PUBLISHED ON : டிச 16, 2015
பெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து உருவாவது தான் கரு. அந்த கரு சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி, கர்ப்பப்பையை நிறைத்தால், அதை, 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' என்கிறோம். அதாவது கட்டி மாதிரியான தோற்றம்; ஆனால் புற்றுநோயில்லாத கட்டி. முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், இரு வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது. இன்னொன்று பகுதி மட்டும்.
முழுமையான முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், கருவே இருக்காது. நஞ்சு மட்டும் அசாதாரணமாக இருக்கும். பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், ஓர் அசாதாரண கரு உருவாகியிருக்கும். ஆனால் அது பிழைக்காது. நஞ்சிலும் கொஞ்சம் சாதாரணமானதும், கொஞ்சம் அசாதாரணமானதுமான திசுக்கள் காணப்படும். முத்துப்பிள்ளை கர்ப்பம் ஏற்பட முதற்காரணம், மரபணுக் கோளாறுகளே. சாதாரண மனித செல்களில், அம்மாவிடமிருந்து ஒன்றும், அப்பாவிடமிருந்து ஒன்றுமாக, ௨௩ ஜோடி குரோமோசோம்கள் இருக்கும்.
முழுமையான முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், ௨௩ ஜோடிகளுமே அப்பாவிடமிருந்து வந்ததாகவும், அம்மாவுடைய குரோமோசோம்கள் செயலிழந்தவையாகவும் இருக்கும். அதுவே, பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், அப்பாவிடமிருந்து, ௪௬ குரோமோசோம்களும், அம்மாவிடமிருந்து, ௨௩ குரோமோசோம்களாகவும், மொத்தம், ௬௯ குரோமோசோம்கள் இருக்கும். ௩௫ வயதுக்கு மேல் கருத்தரிப்போருக்கு, முத்துப்பிள்ளை கர்ப்பம் ஆக, இருமடங்கு வாய்ப்புகள் அதிகம். ௪௦ வயதுக்கு மேல், ஐந்து மடங்கு வாய்ப்பு அதிகம்.
முதலில் ஒரு முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்தால், அடுத்த கர்ப்பமும் அப்படியே உருவாக, ௧.௨ முதல் ௧.௪ சதவீதம் வரை வாய்ப்பு உண்டு. அதுவே, இருமுறை முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்தால், மூன்றாவது கர்ப்பமும் அப்படியே நிகழ, ௨௦ சதவீதம் வாய்ப்புண்டு.
எஸ்.ராஜஸ்ரீ, மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு நிபுணர், சென்னை.

