PUBLISHED ON : செப் 01, 2024

கடந்த சில மாதங்களாக டெங்கு, காலரா, குரங்கு அம்மை, புளூ, ஹெச்1என்1 உட்பட பல தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல் வந்தால், 'வைரஸ் காய்ச்சல்' என்று பொதுவாக சிகிச்சைகள் தருவோம். தற்போது நவீன பரிசோதனைகள் பல இருப்பதால், என்ன கிருமியால், எப்படிப்பட்ட பாதிப்பு என்பதை கண்டுபிடிக்க முடிகிறது. அதேநேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் இருந்த போலியோ, பெரியம்மையை முற்றிலும் ஒழித்து விட்டோம். டெட்டனஸ், டிப்தீரியா, கக்குவான் இருமல் வெகுவாகக் குறைந்து விட்டது.
இப்படி பல கிருமிகளை ஒழித்து விட்டதால் அந்த இடம் காலியாக இருக்க முடியாது. ஒன்று போனால் அந்த இடத்திற்கு இன்னொன்று வந்தே தீரும். இது தான் இயற்கையின் நியதி.
மக்கள் தொகை பெருக பெருக, ஏரி, காடுகள் இருந்த இடங்களில் எல்லாம் வீடு கட்டி குடியேறி விட்டோம். அந்த மாதிரி சூழலில், விலங்குகளிடம் இருந்த மனிதர்களுக்கு நோய் பரவும். இதை 'ஜூனோசஸ்' என்று சொல்கிறோம். பூச்சிகளில் இருந்து 'ஸ்கிரப்டைசஸ்', விலங்குகளில் இருந்து 'எபலோ' வருகிறது. குரங்கு அம்மை பெயரிலேயே தெரியும் எங்கிருந்து வருகிறது என்று. காடுகளை அழித்து விலங்குகளுக்கு அருகில் செல்வதால் அவைகளிடமிருந்து தொற்று நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
நோய் பரவும் வேகமும் இன்று மிகவும் சுலபமாகிவிட்டது. 1985ல் புளூ காய்ச்சல் வந்தால் உலகின் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்ல கப்பல் போக்குவரத்து மட்டும் இருந்ததால், பரவுவதற்கு பல மாதங்கள் ஆகும். இன்று உலகின் எந்த மூலைக்கும் 48 மணி நேரத்தில் சென்று விடலாம். பரவலை கட்டுப்படுத்துவது சவாலான விஷயம். இது தவிர, பருவ நிலை மாற்றத்தினால் புது புது பிரச்னைகள் வழக்கமான இடத்தில் இருந்து புது இடங்களுக்குச் செல்வது. குளிர் பிரதேசம் என்பதால் அமெரிக்காவில் முன்பெல்லாம் டெங்கு தொற்றே கிடையாது. தற்போது சில மகாணங்களில் டெங்குவை உண்டாக்கும் 'ஏடிஸ்' கொசுக்கள் பரவ ஆரம்பித்து விட்டது.
இந்த ஆண்டைப் போன்று பல மாதங்கள் தொடர்ந்து வெயில் அதிகம் இருந்தால், தண்ணீர் மூலமாகவும் தொற்று நோய்கள் பரவலாம். நம் மாநிலத்தில் நேரடி உணவு வினியோகம் செய்யும் பணியில் பெரும்பாலும் மற்ற மாநிலத்தவர்களே உள்ளனர். கரிபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹெய்டி குடியரசு நாட்டில் 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நேபாள நாட்டு தொழிலாளர்களால் காலரா பரவும் அபாயம் உள்ளதை முன்கூட்டியே கணித்தார்கள். அது போலவே நடந்தது. இதற்கு முன் அந்தப் பகுதியில் காலரா பாதிப்பு கிடையாது.
தண்ணீர், உணவு வினியோகத்தில் பாதுகாப்பான முறைகள் கையாளப்படுகிறதா என்பதை கண்காணிப்பது வெகுவாக குறைந்து விட்டது. எதை கவனிக்காமல் விடுகிறோமோ அதிலிருந்து பிரச்னைகள் அதிகமாக வரவே செய்யும்.
டாக்டர் எஸ்.சுப்ரமணியன், தொற்று நோயியல் மருத்துவ ஆலோசகர், குளோபல் மருத்துவமனை, சென்னை 79967 89196info.chn@gleneagleshospitals.co.in