PUBLISHED ON : டிச 29, 2024

வலி என்பது ஒரு உணர்வு. வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள நரம்பு வழியாக மூளைக்கு சென்று, வலியை உணர்கிறோம்.
கேன்சர் பாதித்த உறுப்பை அகற்றும் போது, கட்டுப்பாடற்ற சர்க்கரை கோளாறால் கால் மற்றும் விரல்களை நீக்கும் போது, விபத்தில் அடிபட்ட உறுப்பை அகற்ற வேண்டிய கட்டாய நிலையில், அந்த பகுதியில் உள்ள நரம்பு சிதையலாம்.
இதனால், அகற்றப்பட்ட உறுப்பு இருப்பதை போன்று உணர்வர். தொடர்ந்து வலி இருக்கும்; உணர்வும் இருக்கும். இதற்கு, 'பேன்டம் பெயின்' என்று பெயர்.
இதற்கு காரணம், குறிப்பிட்ட நரம்பின் துாண்டுதல் மூளையில் இருக்காது. இதற்கு, முதல் கட்ட சிகிச்சையாக மருந்து கொடுக்கலாம். குறிப்பிட்ட நரம்பை செயல்படாமல் செய்யலாம்.
கேன்சர் நோயாளி ஒருவருக்கு இதே பிரச்னை வந்த போது, முதல் கட்ட சிகிச்சையால் பலன் இல்லாமல் போனது. அடுத்த நிலையில், முதுகு தண்டில் இந்த குறிப்பிட்ட நரம்பு சென்று சேரும் இடத்தில் உள்ள நரம்பை ஊசி போட்டு துாண்டியதில், சில நாட்கள் வலி இல்லாமல் இருந்தது. மீண்டும் வலி இருப்பதாக சொன்னார்.
துாண்டியதில் வலி சரியானதால், 'ஹைப்பர் போலரைசேஷன்' என்ற புதிய முறையில் நிரந்தரமாக வலி இல்லாமல் செய்தோம்.
நரம்பு செல்கள் முதுகு தண்டில் சேரும் இடம் டார்சல் ரூட். இங்கு, இரண்டு நரம்புடனும் ஒரு செல் இருக்கும். அதற்கு, 'கேங்கிலியான்' என்று பெயர்.
இந்த இடத்தில், சீரற்ற இதயத் துடிப்பை சரி செய்ய பேஸ் மேக்கர் பொருத்துவது போன்று, பேட்டரியுடன் இணைந்த கருவியை பொருத்தினோம். ஒவ்வொரு நிமிடமும் நான்கைந்து முறை கரன்ட் ஷாக் கொடுத்து நரம்பு துாண்டப்படும். இதனால், நாளடைவில் வலி இல்லாமல் போய்விடும். இதில், 8, 12, 15 என தேவைக்கு ஏற்ப மின் வோல்ட் இருக்கும்.
இந்த முறையில் நம் நாட்டில் எங்கள் மையத்தில் முதன் முறையாக இந்த முயற்சியை செய்துள்ளோம். கடந்த மூன்று மாதங்களாக நோயாளி வலி இல்லாமல் இருக்கிறார்.
டாக்டர் அப்பாஜி கிருஷ்ணன், முதுகு தண்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை044 - 6115 1111help@apollocancercentres.com