தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'சோரியாசிஸ்' தீர்க்கக்கூடிய நோய்

'சோரியாசிஸ்' தீர்க்கக்கூடிய நோய்

'சோரியாசிஸ்' தீர்க்கக்கூடிய நோய்


PUBLISHED ON : டிச 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோரியாசிஸ் நோய் எப்படி உருவாகிறது?

தோல் செல்கள் 28 நாட்களுக்கு ஒரு முறை இயல்பான முறையில் புதியதாக தோன்றி மறையும் தன்மை கொண்டது. இயற்கைக்கு மாறாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தோன்றுவதால் பழைய தோல் செதிலாக உரியத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் தோலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, நுண்ணிய ரத்த குழாய்கள் தளர்ந்து, விரிவடைந்து, வீங்க ஆரம்பிக்கின்றன.

இதனால் கடினமான, நிறமற்ற, பெரிய, நெய்ப்புத் தன்மையுடைய, வித்தியாசமான தோல் செல்கள் சோரியாசிஸ் நோயில் உண்டாகின்றன. உடலின் வளர்சிதை மாற்றம் வேறுபாட்டினால் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகரிக்கவோ அல்லது சிதைவடையவோ செய்கின்றன. இதனால் சோரியாசிஸ் உள்ளவர்களுக்கு உயிரிழந்த தோல் செல்கள் அதிகரித்து செதில்களாக மாறுகின்றன.

சோரியாசிஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

பெரும்பாலும் சோரியாசிஸ் முழங்கை மற்றும் முழங்காலுக்கு கீழும், தலையிலும் அதிகம் தோன்றும். சோரியாசிஸ் உள்ள தோல் பகுதி வறட்சியாக காணப்படும். பெரிய, வட்ட வடிவிலான செதில்களே பெருமளவு காணப்படும். சாதாரண நிலையில் சோரியாசிஸ் நோயில் அரிப்பு இருப்பதில்லை. ஆனால் நோய் தீவிரமடையும் போதோ, குணமடையத் தொடங்கும் பொழுதோ, கிருமிகளால் பாதிக்கப்படும் போதோ கடுமையான அரிப்பு ஏற்படும்.

சோரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட வட்ட வடிவ தோல் உட்புறம் ஆறி இயற்கையான தோல் உண்டாகிறது. ஆனால் அதேநேரம் வட்டத்தின் புறப்பகுதிகளில் செதில்கள் அதிகமாகி நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சோரியாசிஸ் உள்ள இடங்களில் வெடிப்புகளும் அவற்றில் வலியும், எரிச்சலும் உண்டாகிறது. சோரியாசிஸ் நோயில் நகம் பாதிக்கப்பட்டு, நகத்தின் இடைவெளிப் பகுதிகளில் செதில் துாள்கள் கல் போன்று இறுகி காணப்படுகின்றன. உள்ளங்கால்களை விட உள்ளங்கை பகுதிகள் சோரியாசிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படைகின்றன. உடலின் ஒரு பக்கத்தில் எங்கெங்கு செதில்கள் உள்ளனவோ, அதே போல உடலின் மறு பக்கத்திலும் அதே இடங்களில் செதில்கள் காணப்படுகின்றன.

யாரை சோரியாசிஸ் அதிகம் பாதிக்கிறது?

நுாறு பேருக்கு இரண்டு பேர் சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதம் தற்சமயம் நுாறு பேருக்கு ஆறு பேர் என அதிகரித்துள்ளது. பெரும்பாலும் 15 முதல் 30 வயது உள்ளவர்களை அதிகளவில் தாக்குகிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் திடீரென சோரியாசிஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆண்கள் 60 சதவீதம் பேரும், பெண்கள் 40 சதவீதம் பேரும் சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருகின்றனர்.

சோரியாசிஸ் நோயை அறிவது எப்படி?

பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற குருக்கள் சிறிய மற்றும் பெரிய தடிப்புகள் வெளிர்நிற மெழுகு போன்ற செதில்கள் சோரியாசிஸ் நோயில் தோன்றி உதிரத் தொடங்குகின்றன. செதில்களை சொறிந்து பிய்த்து எரியும் போது செதில்கள் இருந்த இடத்தில் ஊசித் துளையளவு ரத்தக்கசிவு ஏற்படும். தோலில் திடீர், திடீரென என அரிப்பு, தடிப்பு மற்றும் சிவப்புநிற புள்ளிகள் தோன்றலாம். அதிக அழுத்தம் ஏற்படக்கூடிய இடங்கள் இறுக்கமான பகுதிகளில் சோரியாசிஸ் அதிகமாகலாம். சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேருக்கு கை மற்றும் கால் நகங்கள் சொத்தையாக தொடங்குகின்றன. சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேருக்கு மூட்டுகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டு நடக்க மற்றும் வேலை செய்ய இயலாமை ஏற்படுகிறது.

சோரியாசிஸ் நோயை குணப்படுத்த முடியுமா?

நீண்ட நாள் சிகிச்சை, உணவுக்கட்டுப்பாடு மற்றும் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் நோயை கட்டுப்படுத்த முடியும். நீண்ட நாட்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சோரியாசிஸ் நிச்சயமாக குணமாகும். செதில்கள் முழுவதும் மறைந்து தோலின் கருப்பு அல்லது சிவப்பு தழும்புகள் மாறி இயற்கையான நிறம் வரும் வரை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு கால அளவு சிகிச்சை தேவைப்படலாம். நோயின் தன்மை, நோயாளியின் வேலை, மனதிடம், உடல்வாகு, நோய் எதிர்ப்பு சக்தி, ஆகியவற்றை பொறுத்து நோய் குணமாகும். கால அளவு கூடவோ, குறையவோ ஆகலாம். நோயின் மறுதாக்குதல் வரும் வரை காத்திருக்காமல் தொடர் சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

- சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

மதுரை. 98421 67567.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us