PUBLISHED ON : டிச 29, 2024

குழந்தை பிறந்த ஆறு, -எட்டு மாதங்களுக்குள் முளைக்கத் துவங்கும் பால் பற்கள், இரண்டரை வயது முடியும் போது, மேல் தாடையில் 10, கீழ் தாடையில் 10 என 20 பற்கள் வரும். ஆறரை வயதில் இருந்து 12 வயது வரை பால் பற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும்.
பொதுவாக பிறந்த குழந்தைக்கு பல் இருக்காது. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதோ, பிறந்த 30 நாட்களிலோ ஒன்றிரண்டு பற்கள் இருக்கலாம். இது மிகவும் அரிது.
சில குழந்தைகளுக்கு 1 வயது வரை பால் பற்கள் முளைக்காது; அதன்பின் வர ஆரம்பிக்கும். இதுவும் இயல்பானது தான். மரபியல் காரணிகளால் 3 வயது வரையும் சிலருக்கு பால் பற்கள் முளைக்கலாம்.
பால் பற்கள் விழுந்து விடும். அதனால், இதை பராமரிக்கத் தேவையில்லை என்ற தவறான எண்ணம், குழந்தைகள் நல டாக்டர்கள் உட்பட அனைவரிடமும் உள்ளது. பால் பற்களில் வரும் சொத்தையால்,- எட்டு கோடி குழந்தைகள் உலகம் முழுதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு வயதாகும் போது, மேல், கீழ் தாடையில் தலா நான்கு பற்கள் இருக்கும். பல் சொத்தை இருந்தால் இவை உடைய ஆரம்பிக்கும். இதற்கு பெயர், 'ஈசிசி-எர்லி சைல்டுஹூட் கேரிஸ்!'
கவனிக்காமல் விட்டால், 10 சதவீதமாக இருக்கும் சொத்தை, 2 வயதில் 23 சதவீதமாகும்; 6 வயதில் 50 சதவீதமாகி விடும்.
உடம்பில் நரம்புகளே இல்லாத பகுதி, பல்லின் மேல்புறம் உள்ள எனாமல். சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும் போது அதன் தாக்கம் இல்லாமல் இருப்பதற்கு, இயற்கையே இது போன்ற அமைப்பை தந்துள்ளது.
இதனடியில் இருக்கும் அடுக்கு, 'டென்டி'யில் நிறைய நரம்புகள் இருக்கும். அதன் கீழ் உள்ள 'பல்ப்' என்ற அடுக்கு முழுக்க நரம்புகளால் ஆனது.
பல் சொத்தை குழந்தைக்கு ஏன் வருகிறது?
கர்ப்பத்தின் 12வது வாரத்தில் துவங்கி, பால் பற்கள் அனைத்தும் கருவிலேயே உருவாகி, குழந்தை பிறக்கும் போது, மொத்த பற்களும் ஈறுகளுக்குள் இருக்கும். ஒரு வயதிற்கு பிறகே வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.
என்ன காரணத்தால் எனாமல் பலவீனமாகி, சொத்தை ஏற்படுகிறது என்பது இதுவரை புரியாத ஒன்று.
ஆனால், சொத்தை இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும்.
குழந்தையின் பற்களை பஞ்சு வைத்து துடைத்தால், வெள்ளையாக படிமம் இருப்பது தெரியும். இது தான் எனாமல் பலவீனமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறி.
குழந்தை குடிக்கும் பால் இதில் ஒட்டி, 1 மி.மீ., தடிமனே உள்ள எனாமல் நாளடைவில் உடைந்து விடும். எனாமல் என்ற மேலடுக்கில் பல் சொத்தை இருக்கும் வரை எந்த பாதிப்பும் வராது. எனாமல் உடைந்து, கீழுள்ள பழுப்பு நிற டென்டியில் சூடான, குளிர்ச்சியான பதார்த்தங்கள் படும் போது, 'ஜிவ்' என்ற கூச்ச உணர்வு வரும்.
இதனால், பல் துலக்க முடியாது; கடித்து சாப்பிட முடியாது. குழந்தைக்கு சொல்லவும் தெரியாது.
எப்படி தவிர்ப்பது?
பால், உணவு ஊட்டிய பின், நீரில் சுத்தமான பஞ்சு, வலை துணியை நனைத்து பற்களைத் துடைப்பது, சொத்தை வராமல் தடுக்கும் எளிய வழி. ஒரு வயது குழந்தைகளை பல் டாக்டரிடம் பரிசோதித்தால், பல் சொத்தை இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
சிகிச்சை
மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பற்களில் சொத்தை இருந்தால், புற நோயாளிகள் பிரிவில் மயக்க மருந்து கொடுத்து, ஒரே சமயத்தில் சரி செய்யலாம். ஒரு வாரத்தில் சாப்பிடுவது, பிரஷ் செய்வது இயல்பாகி விடும்.
மயக்க மருந்து தராமல் செய்யும் சிகிச்சையில், 'எஸ்பிஎப்' என்ற திரவ வேதிப்பொருளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவினால், சொத்தை கட்டுப்படும். ஆனால், பால் பல் விழும் வரை கருப்பு நிறத்தில் இருக்கும்.
பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு, எங்கள் மையத்தில் திங்கள் கிழமைகளில் இலவசமாக சிகிச்சை தருகிறோம்.
டாக்டர் எம்.எஸ்.முத்து, தலைவர், குழந்தைகள் பல் சீரமைப்பு பிரிவு, ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை044 - 4592 8000muthumurugan@sriramachandra.edu.in