தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மது தவறு என்று தானாக உணருபவர் மட்டுமே அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்

மது தவறு என்று தானாக உணருபவர் மட்டுமே அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்

மது தவறு என்று தானாக உணருபவர் மட்டுமே அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியும்


PUBLISHED ON : பிப் 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மது குடிப்பதை பலர், ஒரு விளையாட்டாகவே ஆரம்பிக்கின்றனர். மது குடிக்க பழகிய அனைவரும், மதுவிற்கு அடிமை ஆகி விடுவதில்லை. விளையாட்டாக ஆரம்பித்த, 10 பேரில், இரண்டு பேர், அதன் வாசனையே பிடிக்காமல், முதல் முயற்சியிலேயே விட்டு விடுகின்றனர்.மீதி எட்டு பேரில், நான்கைந்து நபர்கள் கட்டுப்பாடுடன், விசேஷம், நண்பர்களுடன் சந்திப்பு என்று என்றோ ஒரு நாள் குடிக்கின்றனர். மீதி உள்ளவர்கள் தான், மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர்.

ஏன் அடிமையாகின்றனர்?

இதற்கு முக்கிய காரணம், மூளை, கல்லீரல் சுரக்கும் சில, 'என்சைம்கள்!' இவை மீண்டும் மீண்டும், மது குடிக்க வேண்டும் என்ற உணர்வைத் தருகின்றன. இதனால், சிலர் அடிமையாகி விடுகின்றனர்.எடுத்தவுடனேயே, பாட்டில் பாட்டிலாக யாரும் குடிப்பதில்லை. முதலில் ஒரு பெக், இரண்டு பெக் என்று குடிக்கும் போது, எதுவுமே சாதிக்காவிட்டாலும், எல்லாவற்றையும் சாதித்து விட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது. இது, போலியான உணர்வு தான் என்றாலும், மனம் அதில் லயத்து விடுகிறது.நண்பர்களுடன் சேர்ந்து, வார விடுமுறையில், ஒரு நாள் மட்டும் மது குடித்த பழக்கம், அதன்பின் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று போய், கடைசியில் தினசரி வாடிக்கையாகி விடுகிறது.அது போல், மதுவின் அளவும், 30 மில்லி என்று ஆரம்பித்து, இதில் கிடைத்த மகிழ்ச்சி அதே அளவை தினமும் தொடரும் போது கிடைக்காததால், 60 மில்லி, 120 மில்லி என்று, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

பாதிப்புகள் எப்படி இருக்கும்?

மது குடித்தவுடன், இரைப்பையில் இருந்து நேராக கல்லீரலுக்குச் சென்று, ரத்தத்தில் கலந்து, மூளைக்குச் செல்லும். ஒவ்வொரு முறை குடிக்கும் மதுவும், முதலில் கல்லீரலைத் தான் பாதிக்கும். தொடர்ந்து மது குடிப்பதால், கல்லீரல் திசுக்கள் செயலிழந்து, 'சிரோசிஸ்' என்ற நிலை வரும். இதற்கு அடுத்து, கேன்சர் ஏற்படலாம்.கல்லீரல் செயலிழக்க துவங்கும் போது, மன ரீதியில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மது, உடல் நலத்தை பாதிக்கிறது. இப்பழக்கம் தவறு என்று தெரியாமல், யாரும் இல்லை. ஆனால், குடிக்காமல் இருக்க முடிவதில்லை.இப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மதுவை நிறுத்தினால், மனதில் ஒரு பயம், பதட்டம், படபடப்பு, ஓய்வில்லாத உணர்வு ஏற்படும். மது குடித்ததும், மனது அமைதியாக இருக்கும்.மது என்ற அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியவர்களால், அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமான விஷயம்.மதுவின் அளவு அதிகமாகும் போது, உடல் ரீதியிலும், மன ரீதியிலும், மதுவை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். மதுவை நிறுத்தியதும், படபடப்பு, பயம், கை நடுக்கம் போன்ற உணர்வுகள் வரும். மது குடித்த உடன் இவையெல்லாம் சரியாகி, அடுத்த ஆறு - எட்டு மணி நேரத்திற்கு, இயல்பாக இருக்க முடியும்.

