என் குழந்தைக்கு, ௪ வயதாகிறது. இந்த கோடை ஆரம்பித்த நாளிலிருந்து உடல் முழுவதும் வியர்க்குரு, ஆங்காங்கே கட்டிகள் நிறைய வருகின்றன. காலை, மாலை இரண்டு நேரமும் குளிக்க வைக்கிறேன்; உடல் முழுவதும் பவுடர் போட்டு விடுகிறேன். சில நேரங்களில் வியர்க்குரு குறைவது போல தெரிகிறது; ஆனால் திரும்ப வந்து விடுகிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு ஏதும் இருக்கிறதா?
ரமா பிரபாகர், தேனி.
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். உடம்பு நன்றாக வியர்க்க வேண்டும்; அப்போது தான், உடலின் வெப்பநிலை சமன்படுத்தப்படும். அதிகமான உடல் உஷ்ணத்தை சீராக்குவதற்கே வியர்க்கிறது. சுத்தமாக குழந்தையை வைத்திருப்பதாக நினைத்து, இரண்டு வேளை குளிக்க வைப்பது தவறில்லை. ஆனால், எதற்காக பவுடர் போடுகிறீர்கள்? பவுடர் உடலில் உள்ள வியர்வை துவாரங்களை அடைத்துக் கொள்ளும். போதுமான அளவு வியர்வை வெளியேறாது. இதனால் உடல் உஷ்ணம் அதிகரித்து வியர்க்குரு, வேனல் கட்டிகள் வருகின்றன.பவுடர் என்றில்லை; கிரீம் அல்லது, 'சன் ஸ்கிரீன் லோஷன், பாடி லோஷன்' என்று எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாராகும் இதுபோன்ற கிரீம்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், நான்கு மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு வியர்வை சுரப்பிகள் முழுவதும் உருவாகி இருக்காது. தோலில் சுருக்கம் ஏற்பட்ட பெரியவர்களுக்கு வியர்வை சுரப்பி சுருங்கி இருக்கும். எனவே, இவர்கள் இருவருக்கும் கண்டிப்பாக பவுடரை பயன்படுத்தவே கூடாது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குளித்த பின் நன்றாக ஈரத்தை துவட்டிவிட்டு, உடல் முழுவதும் லேசாக தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். தொடர்ந்து இதை செய்தால் வியர்க்குரு, கட்டி வராது.
குழந்தைகள் நலம் மற்றும் மரபியல் நோய் சிறப்பு மருத்துவர்.
நான் பள்ளிப் பருவத்தில் இருந்தே கிட்டப் பார்வைக்காக, 'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்துகிறேன். இப்போது என் வயது, ௨௫. கடந்த, இரண்டு மாதங்களாக அடிக்கடி கண்கள் உலர்ந்து போகின்றன. என்ன காரணம்?
உத்ரா, மடிப்பாக்கம்.
இத்தனை ஆண்டுகளாக 'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்தும் உங்களுக்கு, சமீபத்தில் தான் இந்தப் பிரச்னை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலங்களில் மட்டும் இதுபோன்ற பிரச்னை வருகிறதா என்பதை கவனியுங்கள். பெரும்பாலும் அப்படி இருக்க வாய்ப்புண்டு. கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் தவறாமல், 'சன் கிளாஸ்' போட வேண்டும். சாலையோரங்களில் விற்கப்படும் குறைந்த விலை குளிர் கண்ணாடிகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். காரணம், இது போன்ற கறுப்பு கண்ணாடிகளில் அல்ட்ரா வயலெட் - யூ.வி., எனப்படும் புற ஊதாக் கதிர்களை தடுக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்காது. வெளிச்சம் நம் கண்களில் நேரடியாக பட்டால், கண் பாவை சுருங்கி, அதிகப்படியான வெளிச்சம் கண்களுக்குள் செல்லாமல் பாதுகாக்கும். ஆனால், கறுப்புக் கண்ணாடி போடும் நேரங்களில் வெளிச்சம் நேரடியாக பட்டால் கண் பாவை விரிந்து கொடுக்கும். யூ.வி., பாதுகாப்பு இல்லாத கண்ணாடிகளை அணிந்தால், அதிக வெளிச்சத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால், கண்டிப்பாக யூ.வி., பாதுகாப்பு உள்ள கறுப்புக் கண்ணாடிகளையே பயன்படுத்த வேண்டும். 'ஏசி' அல்லது மின் விசிறிக்கு நேரில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். ஏதாவது தொற்று அல்லது இதுபோன்ற உலர்ந்த தன்மை கண்களில் ஏற்பட்டால், செயற்கை நீரைத் தூண்டும் சொட்டு மருந்தை டாக்டரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.
அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை.

