PUBLISHED ON : ஆக 04, 2024

முப்பது வயதிற்கு மேல் தாமதமாக திருமணம் செய்யும் பல பெண்களுக்கு, மன அழுத்தத்துடன் பல்வேறு உடல் பிரச்னைகளும் உள்ளன. இதனால், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரிப்பு போன்ற நவீன முறைகளில் கரு தரிப்பதால், குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பதும் அதிகமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் 40 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தை, 25, 26, 30, 32 வாரங்களில் பிறக்கும் போது, நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. இதனால், பல நாட்கள் என்.ஐ.சி.யூ., எனப்படும் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பல வாரங்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் தாய்ப்பால் சுரப்பதும் பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தாய்ப்பால் வங்கியின் அவசியமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குறை பிரசவத்தில் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை.
இது மாதிரி குழந்தைகளுக்கு புட்டிப்பால் தருவது நல்லதல்ல. அதனால், வேறு தாயிடம் இருந்து தாய்ப்பால் தானமாக பெற்று, அதை கிருமி நீக்கம் செய்து, பாதுகாப்பான முறையில் சேமித்து, குறை பிரசவ குழந்தைகளுக்கு தருவதற்காக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தாய்ப்பால் வங்கி துவக்கியுள்ளோம்.
ஒரு கிலோ, 700 கிராம் உடல் எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் தாய்ப்பால் பெரிய வரம். தன் குழந்தைக்குப் போக எஞ்சியுள்ள தாய்ப்பாலை தானமாக வழங்க பலரும் முன்வரும் நிலையில், வேறு மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டாலும் இலவசமாக தர உள்ளோம்.
டாக்டர் சம்ஹிதா மோதுரி,
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்,
சென்னை
73582 22325