இந்தியாவில் ஆறில் ஒருவருக்கு கற்றல் குறைபாடு உள்ளது
இந்தியாவில் ஆறில் ஒருவருக்கு கற்றல் குறைபாடு உள்ளது
PUBLISHED ON : அக் 31, 2019

'டிஸ்லெக்சியா' எனப்படும், கற்றல் குறைபாட்டை எப்படி கண்டுபிடிப்பது?
குழந்தைக்கு பிரச்னை இருக்கிறது என்பதை, ஏழு, 8 வயதில், வகுப்பு ஆசிரியர் தான் கண்டுபிடிக்க முடியும். பேசுவது, விளையாடுவது, பாட்டுப் பாடுவது, நடனம், மொபைல் பயன்படுத்துவது என, எல்லா விஷயத்தையும், குழந்தை சரியாகச் செய்யும். அறிவுத்திறனும் நன்றாக இருக்கும். ஆனால், எழுத்துகளை படிப்பதற்கு மட்டும் சிரமப்படும்.
வாசிப்பதில் என்ன மாதிரியான பிரச்னை வரும்?
ஒன்று, இரண்டு வகுப்பு குழந்தைகள், அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல், எழுத்துகளை வாசிக்க வேண்டும். ஆனால், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, வாசிப்பதில் சிரமம் இருக்கும். தனித்தனியாக எழுத்துகளை வாசிக்க முடியும் குழந்தையால், கோர்வையாக சொல்ல தெரியாது. 'படம்' என்ற சொல்லை வாசிக்கச் சொன்னால், ப... ட... ம்... என, தனித்தனியாக வாசிக்கும்.சில குழந்தைகள், கரும் பலகையை பார்த்து எழுதும் போது, சில எழுத்துகளை விட்டு எழுதுவது, ஆசிரியர் எழுதியதை அப்படியே எழுதாமல், சில வார்த்தைகளை, எழுத்துக்களை விட்டு விடுவது, புத்தகத்தை பார்த்து படிக்கச் சொன்னால், ஒரு பத்தி அல்லது வாக்கியத்தை விட்டு வாசிப்பது என, சிரமப்படுவர்.இதே குழந்தைக்கு, புதிய பாடம் அல்லது புதிய விஷயங்கள் கற்றுக் கொடுத்தால், நன்றாக புரிந்து கொள்வர். அது தொடர்பான கேள்விகள் கேட்டால், புத்திசாலித்தனமாக பதில் வரும். வகுப்பில் கற்றுத் தருவதை நன்றாக புரிந்து கொள்ளும் குழந்தையால், தேர்வில் சரியாக எழுத முடியவில்லை. ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை, தேர்வு நேரத்தில் ஆசிரியரால் கண்டுபிடிக்க இயலும்.
கற்றல் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா?
பெரு நகரங்களில், விழிப்புணர்வு ஓரளவு இருக்கிறது. குறிப்பிட்ட விஷயத்தில், குழந்தை சிரமப்படுகிறது என்பதை கவனித்து, எங்களிடம் அழைத்து வருகின்றனர். கிராமப்புறங்களில், புரிதல் இல்லை. குழந்தை என்ன காரணத்தால் படிக்க சிரமப்படுகிறது என்பதை, அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், எழுத்துகளை படிப்பதில், குழந்தைக்கு பிரச்னை இருக்கிறது என்று சொன்னால், அதை நம்புவதற்கே, பெற்றோருக்கு கடினமாக உள்ளது.
கற்றல் குறைபாடு அதிகரித்து உள்ளதா?
நம் நாட்டில் இதற்கெல்லாம், அதிகாரபூர்வமான புள்ளி விபரங்கள் கிடையாது. ஆனால், பொதுவான ஒரு கணிப்பு, இந்தியாவில், ஆறு குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு, கற்றல் குறைபாடு உள்ளது எனச் சொல்லப்படுகிறது. மேலை நாடுகளில், ஐந்தில் ஒரு குழந்தைக்கு, இந்தப் பிரச்னை உள்ளது.
குறைபாட்டிற்கான காரணம் என்ன?
நரம்பு மண்டல செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம் இது. இப்பிரச்னை வருவதற்கான காரணம் எது என, உறுதியாக சொல்ல முடியவில்லை. கர்ப்ப காலத்தில் தாய்க்கு, சர்க்கரை, தைராய்டு, வலிப்பு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும் மருந்துகள் போன்றவற்றால், குழந்தை பாதிக்கப்படலாம்.குழந்தை பிறக்கும் போது, 'பிளசென்டா' எனப்படும் நஞ்சுக் கொடி, குழந்தையின் கழுத்தை சுற்றி இருப்பது; குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போவது; 24 மணி நேரத்திற்கும் மேல், தாய் பிரசவ வலியில் இருப்பது போன்ற பல காரணங்களாலும் வரலாம் என்பது கணிப்பு. மரபியல் காரணங்களால் சிலர் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.
ஹரிணி ராமானுஜம்
தலைமை செயல் அதிகாரி,
மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன்,
சென்னை.
044 - 2815 7908; 044 - 2815 6697