PUBLISHED ON : மே 19, 2013

நாள்பட்ட நோய்களின் வரிசையில், ஆஸ்துமாவிற்கு முக்கிய இடம் உண்டு. சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில், சுற்றுச்சூழல் பாதிப்பால், 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரில், ஐந்தில் ஒருவரும், கிராமப்புறங்களில், 10ல் ஒருவரும், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
சாலையில் பறக்கும் புழுதி, சிகரெட் புகை, வாகன மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளின் உடலில் இருந்து உதிரும் ரோமம், கருவாடு, இறால், மீன் போன்ற கடல் உணவுகள், பலவகை வாசனைப் பொருட்கள் மற்றும் தரை விரிப்புகள், திரைசீலைகள், 'ஸ்பான்ச்' வைத்த படுக்கைகள் ஆகியவற்றால், வீட்டில் சேரும் தூசு போன்றவை, நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
இதனால், நம் உடம்பில், 'ஹிஸ்டிமேன்' எனும் வேதிப்பொருள் அளவிற்கு அதிகமாக சுரந்து, நுரையீரலில் உள்ள லட்சக்கணக்கான நுண்ணிய காற்று குழாய்கள் சுருக்கம் அடைந்து, சுவாசக் காற்று வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. நாளடைவில் இது, ஆஸ்துமா நோயாக உருவெடுத்து, ஆண்டுக்கணக்கில் நம்மை அவஸ்தைப்பட வைக்கிறது.
சளி, இருமல், மூச்சு திணறல், 'வீசிங்' போன்றவை இந்நோயின் அறிகுறிகள். சுவாசிக்கும் போது, ஒவ்வொரு முறையும், நம் நுரையீரலுக்குள் செல்லும் காற்றில், 80 சதவீதம், வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு குறைவான அளவு, காற்று வெளியேறினால், ஆஸ்துமா பாதிப்பு உள்ளது என, அர்த்தம்.
இந்த அளவை, 'ஸ்பைரோமெட்ரி' எனும் கருவி மூலம் அறியலாம். அதனடிப்படையில், நுரையீரலுக்கு நேரடியாக செலுத்தும், 'இன்ஹெலர்' மருந்தை தினமும் உட்கொள்வதன் மூலம், ஐந்து முதல், 10 ஆண்டுகளுக்குள், ஆஸ்துமா தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பணி நிமித்தம், தினமும் வெளியில் செல்லும் போது, தூசுக்களில் இருந்து தற்காத்து கொள்ள, முக உறை அணிவது, வீட்டை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது, ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது போன்றவற்றால், ஆஸ்துமாவிற்கு ஆளாவதை தவிர்க்கலாம்.
ஆஸ்துமா, பரம்பரை வியாதி என்பதாலும், உரிய சிகிச்சை மூலம் இந்நோயின் தாக்கம் நாளடைவில் குறைவதாலும், பெரியவர்களைவிட, சிறுவர்கள், ஆஸ்துமாவிற்கு அதிகம் ஆளாகின்றனர்.
டாக்டர் பேராசிரியர் ரங்கநாதன்,
நுரையீரல் துறை,
சென்னை மருத்துவக் கல்லூரி.