ஊட்டச்சத்து குறைவால் வரும் ரத்த சோகையை தடுப்பது எப்படி?
ஊட்டச்சத்து குறைவால் வரும் ரத்த சோகையை தடுப்பது எப்படி?
PUBLISHED ON : செப் 01, 2024

ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. ஒரு காலத்தில் வறுமை சார்ந்த நோயாக இருந்தது. இன்று பொதுவாக உள்ளது.
தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வில், ரத்த சோகை பாதிப்பு ஆண்களில் 25 சதவீதம், பெண்களில் 57 சதவீதம், பதின் வயது சிறுவர்களில் 31.1 சதவீதம், பதின் பருவ பெண்களில் 59.1 சதவீதம், கர்ப்பிணியரில் 52.2 சதவீதம், குழந்தைகளில் 67.1 சதவீதம் இருப்பதாக கூறுகிறது. இது, முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கருவுற்ற பெண்களுக்கு குழந்தை வளர்ச்சி குறைபாடு, அதிக ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதேசமயம், பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12, தனிமங்கள் போதுமான அளவு கிடைக்காமல் போவதால் ரத்த சோகை ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்பு உதவுகிறது. அதேசமயம் வைட்டமின் 12, போலிக் அமிலம் ஆகியவை ரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சிக்கு உதவுகின்றன. சிட்ரஸ் பழங்கள், வண்ணக் காய்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள், உலர் பழங்கள், மீன், மிதமான சிவப்பு இறைச்சி ஆகியவை குறைபாட்டை தவிர்க்க உதவுகின்றன. தேநீர், காபி, மது, பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், செயற்கை குளிர் பானங்கள், சிப்ஸ், பர்கர் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்வது, ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 11 கிராமிற்கும் குறைவாக உள்ளதா என்பதை அறிய ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
உடலில் வேறு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதை குருதியியல் டாக்டரிடம் ஆலோசனை பெற வண்டும்.
ஆறு மாதங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு இரும்புச்சத்து ஊசி மருந்துகளும் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு ஒட்டுண்ணிகளை நீக்க, 'ஆன்டிஹெமிந்திக்' தருவதுடன், குடற்புழு நீக்கம் கட்டாயம் செய்ய வேண்டும்.
டாக்டர் எம்.கோபிநாதன், குருதியியல் மருத்துவ ஆலோசகர், எம்.ஜி.எம்., மருத்துவமனை, சென்னை94425 05151 drgopi90@gmail.com

