PUBLISHED ON : ஏப் 20, 2025

மூட்டு முடக்குவாதம் பெரும்பாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு, ஹார்மோன் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூட்டு முடக்குவாதத்தில், 'கவுட்' என்ற ஒரு வகை, ஆண்களை அதிகம் பாதிக்கிறது.
வாழ்வியல் முறைகளால் உணவுப் பழக்கம் மாறிவிட்டது. பாதுகாக்கப்பட்ட உணவு என்ற பெயரில், சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவு சாப்பிடுகிறோம்.
இவை நீண்ட காலம் கெட்டு போகாமல் இருப்பதற்காக, பலவிதமான வேதிப் பொருட்களை இவற்றில் சேர்க்கின்றனர்.
இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தாலும், இன்றைய வாழ்க்கை சூழல் நம்மை அப்படி மாற்றி விட்டது. இன்னும் சில ஆண்டுகளில், வீடுகளில் சமையலறையே இல்லாமல் போனாலும் வியப்பதற்கில்லை.
தொடர்ந்து இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால், வாத நோய் மட்டுமல்ல; மாரடைப்பு, பக்கவாதம் என்று பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புரதம் மட்டுமே உணவில் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற தவறான அபிப்ராயமும் இன்றைய இளம் வயதினரிடம் இருக்கிறது. இதனால் ஏற்படும் மூட்டு முடக்குவாத பிரச்னை, ஆண்கள் மத்தியில் பொதுவாக உள்ளது. இதற்கு,'கவுட்' என்று பெயர்.
தேவைக்கு அதிகமாக சாப்பிடும் புரதம் சிறுநீரில் வெளியேறும் போது, ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகும். இது, மூட்டுகளில் படியும் பிரச்னை தான் கவுட். பெருவிரல், மூட்டுகள் என்று உடலின் கீழ் பகுதியில், வெப்பம் அதிகம் தாக்காத மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, தீவிரமான வலியை ஏற்படுத்தும்.
அதிக அளவில் புரதம் சாப்பிடுவதை தவிர, வெளியிடங்களில் சாப்பிடுவது, 'பிரக்டோஸ்' என்ற செயற்கை சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்துவது, செயற்கை சுவையூட்டிகள் சேர்த்த உணவுகள் சாப்பிடுவதாலும், பீர் உட்பட மது பானங்கள் அதிகம் அருந்துவதாலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகமாகலாம்.
இப்படி பிரச்னை உள்ளவர்கள், இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். சைவ உணவுகள் மட்டும் சாப்பிட்டு, யூரிக் அமிலத்தின் அளவு கட்டுக்குள் வந்த பின், வாரத்திற்கு ஒரு முறை கருவாடு போன்ற பதப்படுத்திய மாமிசங்களை தவிர்த்து, மற்றவற்றை சாப்பிடலாம்.
உணவு சாப்பிடும் போது, நம் உடலுக்கு எந்த அளவு உணவு தேவை என்பதும், அந்த உணவு நம் உடம்பிற்கு ஒத்துக் கொள்கிறதா என்பதும் தெரிந்து சாப்பிட வேண்டும்.
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி,
மூட்டு முடக்குவாத சிறப்பு மருத்துவர்,
மீனாட்சி மருத்துவமனை, சென்னை
044 - 4293 8938
drvk56@gmail.com

