PUBLISHED ON : பிப் 09, 2025

இரண்டு விதமான பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளை தினமும் பார்க்கிறேன்.
சென்ற வாரம் வயிறு வலி என்று இரண்டரை வயது குழந்தையை பெற்றோர் அழைத்து வந்தனர். பரிசோதித்ததில், வாயுத் தொல்லையுடன் சேர்ந்த அல்சர் என்று தெரிந்தது.
குழந்தையின் தினசரி நடவடிக்கைகளை விசாரித்ததில், சாக்லேட், பிஸ்கட், மிக்சர் என்று இரவு வேளையில் தின்பண்டங்கள் சாப்பிடுவான்; பகலில் சாப்பிட மாட்டான். நாங்கள் இருவரும் ஐ.டி., ஊழியர்கள். இரவில் தான் எங்களுக்கு வேலை.
குழந்தையும் எங்களுடன் துாங்காமல் இருப்பான். வேலை முடிந்து நள்ளிரவு இரண்டு மணிக்கு எங்களுடன் உறங்குவான் என்றார்.
பெற்றோர் வேலை செய்தபடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் இவனும் அப்படியே பழகி விட்டான். பகல் வேளைகளில் சரியாக சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால் மலச்சிக்கல் வந்து, வாயு வும் சேர்ந்து வலி வந்திருக்கறது.
அடுத்தது, என் குழந்தை இரவில் வெகு நேரம் மொபைலில் 'ஷாட்ஸ்' பார்க்கிறது.
துாங்குவதே இல்லை என்பது பெற்றோர் என்னிடம் சொல்லும் புகார். இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைக்கு தானாக எதுவும் தெரியாது. பெற்றோரைப் பார்த்தே கற்றுக் கொள்ளும்.
சரியான நேரத்தில் குழந்தையை துாங்க வைத்த பின் அலுவலக வேலையை செய்யுங்கள். குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு முன் மொபைல் பார்ப்பது, நினைத்த நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். மாலை வேளைகளில் ஓடியாடி விளையாடச்சொல்லுங்கள்.
துாக்கம்
இது துாங்கும் நேரம் என்பதை உணர்த்த இரவு நேரத்தில் பீனியல் சுரப்பியில் இருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். பகலில் வெளிச்சத்தை பார்த்தும் மெலடோனின் சுரப்பு குறைந்து விழிப்பு வந்து விடும்.
இது, இயல்பான நடக்கும் செயல். நீலக்கதிர்களை இரவில் பார்ப்பதால், இது இரவா, பகலா என்ற குழப்பத்தில் மூளை சுறுசுறுப்பாகவே இருக்கும். அதனால் துாக்கம் வராது.
பள்ளிக்கு போகாத வயதில் காலை 11.00 மணி வரை துாங்குவர். பள்ளிக்கு செல்பவர்கள் வேறு வழியில்லாமல் 7.00 மணிக்காவது எழுந்திருக்க வேண்டும்.
பாதிப்புகள்
'குரோத் ஹார்மோன்' எனப்படும் குழந்தையின் மூளை, உள் உறுப்புகள், உயரம், உடல், மன வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் துாக்கத்தில் மட்டும் தான் சுரக்கும்.
போதுமான அளவு துாக்கம் இல்லாவிட்டால் தேவையான அளவு குரோத் ஹார்மோன் சுரக்காது. இதனால், வளர்ச்சி குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, கவனக் குறைவு ஏற்படும். காரணமே இல்லாமல் அழுவர்; எரிச்சல் அடைவர்; படிப்பில் கவனம் இருக்காது; வகுப்பறையில் துாங்கி வழிவர்.
இந்நிலை தொடர்ந்தால், நாள்பட்ட ஹார்மோன் மாற்றத்தால், உடல் பருமன், டைப் 2 சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என்று வாழ்க்கை முறை மாற்ற நோய்கள் வரும்.
முதுநிலை மருத்துவப் படிப்பை நான் அமெரிக்காவில் படித்தேன். அந்த நாட்டில் 12, 13 வயதிலேயே இப்பிரச்னைகளுடன் குழந்தைகளை பார்த்திருக்கிறேன். பீட்சா, பர்கர் என்று அவர்களின் உணவு முறைகளுக்கு பழகிவிட்ட நம் குழந்தைகளுக்கும் சிறிய வயதிலேயே இப்பிரச்னைகள் வரும் அபாயம் அதிகரித்து உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டாக்டர் சவுமியா ஜெயச்சந்திரன்,
குழந்தைகள் நல மருத்துவர்,
தீபம் மருத்துவமனை, சென்னை
044 - 9790497905
feedback@deepamhospitals.com