PUBLISHED ON : ஜூலை 24, 2016

முத்துக்களை கொண்ட மாதுளை, பசியை தூண்டி, உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. மாதுளம் மொட்டுக்களை சேகரித்து, வெயிலில்
உலர்த்தி பொடி செய்து, வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து, வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கும்.
மாதுளம் பூக்களை மைய அரைத்து, இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். வடிகட்டிய பின், சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து விழுங்க வேண்டும். இதனால், தொண்டை கரகரப்பு, தொண்டை ரணம் போன்றவை குணமாகும். தினமும் காலை, நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று, பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால், முடி ஏராளமாக உதிரும்; இதை, சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.
புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து, மூன்று டீஸ்பூன் சாறு எடுத்து, தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். மூன்று டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்து, விழுதை, தலையில் இட்டு அலச வேண்டும். தொடர்ந்து, 10 நாட்கள், இப்படி குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, வளர ஆரம்பிக்கும்.
மாதுளை சாற்றை, தொடர்ந்து, 40 நாட்கள் அருந்தி வந்தால், பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும்.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும், வைரஸ் கிருமிகளை, மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் சிறப்பிடம் வகிக்கிறது. இனிப்பு மாதுளம் பழத்தை சாப்பிட்டால், இருதயத்துக்கும், மூளைக்கும் சக்தி கிடைக்கிறது. பித்தத்தை போக்கி, இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால், வயிற்று கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எவ்வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் பழச்சாற்றில், தேன் கலந்து, காலை ஆகாரத்துக்கு பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்துக்கு பின், உடல் ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும்; புதிய ரத்தம் உற்பத்தியாகும். செரிமானத் திறன் குறைந்தவர்கள், அடிக்கடி மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக உடல் மற்றும் மன உழைப்பால், உடற்சூடும் பித்தமும் கூடி வாந்தி, விக்கல், வாய் நீர் சுரப்பு, குமட்டல், மயக்கம், காதடைப்பு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், புளியேப்பம் போன்ற தொல்லைகளால் அவதிப்படுவோர், தொடர்ந்து உண்ண, முழுவதும் குணமடையலாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில், நிச்சயமாக மாதுளைப் பழம் இருக்க வேண்டும்.
ஏனென்றால், பல குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். இதுபோன்ற சமயங்களில், மாதுளை பழத்தை கொடுத்தால், அதன் ருசி, அவர்களுக்கு பிடித்துப் போகும். வயிறு நிறைந்த திருப்தியில், குழந்தைகளும் அடுத்த வேலைக்கு பயணிப்பர். பெற்றோருக்கும் நிம்மதி பிறக்கும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும், எண்ணெய் பதார்த்தங்களை கொடுப்பதை விட்டு, இதுபோன்ற பழங்களை கொடுத்தால், அவர்கள் மகிழ்வர்.
