PUBLISHED ON : பிப் 24, 2016

கருவில் உள்ள குழந்தை முதல் முதியவர் வரை, மனநல பாதிப்பு களையும், அதற்கான தீர்வுகளையும் விளக்கி வருகிறார், மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், 5 முதல், 14 வயது வரையிலான வளர் இளம் பருவத்தினர். குழந்தைகள் வளரும் போது, ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொரு விஷயம் பிரதானமாக இருக்கும். தற்போதைய தொழில்நுட்ப உலகில், எந்த நேரமும், மொபைல் போனும் கையுமாகத் தான் குழந்தைகள் இருக்கின்றனர். 'லேட்டஸ்ட் மொபைல் போன் எது சந்தைக்கு வந்தாலும், என் குழந்தைக்கு தெரிஞ்சிடும். நாங்களே, குழந்தைகிட்ட தான் என்ன மாடல் வாங்கலான்னு கேட்போம்' என்று, பெருமையாக
பல பெற்றோர் கூறுவர். சமீபத்தில், பிரபல நடிகரின் மனைவி கூட, தன் இரண்டரை வயது பேத்தியைப் பற்றி, 'லேப்டாப்'பை அவள் கையாளும் விதம் குறித்து பெருமையாகவும், கவலையுடனும் பேசியிருந்தார். இது, அவசியம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 'டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன், ஐ-பேட்'டில், எந்த நேரமும், விளையாடும் குழந்தைகளின் மூளை நெட்வொர்க், ஒரே மாதிரியாக மாறி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேல், இது போன்று தொழில்நுட்பக் கருவிகளோடு இருந்தால், நிறைய எதிர்மறை எண்ணங்கள் மனதில் வந்துவிடும். 'டிவி' பார்த்தபடி குழந்தைக்கு, சாப்பாடு தருவதைக் கூட தவிர்க்க வேண்டும். வளர் இளம் பருவத்தில், 'நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி' என்று தகவல் தொழில்நுட்பக் கருவிகளோடே குழந்தையை வளர்த்தால், யாரோடும் எதையும் பகிர்ந்து கொள்ளாமல், தனிமையில் இருப்பது, அடம்பிடிப்பது போன்ற எதிர்மறை குணங்கள் தான் குழந்தையிடம் வளரும். தானாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் வயதில், பல பிரச்னைகளுக்கு குழந்தை ஆளாக நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.