PUBLISHED ON : ஜூன் 02, 2020

நமக்கெல்லாம் இந்த, 'லாக் டவுன்' நிலைமை இயல்பாக ஆவதற்கு, சில நாட்கள் பிடித்தது போன்று, 'ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம்' போன்ற பாதிப்புகள் இருக்கும் சிறப்பு குழந்தைகளுக்கும், சில நாட்கள் ஆகும். காரணம், சிறப்பு குழந்தைகளுக்கு எப்போதும், தினசரி ஒரு ஒழுங்குமுறை உள்ளது. காலையில் எழுந்து, குளித்து தயாராகி, தெரபி மையம் அல்லது அவர்களுக்கான பள்ளிக்கு செல்வர்; ஒவ்வொரு சிறப்பு குழந்தைக்கும், அதன் தேவைக்கு ஏற்ப, பயிற்சிகள் இருக்கும்.
ஆட்டிசம்
குழந்தை'செரப்ரல் பால்சி' பாதித்த குழந்தைகளுக்கு, பேச்சு பயிற்சி, 'பிசியோ தெரபி' உட்பட, பல பயிற்சிகள் இருக்கும். இந்த குழந்தைகள், இயல்பிலேயே புத்திசாலிகளாக இருப்பர்.கற்றலில் குறைபாடு உள்ள, 'டிஸ்லெக்சியா' குழந்தைகள், நன்கு பேசுவர்: 'துறுதுறு' என இருப்பர்; ஆனால், சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் சிரமப்படுவர். அவ்வளவு தான். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் ஓரளவு பேசுவர்; நாம் சொல்வதை அவர்களுக்கு புரிய வைக்கவும் முடியும்.இந்த குழந்தைகளை, 'லாக் டவுன்' நாட்களில் சமாளித்து விடலாம். ஆனால், ஆட்டிசம் குழந்தைகளை சமாளிப்பது, சற்று சிரமம். தினசரி ஒழுங்கு முறைக்கு பழகி விட்டால், அதிலிருந்து வெளியில் வரமாட்டார்கள்; 'இப்படித் தான் இருப்பேன்' என்று பிடிவாதமாக இருப்பர்.
தினசரி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், அதன் தாக்கம், இக்குழந்தைகளிடம் அதிகம் இருக்கும்; அவர்களால், அவ்வளவு எளிதாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது.இதுவரை, அவர்கள் பழகிய தினசரி செயல்களை போன்றே, வீட்டிலும் செய்து தர வேண்டும். தெரபி மையத்தில், அவர்களுக்கு தேவையான பொருட்கள் எப்படி இருக்குமோ, அதைப் போன்றோ அல்லது அதே மாதிரியோ வீட்டிலும் தயார் செய்ய வேண்டும். உதாரணமாக, நினைவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிக்கு, மையத்தில் இருக்கும் மாதிரி போன்று இருக்க வேண்டும் என்ப தில்லை; அப்படி எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், அதற்கு தகுந்தாற்போல், பல பொருட்களை, ஒரு அட்டை பெட்டியில் போட்டு, அதில் என்ன இருக்கிறது என்று, சொல்ல சொல்லலாம்; எழுதத் தெரிந்தால், எழுதி காட்டச் சொல்லலாம்.
பொதுவாக, ஆட்டிசம் குழந்தைகளை சமுதாயம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது; வெகு சிலரே அவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வர்; பலரும் அவர்களை வேற்று கிரக வாசிகள் போன்று தான் பார்ப்பர்.
'லாக் டவுன்'
ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் சொல்வது எளிதில் புரியாது. 'பள்ளி வகுப்புகள் இல்லை' என்று சொன்னாலும், புரியாமல் திரும்ப திரும்ப கேட்பர். சில சமயங்களில், மணிக்கு ஒரு முறை கேட்டதையே கேட்பர். நாம் எரிச்சல் படக் கூடாது. காரணம், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களை தயார்படுத்திக் கொள்ள இப்படி கேட்கின்றனர். எதிர்பாராமல் ஏற்படும் மாற்றத்தை, ஆட்டிசம் குழந்தைகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.
தினசரி அலுவலகம், பள்ளி, கல்லுாரி சென்று வந்த நாமே, இந்த, 'லாக் டவுன்' எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகிறோம்.அதுபோல, 'எப்போது பள்ளிக்கு போகலாம்' என்று ஆட்டிசம் குழந்தை கேட்டாலும், 'போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சொல்கிறேன்' என்று சொல்ல வேண்டுமே தவிர, '10 நாளில் போகலாம், 1ம் தேதி போகலாம்' என்று குறிப்பிட்டு சொல்வது கூடாது.அரசே, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் சொல்கின்றனர். '15ம் தேதி முடிந்து விடும்' என்று சொன்னால், அவர்கள், 16ம் தேதி பள்ளிக்கு செல்ல தயாராகி விடுவர். அவர்களின் அறிவாற்றலை, சரியாக அவர்களின் செயலுக்கு உபயோகிப்பர். ஆட்டிசம் குழந்தைகள் என்றில்லை... எல்லா சிறப்பு குழந்தைகளும், நம்மை போல, இறந்த காலத்தை நினைத்து வருந்தி, எதிர்காலத்தை பற்றி பயத்துடன் இருக்க மாட்டார்கள்; நிகழ்காலத்தில், அந்த நிமிடத்தில், வாழ்பவர்கள்; அதனால், தினமும் காலையில் எழுந்ததும், குளித்து தயாராகி விடுவர்.
நாம் தான் புரிந்து கொள்ளும் வரை, பொறுமையாக விளக்க வேண்டும். இந்த லாக் டவுன் நாட்களில், சராசரி குழந்தைக்கு நடத்தையில் சிக்கல்கள் உள்ளன. சிறப்பு குழந்தையோ, சாதாரண குழந்தையோ, அவர்களுடன் முழு ஈடுபாட்டுடன், தினமும் சிறிது நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டும்.
'கார்ட்டூன்' சேனல்
அவர்களுக்கு பிடித்த விஷயங்களை, அவர்களுடன் சேர்ந்து ரசிக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு, 'கார்ட்டூன்' சேனல் பார்க்க பிடிக்கும்; பீட்சா, பர்கர் சாப்பிட விருப்பம் இருக்கும்; வீட்டிலேயே செய்து தரலாம்.இதற்காக மெனக்கட வேண்டாம். தோசை மாவை ஊத்தப்பம் போல ஊற்றி, உள்ளே காய்கறி, சீஸ் வைத்து, அழகாக வெட்டி தரலாம். சிறிய தொட்டி வாங்கி கொடுத்து, மண்ணை போட்டு செடி வளர்க்க பழக்கலாம்.குழந்தையுடன் சினேகமாக பழகி விட்டால், நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பர். குழந்தையுடன் நாம் செலவிடும் நேரத்தை, அவர்களை போலவே மாறி, முழு ஈடுபாட்டுடன் செலவிட்டால், இந்த உலகத்தில் எதுவும் சாத்தியம்.
டாக்டர் வி.தேவகி,
பொது நல மருத்துவர்,
சென்னை.
9841263048
