PUBLISHED ON : ஜூலை 06, 2016

ஜூன் 2, 2016: கிஷனிற்கு வயது 4. அப்பா, அம்மா இருவரும் மத்திய அரசு அதிகாரிகள். கிஷன் யூ.கே.ஜி., படிக்கிறான். எப்பொழுதும் சுறுசுறுப்பாக விளையாடும் குழந்தை, திடீரென்று சோர்வாக இருந்தான். சிறுநீர் கழிப்பது குறைந்து போனதோடு, சிறுநீர், நுரைநுரையாக வெளியேறியது. இதனால் பள்ளிக்கூடம் போவதும் தடைப்பட்டது. அதோடு, அவனுக்கு முகம் கைகால்களில் வீக்கம் ஏற்பட்டதால், பயந்துபோய் என்னிடம் அழைத்து வந்தனர். பரிசோதித்ததில், கிஷனுக்கு இருப்பது, 'நெப்ராடிக் சிண்ட்ரோம்' என்பது தெரிந்தது. 'நெப்ராடிக் சிண்ட்ரோம்' என்பதை ஊதுகாமாலை என்று சொல்வார்கள். சிறுநீரகங்களில் வடிகட்டியாக செயல்படும், க்ளொமெருலஸ்சில், ஆன்டிஜென்- ஆன்டிபாடி (Antigen antibody) ஏற்படுத்தும் மாற்றத்தினால், சிறுநீருடன் சேர்ந்து புரதம், குறிப்பாக ஆல்புமின் வெளியேறுகிறது. இதனால் ரத்தத்தில் ஆல்புமின் அளவு குறைந்து, நீர் ரத்தக் குழாய்களிலிருந்து வெளியேறி, திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்பு, முதல் நிலை மற்றும் தீவிர நிலை என பிரிக்கப்படுகிறது. முதல்நிலைக்கு, ஸ்டீராய்டு மருந்துகளே போதுமானது. தீவிர நிலைக்கு ஸ்டீராய்டு மருந்துகளோடு, தீவிர சிகிச்சையும் தேவைப்படும். ஸ்டீராய்டு மருந்துகளுக்கு, ஊதுகாமாலை கட்டுப்படவில்லையென்றால், வீரியமுள்ள மாற்று மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஊதுகாமாலை பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி தான் உணவு தர வேண்டும். ஒருமுறை இந்த பாதிப்பு வந்தால், மீண்டும் வரலாம். ஆனால், இந்த சதவீதம் மிகவும் குறைவு. கிஷனுக்கு மருந்துகள் மூலமே இப்பிரச்னை தீர்க்கப்பட்டது.
ஜெ. குமுதா, பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர்.
சவீதா மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, சென்னை
94440 23733
