PUBLISHED ON : ஏப் 06, 2025

ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில், 10 சதவீதம் குறைத்து பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கூறியிருந்தார். உடல் பருமனை அதிகரிப்பதிற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் ஒன்று அதிகப்படியாக பயன்படுத்தும் சமையல் எண்ணெய்.
கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர்களில் தமிழகம் முதலிடம், அடுத்து கேரளா, ஜம்மு - காஷ்மீர். அது போல ஹார்ட் -அட்டாக் பாதிப்பும் நம் மாநிலத்தில் அதிகம்.
இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், ஏதோ ஒன்று தவறாக இருப்பது என்பது புரிகிறது. அந்த ஒன்று உணவுக்கு அடிமையானது. இதனால், உடல் பருமன், இதய நோய்கள் அதிகரிக்கின்றன.
உடல் பருமன் அதிகம் இருப்பதால் சர்க்கரைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், பேட்டி லிவர் எனப்படும் கல்லீரலில் கொழுப்பு, ரத்தக் குழாய், கணையத்திலும் சேருகிறது. சாப்பிடும் முறை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பிரியாணிக்கு என்று ஒரு சில உணவகம் தான் இருந்தது. இன்று, 200க்கும் மேற்பட்ட உணவகங்கள், இது போதாது என்று எந்த தெருவுக்குப் போனாலும் வண்டியில், நடை பாதையில் பெரிய பாத்திரங்களில் வைத்து, 120 ரூபாய் பிரியாணி, அளவில்லாத பிரியாணி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விற்கப்படுகிறது. இது உண்மையில் விஷம்.
அதில் என்ன மாதிரி யான எண்ணெய், மசாலாப் பொருட்கள் சேர்க்கின்றனர் என்றே தெரியாது. ருசியாக இருப்பதால், தினமும் சாப்பிடுகின்றனர். மது, சிகரெட் போன்று, பிரியாணிக்கும் அடிமையாகி விட்டோம். தரமான உணவை உறுதி செய்ய எந்த விதிமுறைகளும், கட்டுப்பாடும் கிடையாது.
ஒரு உணவு தயாரித்து விற்றால், அதில் கலோரி எவ்வளவு, நல்ல, கெட்ட கொழுப்பு எந்த அளவு உள்ளது என்று அரசு கண்காணிப்பதே இல்லை.
பள்ளிகளில் பார்த்தால் பெண் குழந்தைகள் உடல் பருமனோடு வளர்கின்றனர். என்னிடம் பெண் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், குழந்தை சாப்பிடுவதே இல்லை என்பர்.
வயது, உயரத்திற்கு மீறிய உடல் எடையுடன் குழந்தை இருக்கும். சாப்பிடாமல் எப்படி எடை அதிரிக்கும் என்றால், பிசிஓடி, தைராய்டு என்று ஏதாவது பிரச்னை இருக்கலாம் என்று அவர்களே எனக்கு சொல்வர்.
குழந்தை இப்படி இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆரோக்கியம் எப்படி இருக்கும்? ஒரு முறை உடல் எடை அதிகரித்து விட்டால், அதன்பின் நடப்பது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது எதுவும் செய்ய முடியாது.
விடுமுறை வந்தால், பிரியாணி சாப்பிட்டு, சினிமா பார்ப்பது, துாங்குவது என்று இருக்கின்றனர். என்னைக் கேட்டால் இதை தேசியபேரிடர் என்று சொல்வேன்.
கல்லீரல் கொழுப்பு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஒரு காலத்தில், கல்லீரல் செயலிழப்புக்கு மது, ஹெபடைடிஸ் - பி வைரஸ் காரணமாக இருந்தது. இப்போது முதல் காரணம் கல்லீரல் கொழுப்பு.
இன்னொரு அதிர்ச்சியான புள்ளிவிபரம் தருகிறேன். அசைவ உணவே சாப்பிடாத, மதுப் பழக்கம் இல்லாத குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு பிரதானமாக வருகிறது. இவர்களுக்கு, போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருக்கலாம். தேவைக்கு அதிகமாக, ஆரோக்கியமற்ற எண்ணெய் பயன்படுத்தலாம்.
பைப்ரோ ஸ்கேன் பரிசோதனையில், ஆரம்ப நிலையிலேயே கல்லீரல் கொழுப்பைக் கண்டுபிடித்தால், உடல் எடையை குறைப்பதன் வாயிலாகவே சரி செய்யலாம்.
சமையல் எண்ணெயில், கடலை, நல்லெண்ணெய் தவிர, வேறு எதுவும் ஆரோக்கியமானது கிடையாது.
ஜப்பான் நாட்டில் உடல் பருமன் என்பதே கிடையாது. குழந்தைகள் பள்ளியில் தான் சாப்பிட வேண்டும். அந்த நாட்டில் பதப்படுத்திய, சுத்திகரித்த பொருட்களை விற்பதே இல்லை. அவர்கள் ஆரோக்கியமாக மாறும் போது, நம் நாடு, அனைத்துவிதமான பரவாத நோய்களின் தலைநகரமாக மாறி வருகிறது.
டாக்டர் பட்டா ராதாகிருஷ்ணன்,
குடல், இரைப்பை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,
எம்.ஜி.எம்., - மலர் மருத்துவமனை, சென்னை
044 4289 2222info@mgmhealthcare.in