என் வயது 60. சமீபத்தில் என்னுடைய இரண்டு கண்களிலும் கண்புரை - 'கேட்ராக்ட்' அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன், கண் தானம் செய்ய விரும்பி, குறிப்பிட்ட மருத்துவமனையில் பதிவும் செய்துள்ளேன். என் கண்கள் ஆரோக்கியமானதுதானா? கண் தானம் செய்யலாமா என்ற சந்தேகம் வருகிறது. கேட்ராக்ட் தவிர, கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர் கண் தானம் செய்யலாமா என்று விளக்குங்களேன்?
ம.நாராயணன், விளாத்திகுளம், தூத்துக்குடி மாவட்டம்
கண்களில் உள்ள, லென்சில் இயற்கையிலேயே ஒருவித புரதம் இருக்கும். இந்தப் புரதத்தில் நாளடைவில் ஏற்படும் மாற்றம், மெல்லிய பனி போல லென்சிலேயே படர்ந்து விடும். இதற்கு பல காரணங்கள இருந்தாலும், வயோதிகம் ஒரு முக்கிய காரணம். இதனால் பார்வை மங்கலாகி விடும். கேட்ராக்ட் அறுவை சிகிச்சையின் போது, பாதிக்கப்பட்ட லென்சை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக, 'இன்ட்ரா ஆக்குலார் லென்சை' பொருத்தி விடுவோம். ஆனால், கண் தானம் என்பது, உங்கள் கண்களில் உள்ள கருவிழியை எடுத்து, தானம் பெறுபவருக்கு பொருத்தும்போது இதற்கும், லென்சிற்கும் தொடர்பில்லை. அதனால், நீங்கள் தாராளமாக கண் தானம் செய்யலாம். 'ரெடினா' அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண் தானம் செய்யலாம். தானம் செய்யும் கண்களில், எந்தவித தொற்றும் இருக்கக் கூடாது என்பது தான் முக்கியம். கண்களை தானமாக எடுக்கும்போது, டாக்டர்கள் உறுதி செய்து கொள்வர்.
டாக்டர் திருவேணி வெங்கடேசன், அகர்வால் கண் மருத்துவமனை
என் பெற்றோர் இருவருக்கும் ரத்தக் கொதிப்பு உள்ளது. ரத்தக் கொதிப்பு பரம்பரை நோயா?
எஸ்.சங்கீதா, கோவை
எதிர்காலத்தில் எனக்கும் வந்துவிடுமோ என்று பயமாக உள்ளது.பெற்றோர் இருவருக்கும் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கும் ரத்தக் கொதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமச்சீரான உணவு சாப்பிட்டு, உயரத்திற்கு ஏற்ப சீரான உடல் எடையை பராமரிக்க வேண்டும். கொழுப்பு இல்லாத சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நீக்கப்படாத பால், சீஸ், ஐஸ்கிரீம், தேங்காய் எண்ணெய், டால்டா, நெய், வெண்ணெய், பொரித்த, வறுத்த உணவுகள், சாக்லெட், மைதா, கிழங்குகள், சர்க்கரை கலந்த பழச்சாறு போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிடுங்கள். பாலுக்கு பதில், சோயா பால், சீஸ், தேங்காய்க்கு மாற்றாக எள்ளு புண்ணாக்கு சட்னி சாப்பிடலாம். உப்பு குறைவாக
பயன்படுத்தவும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை குறைந்தது, 20 நிமிடங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். திருமணமானவராக இருந்தால், கர்ப்பத் தடை மாத்திரைகள் எடுத்துக் கெள்வதை தவிருங்கள்.
டாக்டர் கீதா சுப்ரமணியன், இதய நோய் சிறப்பு மருத்துவர்