PUBLISHED ON : மே 25, 2016

ஜெயா - மகேஷ் தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகின்றன. நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோத்தகிரியிலுள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்த மகேஷ், சில சூழல்கள் காரணமாக சென்னைக்கு மாறுதலாகி வந்தார். மகேஷிற்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்து, இங்கேயே செட்டிலாகிவிட்டனர். வாரத்திற்கு ஒரு முறை, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சினிமா, பூங்கா அல்லது கடற்கரை செல்வது என நாட்கள் நகர்ந்தன. இதற்கிடையில், ஜெயா தன் உடல் நலத்தில் வித்தியாசத்தை உணர்ந்தார்.
கழுத்தில் ஆறு மாதங்களாக வீக்கம் தெரிந்தது. இதோடு அந்த வீக்கம் நாளடைவில் பெரிதாகிக் கொண்டே சென்றது. இதனால் பொது மருத்துவர் ஒருவரை சந்தித்தனர். அவர் என்னை சந்திக்கும்படி அவர்களிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனுப்பினார்.
ஜெயாவை பார்க்கும்போதே தைராய்டு சுரப்பியில் ஏதாவது பிரச்னையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அதற்கான ரத்த பரிசோதனை செய்தேன். அதோடு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையும் செய்ததில், தைராய்டு சுரப்பியில் சிறு கட்டி உள்ளது தெரிய வந்தது. கழுத்து வீக்கம், அதன் அளவு மற்றும் தைராய்டு சுரப்பியில் ரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிய முடிந்தது. பின் எப்.என்.ஏ.சி., எனும் திசு பரிசோதனை செய்ததில், ஜெயாவிற்கு வந்திருப்பது தைராய்டு புற்று என்பது உறுதியானது. தைராய்டு புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. பாப்பிலரி என்பது பலரை பாதிக்கக்கூடிய பொதுவான புற்றுநோய். இதோடு உடலில் ஏற்படும் மற்ற வகை புற்றுகள் கூட தைராய்டு சுரப்பியில் பரவ வாய்ப்புள்ளது. ஜெயாவிற்கு வந்திருந்தது பாப்பிலரி எனப்படும் தைராய்டு புற்றுநோய். எனவே அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை எடுத்து விட்டோம். அதன் பின் அவருக்கு, ரேடியோ ஆக்டிவ் அயோடின் என்ற மருந்தை கொடுத்தோம். நோயாளியின் தேவையை பொறுத்து, இந்த மருந்து கொடுக்கப்படுகிறது.ஜெயா தற்போது தைராய்டு புற்றுநோயிலிருந்து விடுபட்டு, மிகவும் சந்தோஷமாக கணவன் குழந்தையோடு வாழ்கிறார். தைராய்டு சுரப்பியை அகற்றிவிட்டதால், தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனை சமன்செய்ய தைராய்டு ஹார்மோன் மருந்துகள் வடிவில் வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் தைராய்டு சரப்பியிலிருந்து வரும் தைராக்ஸின் எனும் ஹார்மோன், இதயத்தை சீராக வைக்கவும், உடல்
வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தை உருவாக்குவதற்கும் பெரிதும் உதவுகின்றன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டும், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மற்ற புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட தைராய்டு புற்றுநோயை குணப்படுத்துவது எளிது. அதுமட்டுமல்ல; தைராய்டு சுரப்பியை அகற்றுவதால், நோயாளிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
சுருதி சந்திரசேகரன்,
நாளமில்லா சுரப்பி நிபுணர்,
சென்னை.
93800 02734