தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜூலை 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

என் வயது 69. கடந்த ஒரு மாதமாக எனக்கு துாக்கமே வருவதில்லை. ஸ்கேன் உட்பட சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லி டாக்டர் சொன்னார். செய்தேன். எந்த பிரச்னையும் இல்லை. பகல் முழுவதும் சோர்வு, மனஅழுத்தம், தலை பாரம், தலைசுற்றல், மலச்சிக்கல், இடதுபக்கம் கழுத்து வலி, போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய வேலைகளையும், ஆர்வத்தோடு செய்ய முடிவதில்லை. எனக்கு நல்லதொரு தீர்வு தரவேண்டும்.

எம்.ராஜ், மதுரை -7.

என் வயது 55. கடந்த ஆறு மாதங்களாக துாக்கமின்மையால் தவித்து வருகிறேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, நெஞ்சு படபடவென அடித்துக் கொள்கிறது. மாத்திரை சாப்பிட்டும் ஒன்றும் பலனில்லை. துாக்கம் இல்லாமல்தான் நெஞ்சு படபடப்பாக இருக்கிறது என்று சொல்கின்றனர். உண்மையா? என் பிரச்னைக்கு என்ன தீர்வு?

எ.ரபி அஹமத், சிதம்பரம்.

ஒரு சில ஒழுங்கு முறைகளை தினசரி வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே துாக்கமின்மையை எளிதாக சரி செய்து விடலாம். முதலில், தினமும் இரவில் துாங்கப் போகும் நேரத்தையும், காலையில் எழுந்திருக்கும் நேரத்தையும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். தினமும் இரவு 10 மணிக்கு துாங்கி, காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்றால், இந்த நேரத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். என்றாவது ஒருநாள் சினிமா, ஷாப்பிங், ரிசப்ஷன் என்று போய்விட்டு வந்ததால், படுக்கப் போகும் நேரம் தவறினால் பரவாயில்லை. இந்த ஒழுங்குமுறையை ஆரோக்கியமான துாக்கம் (Sleep Hygene) என்று சொல்வோம். எப்படி உடம்பிற்கு சுகாதாரம் முக்கியமோ அப்படி ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான துாக்கமும் முக்கியம். அடுத்தது, துாங்கும் அறையில் கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது, உங்கள் வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். வெறும் படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருந்தால் போதாது. அறையின் வெளிச்சம், போர்வை, தலையணையின் நிறம், வெப்பம் என்று அனைத்தும், உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டியது முக்கியம். அடுத்து நடைப்பயிற்சி. எந்த நேரத்தில் நடந்தாலும் உடலுக்கு நல்லதுதான் என்றாலும், இந்த துாக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள், காலை நேரத்தில் சுறுசுறுப்பாக தினமும் 45 நிமிடங்கள் நடப்பது அவசியம்.காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். தவிர்க்கவே முடியாது என்றால், ஒரு நாளில் 2 அல்லது 3 கப் குடிக்கலாம். அதிலும் மாலை ஆறு மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதுபோல புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதையும் அறவே விட்டுவிட முயற்சி செய்யுங்கள். காலையில் குளித்தாலும், மாலையில் 5 முதல் 7 மணிக்குள் இன்னொரு முறை குளிப்பது துாக்கமின்மையை போக்க உதவும். துாங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன், இரவு உணவை முடித்துவிட வேண்டும். துாங்குவதற்கு முன் இளஞ்சூடாக பால் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடலாம். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால், அதையே நினைத்துக் கொண்டிருக்காமல், அதைத் தவிர்த்து உங்களுக்கு பிடித்தமான வேறு வேலைகளை செய்யலாம்.

எல்லாவற்றையும்விட முக்கியம், உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன், தினமும் சிறிது நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வது, மனதை எப்போதும் ரிலாக்ஸாக, மனஅழுத்தம் இல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்றவை இதற்கு உதவும்.

இந்த ஒழுங்கு முறைகளை தொடர்ந்து 2 வாரங்கள் முறையாக பின்பற்றுங்கள். அதன் பிறகும் இந்தப் பிரச்னை தொடர்கிறது என்றால், கண்டிப்பாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

டாக்டர் என். ராமகிருஷ்ணன்,

இயக்குனர், நித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்லீப் மெடிசின் 044-43502252

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us