அதன் தாக்கம் குறைந்ததும், மீண்டும் குடிக்கத் தோன்றும். இது, உடல் ரீதியிலான சார்பு. மன ரீதியிலான சார்பு என்பது, நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல், 'பக்கத்து வீட்டில் பாட்டி இறந்துட்டாங்க, எதிர் வீட்டில் கல்யாணம், தனிமையில் இருக்கிறேன்' என்று, காரணத்தை கண்டுபிடித்து, காரணமே இல்லாமல் குடிப்பது. நண்பர்களுடன் சென்று குடிக்கப் பழகியது போய், தன்னிச்சையாக குடிக்க வேண்டும் என்ற சார்பு நிலைக்கு, நாளடைவில் வந்து விடுகின்றனர்.இது, மூளை, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மது குடிக்காவிட்டால், யாரோ பேசுவது போல் ஒரு பய உணர்வு உட்பட, பலவிதமான மனநல பாதிப்புகளும் ஏற்படும்.சமூகத்தில் எல்லா நிலையில் இருப்பவர்களும், எந்த வேறுபாடும் இல்லாமல், இப்பழக்கத்திற்கு உள்ளாகின்றனர். மதுவிற்கு அடிமையானால், மற்ற விஷயங்களில் முக்கியத்துவம் போய் விடும்.மனைவி, குழந்தைகள் என்று, குடும்பத்தின் முக்கியத்துவம் குறைய ஆரம்பிக்கும்.சமயங்களில், குடும்பத்தை பிரிந்து, தனியே வந்து விடுபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒருவர், கையெல்லாம் புண்ணாக வந்தார்; தண்ணீர் என்று நினைத்து, எண்ணெய் சட்டிக்குள் கையை விட்டு விட்டார். இப்படி, நிதானமே இல்லாமல் போகிறவர்களும் உண்டு.ஒரு கட்டத்தில், மனைவியை அடித்து, உதைத்து, அவர்களிடம் இருக்கும் நகைகளை பிடுங்கிச் சென்று குடிப்பவர்கள் உள்ளனர்.மனைவியின் தாலியை பிடுங்குகிறோம் என்ற உணர்வே இல்லாமல், மது வாங்க பணம் வேண்டும் என்பதற்காக, தங்களுடைய இயல்பான குணத்தை எல்லாம் மறந்து, எந்த நிலைக்கும் செல்ல தயாராகி விடுவர்.மது குடிப்பவரின் உடல், மனம் என்று முதலில் பாதித்து அடுத்தது, அவர்களின் குடும்பத்தை பாதிக்கிறது.முதலில் மனைவி, குழந்தைகளை பாதிக்கும். அதன் பின், மற்ற உறவுகள், குடும்ப பொருளாதாரம் என்று படிப்படியாக, அனைத்தும் நிலை குலையும்.ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால், பாதிப்படைவது பெண்கள் தான். மன அழுத்தம் உட்பட பல மனப் பிரச்னைகளுடன், மருத்துவ ஆலோசனைக்கு வருகின்றனர். பெண்கள், காரணத்தை விசாரித்தால், கடைசியில் கணவனின் மது பழக்கம் தான், மனைவியின் அத்தனை மன பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

சந்தேகம்

எல்லா நேரமும், தன்னை சந்தேகத்துடனே கணவன் பார்ப்பதாக, பல பெண்கள் கூறுவர். இதற்குக் காரணம், மதுப்பழக்கம் அதிகமாகும் போது, ஆண்மை தன்மை பாதிக்கும். தன்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிய வில்லை எனும் போது, மனைவியின் மேல் சந்தேகம் வருகிறது.மனைவியின் எல்லா நடவடிக்கைகளையும், சந்தேகத்துடனேயே பார்ப்பர். மனைவி இயல்பாக அணியும் உடையின் அதே நிறத்தில், வேறு ஒரு ஆண் சட்டை போட்டிருந்தால், அவனுக்காகவே தன் மனைவியும் உடை அணிந்திருப்பதாக சந்தேகப்படுவர்.என்னிடம் சிகிச்சைக்கு வந்தவர், நான் படுக்கை அறைக்கு சென்றதும், கொசுவர்த்தி சுருளை மனைவி பற்ற வைப்பதாகவும், அந்த புகையில் தான் உறங்கி விடுவதாகவும், இடைப்பட்ட நேரத்தில், தன் மனைவி வேறு ஆண்களுடன் உறவு கொள்வதாகவும் கூறினார்.அவர் மனைவி, 'வீட்டில் ஒரே கொசு தொல்லை. குழந்தைகள் உறங்க சிரமப்படுகின்றனர். அதற்காக நான் செய்வதை எல்லாம், இப்படி சந்தேகிக்கிறார்' என்றார்.

எப்படி மீள்வது?

மதுவுக்கு அடிமையானவர்கள், இதுவரையிலும் பழகியிருந்த சூழ்நிலையை, முதலில் மாற்ற வேண்டும். அதே சூழலில் இருந்தால், மதுவை தவிர்ப்பது சிரமம். எல்லா இடத்திலும் மது கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்கிறான் என்று சொல்வது சரியில்லை.காபி குடிக்கலாம் என்று வெளியில் செல்லும் மது பிரியர்கள், மது கடை கண்ணில் பட்டதும், அங்கு தான் செல்வர்.முறையான மருத்துவ சிகிச்சை எடுத்தால், மதுவின் மீதே வெறுப்புணர்வை உண்டு பண்ண முடியும். எதிர்காலத்தைப் பற்றிய பதட்டம், பயம் இருப்பவர்கள், தன்னை விட்டு எல்லாமே போய் விட்டதாக நினைத்து, மதுவிற்கு அடிமையானவர்கள்.இது தவறு என்று தானாகவே உணருபவர்கள் மட்டுமே, இப்பழக்கத்தில் இருந்து வெளியில் வர முடியும்.மதுவிற்கு பழகிய ஒருவனை, கடலின் நடுவில், 300 நாட்கள் வைத்திருந்தால், அங்கு மது கிடைக்காது என்பதால், குடிக்க மாட்டான். ஆனால், அவன் மனதில், குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 301வது நாள் தரைக்கு வந்ததும், மதுக்கடையை தேடித் தான் செல்வான்.'ஆல்கஹால்' பாதிப்பை உடலில் இருந்து முற்றிலும் நீக்க, மருந்துகள் உள்ளன. அதன்பின், இதனால் ஏற்பட்ட உடல், மன சிக்கல்களை நினைத்து, இனி மதுவை தொட போவதில்லை என்று உறுதியாக இருந்தால், குடிக்காததால் வரும் கை நடுக்கம் போன்ற அறிகுறிகளை எல்லாம் சரி செய்யலாம்.இதுவரையிலும் இருந்த சூழ்நிலையில் இருந்து மாறி, புதிய சூழலில் ஆறு மாதங்கள் இருந்தாலே, இது சாத்தியம்.

டாக்டர் ஆர்.சத்யநாதன்

மனநல மருத்துவர்,

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலை கழகம்,

சென்னை.

98410 19910

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us