர். குழந்தை தன் வேலையை தானே செய்ய விரும்புகிறது என்று பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
இதில் கவனிக்க வேண்டியது, பிரஷ் செய்வது என்பது ஒரு பைன் மோட்டார் ஸ்கிள் எனப்படும் திறம்பட செய்யும் வேலை.
பல் துலக்கும் போது, பொதுவாக நாம் செய்வது போல பக்கவாட்டில் பிரஷ் செய்வது தவறு. விளம்பரங்களில் காட்டுவது போன்று மேலும், கீழும் துலக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரை, இந்த திறன் குழந்தைக்கு இருக்காது.
நானும் பல் தேய்க்கிறேன் என்று செய்வரே தவிர, எல்லா இடத்தையும் சரியாக தேய்க்க மாட்டார்கள். தன் ஷூ லேசை தானாகவே சரியாக கட்டத் தெரிகிற 6 - 7 வயது தான், குழந்தை தானாகவே பிரஷ் செய்யும் வயது. காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதை விடவும், இரவில் துாங்குவதற்கு முன் பிரஷ் செய்வது மிகவும் முக்கியம்.
பால் பற்கள் முளைத்ததில் இருந்து, என்ன விதமான பல் பிரச்னைகள் வரும் என்பதும் குழந்தையின் பற்களை எப்படி பிரஷ் செய்வது என்பதும் பெற்றோருக்கு தெரிவதில்லை.
குழந்தைகளுக்கென்றே இருக்கும் பிரத்யேக பிரஷ், புளூரைடு இருக்கும் பேஸ்ட் தான் பயன்படுத்த வேண்டும். வாயில் வைத்ததை விழுங்க வேண்டுமா, துப்ப வேண்டுமா என்ற கட்டுப்பாடு 3 வயதில் தான் வரும். அதனால், ஒரு அரிசி அளவு பேஸ்ட் வைத்தால் போதும்.
பால் பற்களை பராமரிக்கத் தேவையில்லை என்ற பொதுவான அபிப்ராயம் உள்ளது. பால் பற்களில் சொத்தை விழுந்தால், பல்லின் வெளிப்புறத்தில் இருக்கும் எனாமல் உடையும். உள்ளே நரம்புகளை பாதிக்கும். குளிர்ச்சியான, சூடான உணவை சாப்பிட முடியாது.
ஒரு வயதில் சொத்தை வரலாம். பால், சாப்பாடு ஊட்டிய பின் பஞ்சு, சுத்தமான வலை துணியை வைத்து துடைக்க வேண்டும். அதில் வெள்ளையாக படிமம் படிந்தால், சொத்தை ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
பற்பசையில் உள்ள புளூரைடு, சொத்தை வராமல் தடுக்கும். சரியாக சுத்தம் செய்யாமல் சாப்பாடு, பால் பல்லில் ஒட்டிக் கொண்டாலும், அது பற்களை பாதிக்காமல் பாதுகாக்கும்.
டாக்டர் எம்.எஸ்.முத்து, தலைவர், குழந்தைகள் பல் சீரமைப்பு பிரிவு, ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை044 - 4592 8000muthumurugan@sriramachandra.edu.in