PUBLISHED ON : செப் 18, 2022

துாக்கமின்மை என்பது ஒரு பிரச்னையாக பல காலமாக நம்மிடையே இருந்தாலும், கொரோனா தொற்று பரவலுக்கு பின் அலுவலகம், வீடு இரண்டிலும் தினசரி வேலை ஒழுங்கு முழுவதுமாக மாறி விட்டது. எனவே, 80 சதவீதம் பேருக்கு வாழ்க்கை முறை மாற்றத்தால், துாக்கமின்மை பிரச்னை வருகிறது.
குறிப்பாக, எல்லா நேரமும் ஏதாவது ஒரு வகையில் கம்ப்யூட்டர், மொபைல், லேப் டாப், ஐ பேட் என்று 'ஸ்கிரீன்' பார்ப்பதால், துாக்கம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. வேலை முடிந்ததும் எப்படி கம்ப்யூட்டரை 'ஷட் டவுன்' செய்வது போல, குறிப்பிட்ட நேரத்தில் மூளைக்கும் ஓய்வு தேவை. துாங்குவதற்கு முன் மொபைல் போன் பார்ப்பதால், அதில் தொடர்ந்து மாறும் காட்சிகள், 'புளூ லைட்' மூளையை ஓய்வெடுக்க விடாமல் செய்யும்.துாக்கமின்மைக்கு இன்னொரு முக்கிய காரணம் மன அழுத்தம்.
அதிகாலையில் 2:00, 3:00 மணிக்கெல்லாம் துாக்கம் கலைந்து எழுந்து விடுவர். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் அல்லது மன சோர்வு. அதன் பின் துாங்க வேண்டும் என்று விரும்பினாலும், துாங்க முடியாது; மனம் முழுதும் எண்ணங்கள் வரும். அடுத்த பிரச்னை, 'ஸ்லீப் ஆப்னியா' எனப்படும் துாக்கத்தில் குறட்டை விடுவது. பெரிய அளவில் குறட்டை சத்தம் இருந்தால் தான் பிரச்னை என்று இல்லை. குறட்டை சத்தமே இல்லாமல் கூட ஸ்லீப் ஆப்னியா வரலாம். இப்பிரச்னை இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை கோளாறு, உடல் எடை அதிகரிப்பது என்று பல பிரச்னைகளுடன் நேரடி தொடர்பு உள்ளது.
அவ்வப்போது தலையணையை மூக்கில் வைத்து மூக்கை அழுத்தினால் எப்படி இருக்கும்? அந்த உணர்வு தான் குறட்டை விடும் போது வரும். இவர்கள் துாக்கத்தில் எழுந்திருக்க மாட்டார்கள்; ஆனால், மூளை மட்டும் விழிப்புடன் இருக்கும். மூளை முழு ஓய்வில் இல்லாமல் போனால், அடுத்த நாள் எந்த வேலையும் செய்ய முடியாமல் அயர்ச்சியாக இருக்கும். நிறைய சாப்பிடத் தோன்றும். விளைவு, பல நோய்கள் வருவதற்கு வழி வகை செய்து விடும்.
குறட்டை எதனால் வருகிறது என்பதை கண்டறிந்து, அதை சரி செய்வது முதல் படி. இதற்கென்றே, 'சி - பேப்' என்ற மூக்கு கவசம் உள்ளது. டாக்டரின் ஆலோசனையுடன் பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
பொதுநல மருத்துவர், சென்னை
95000 77678
