பல் சொத்தை உருவாகாமல் தடுக்க முடியாதா? அதற்கு என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை தேவை? பல் சொத்தை வந்தால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லையா?
மீ.பரந்தாமன், செல்லுார், மதுரை
பல் சொத்தை வராமல் தடுப்பது எளிது. குழந்தைப் பருவத்தில் இருந்தே காலை, மாலை இருவேளையும் பல் தேய்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால், பல் சொத்தை வருகிறது என்பது உண்மைதான். பற்களில் படியும் இனிப்பு, கிருமிகள் உருவாக வழி செய்கிறது. இதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழி, உணவு சாப்பிடுவதற்கு முன் இனிப்பு சாப்பிடலாம். இனிப்பு சாப்பிட்ட பின் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை நன்றாக மென்று சாப்பிட்டால், பற்களில் படிந்துள்ள இனிப்பு, பற்களின் இடையில் தங்கியுள்ள உணவு துகள்களை நார்ச்சத்து சுத்தம் செய்துவிடும். பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை சாப்பிடும் பழக்கம் நம்மிடையே அதிகமாக உள்ளது. உணவின் இயற்கைத் தன்மை மாறும்போது, அதில் நார்ச் சத்துக்கள் இருக்காது. நார்ச்சத்து இல்லாத உணவு பற்களில் ஒட்டிக் கொள்ளும். இது நீண்ட நேரம் அப்படியே இருக்கும்போது, பற்களில் படியும் இனிப்பைப் போலவே, பாக்டீரியாக்கள் உருவாக வழி செய்கிறது. குழந்தைகளுக்கு சாக்லெட் சாப்பிடக் கொடுத்தால், உடனடியாக ஒரு கேரட் அல்லது ஏதாவது ஒரு பழத்தை கடித்துச் சாப்பிடக் கொடுங்கள். நம்மில் பலர், பற்களில் வலி அல்லது ஏதாவது பிரச்னை வந்தால் மட்டுமே டாக்டரிடம் வருகின்றனர். அப்படி இல்லாமல் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக, பல் பரிசோதனை செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளையும், 10 நிமிடங்கள் பல் துலக்குவது அவசியம். இதுபோன்ற எளிமையான வழிகளை பின்பற்றினாலே, பல் சொத்தை வராது. பற்சொத்தை வந்தவுடன் பல்லைப் எடுத்து விட வேண்டும் என்பதில்லை. பாதிப்பின் அளவைப் பொறுத்து சிகிச்சை இருக்கும்.
மழைக் காலம் ஆரம்பித்தவுடன் என் மகளுக்கு வயிற்றுப் போக்கு தவறாமல் வந்து விடுகிறது. தற்போது, 8 வயதாகும் அவள், குழந்தையிலிருந்தே இப்படித்தான். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட நிரந்தர வழி சொல்லுங்கள்
டாக்டர்.ஜலாலுதீன், பொள்ளாச்சி.
ஜூலை முதல் செப்டம்பர் வரை வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம். இந்தப் பருவத்தில் வயிற்றுப் போக்கு, சுவாசத் தொற்று, மூச்சிரைப்பு, டைபாய்டு போன்ற கோளாறுகளுடன் எங்களிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. பருவ நிலை மாறும்போது எடை குறைந்த குழந்தைகளுக்கு இதுபோன்ற தொற்று நோய் பாதிப்புகள் அதிகம் வரலாம். காரணம்
அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வீட்டில் சமைத்த உணவுகளையே குழந்தைக்கு தர வேண்டும். காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுங்கள். தற்போது பள்ளிகள் திறந்து விட்டன. தெருவோரங்களில் விற்கப்படும் தின்பண்டங்கள், ஜூஸ், வெட்டி வைத்த பழங்கள் இவற்றை குழந்தை சாப்பிடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூட்டம் அதிகம் இருக்கும் இடத்திற்கு குழந்தையை அழைத்துப் போவதை தவிர்ப்பது நல்லது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் கொடுப்பது, சகஜமாக இருந்தது. பல கிருமிகள் மருந்திற்கு எதிரான வலிமையைப் (Drug Resistance) பெற்று விட்டது. அதனால், தற்போது குறைந்த அளவு ஆன்டிபயாடிக் மருந்துகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது. முடிந்தவரை ஆரோக்கியமான சூழலில் நோய்த் தொற்று பாதிக்காத வகையில், குழந்தையை வளர்ப்பதே பாதுகாப்பானது.
டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியம்
தலைவர், குழந்தைகள் பிரிவு, சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை

