
கலைச்செல்வி, மதுரை: பற்களை எடுக்காமல் பற்சொத்தைக்கு சிகிச்சை செய்ய முடியுமா?
பல்வலியால் அவதிப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல் பிரச்னை இருந்தும் பல் டாக்டரிடம் செல்லாமல் தவிர்த்து விடுகின்றனர். நாளடைவில் வலியாகவோ, வீக்கமாகவோ மாறி விடும். பல் எடுக்க வேண்டியிருக்குமோ என்ற பயமே டாக்டரை அணுகாததற்கு காரணம். பல் எடுக்க பயந்து சிறிய பல் சொத்தையை கூட கவனிக்காமல் விட்டால் பின்னாளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நவீன பல் மருத்துவ சிகிச்சைகளின் வரவால் பல் எடுக்காமல் செய்யக்கூடிய பல சிகிச்சை வழிமுறைகள் உள்ளன.
பல் சொத்தையினால் வலி வந்தால் பல் எடுக்க வேண்டும் என்பதில்லை. சொத்தையின் அளவைப்பொறுத்து பல் அடைப்பது அல்லது வேர் சிகிச்சை செய்து பற்களை சரிசெய்து அதன் மேல் 'செராமிக் கேப்' மாட்டினால் இயற்கை பற்கள் போலவே மாறி விடும். முன்பு வேர்சிகிச்சை செய்யமுடியாது என்று சொல்லப்பட்ட பல பற்களுக்கு இன்றைய நவீன சாதனங்களினால் எளிதாகவும் வலியின்றி வேர் சிகிச்சை செய்ய முடியும். சொத்தையினாலோ அல்லது அடிபட்டோ பற்கள் உடைந்தால் கூட வேர் சிகிச்சை செய்து பற்களை கட்ட முடியும்.
பல் ஆடினால் பல் எடுக்க வேண்டியிருக்கும் என்பதும் தவறான கருத்து. இல்லாவிட்டால் பல் ஆடி தானாக விழும் வரை பொறுத்திருப்பது. இரண்டுமே சரியான முறை அல்ல. ஈறுகளை பலப்படுத்தி அதன் மூலம் பற்கள் ஆடாமல் இருக்கச் செய்வது, வலுவான பற்களோடு ஆடும் பற்களை இணைத்து அவற்றை பலம்பெறச் செய்வது போன்ற வழிமுறைகளால் ஆடும் பற்களை எளிதாக சரிசெய்யலாம்.
சொத்தை பற்கள், ஆடும் பற்கள், உடைந்த பற்கள் அனைத்திற்கும் பல் எடுக்காமல் செய்யும் நவீன சிகிச்சை முறைகள் இன்று உள்ளன. உரிய நேரத்தில் இவற்றை செய்து கொள்வதன் மூலம் இயற்கை பற்கள் போன்ற நிலையான பற்களை பெறலாம்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான், பல் மருத்துவ சீரமைப்பு நிபுணர், மதுரை
ஆர்.சுமதி, பூப்பாறை: எனது மூன்றரை வயது பெண் குழந்தைக்கு உமிழ்நீர் தொடர்ந்து வடிந்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவில் வெளியேறுகிறது. இதனால் எதிர்காலத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா. உமிழ்நீர் அதிகபடியாக சுரக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இதனால் பால், உணவுகளை சாப்பிடுவதில் பிரச்னை உள்ளது. தீர்வு கூறவும்?
குழந்தைகளுக்கு salivary gland முகத்தில் உள்ள மூன்று உமிழ்நீர் சுரப்பிகள் மூலம் உற்பத்தியாகும். இப்பகுதிகளில் படிமங்கள் ஏற்படுவது, உமிழ்நீர் சுரககும் நுண்ணிய நரம்புகளில் ஏற்பட்ட பிரச்னைகளால் தொடர்ந்து உமிழ்நீர் சுரக்கும் நிலை இருக்கும். அதனால் உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்பட்டுள்ள அலர்ஜி, படிம கற்களை பரிசோதனை மூலம் கண்டறிந்து அகற்ற வேண்டும். வேறு காரணங்களும் இருக்கலாம். குழந்தை அவசியம் சிகிச்சை பெற வேண்டும். காலதாமதம் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
- டாக்டர் செல்வக்குமார், தலைவர், குழந்தைகள் நலத்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி
எம்.மோகன்ராஜ் ,சிவகங்கை: பக்கவாதம் ஏன் வருகிறது?
நம் உடலில் சர்க்கரை நோய் பாதிப்பு,அதிகப்படியான கொழுப்பு, புகையிலை பழக்கம், குடிப்பழக்கம், உடல் பருமன், இதய வால்வு பிரச்னை ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம் வரலாம். ஆனால் அதிகம் ரத்த அழுத்தத்தினாலேயே பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரத்த அழுத்தத்தினால் மூளையில் அடைப்பு அல்லது ரத்த கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்பட்டு கை கால் செயல்படாமல் போகிறது. இவற்றை தடுக்க 18 வயது நிரம்பியவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரைக்க கூடிய மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். புகை பிடிப்பது, மது பழக்கத்தை கைவிட வேண்டும். பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் காலை மாலையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
- டாக்டர் ராமநாதன், உதவி பேராசிரியர், பொது மருத்துவம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
தினேஷ் சங்கர், ராஜபாளையம்: எனக்கு 45 வயது. விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறேன். சில நாட்களாக அடிக்கடி இரண்டு கண்களிலும் எரிச்சல், கண்ணீர் வடிதல் அதிகமாகிறது. விரைவில் கண்கள் காய்ந்து விடுகிறது. கை வைத்தியமாக இரவில் கண்களை கழுவுவதும், உடல் சூடு என நினைத்து துாங்குவதற்கு முன் கண்களில் எண்ணெய் விட்டும் பிரச்னை குறையவில்லை. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என என்ற தொந்தரவும் இல்லை. தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும்?
மே முதல் செப்டம்பர் வரை காலநிலை மாற்றத்தில் வெயில், வறண்ட காற்று அதிகம் காணப்படும். வெயிலில் நேரடியாக கண்கள் படும் போது கண்களில் எரிச்சல், வறட்சி இவற்றின் தொடர்ச்சியால் தொற்று போன்றவை அதிகம் ஏற்படுகிறது.
தங்களுக்கு ஏற்பட்டுள்ளது வெயில் காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என தெரிகிறது. நேரடியாக கண்களை கசக்குவதோ, தண்ணீரால் கழுவுவது எண்ணெய் விடுவது இதற்கு தீர்வாகாது. பாதிப்பு தொடர்வதால் தகுந்த கண் மருத்துவரை நாடி பரிசோதனையின் மூலம் தீர்வு காண வேண்டும்.
இதன்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீண்ட நேரம் நேரடியாக வெயிலில் நிற்பதை தவிர்த்தல், தரமான கண் பாதுகாப்பு சாதனங்கள், அதிக தண்ணீர் குடிப்பது, தலைக்கு தொப்பி அணிவது, பொது இடங்களில் பாதுகாப்புடன் சுகாதாரத்தை மேற்கொள்வது என தொடரலாம்.
- டாக்டர் சித்ரா, கண் மருத்துவ நிபுணர், அரசு பொது மருத்துவமனை, ராஜபாளையம்

