PUBLISHED ON : ஜூலை 06, 2016

கைகளைக் கட்டிக் கொண்டு, விறைப்பாக, இறுகிய முகத்தில் கோபம் கொப்பளிக்க நின்ற 11 வயது சிறுவனை, இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக, 'தம்பி, வீட்டுல விளையாட என்னவெல்லாம் வச்சிருக்கீங்க' என்று கேட்டேன்.'தனுஷ் வளர்த்தாரே அந்த சேவல் இப்ப என்கிட்ட இருக்கு. அதுதான் என் பேவரேட்' என்றான். 'அப்புறம்?' என்றதற்கு, 'நான் கேட்டா, உடனே வாங்கித் தரணும். இல்லைன்னா' என்று, கேள்வியை முடிக்காமல், அவன் பெற்றோரைத் திரும்பி பார்த்தான். 11 வயது சிறுவனை, அவர்கள் பயப் பார்வை பார்த்தபடி நின்றிருந்தனர். ஐம்பத்தி இரண்டு வயது அப்பா, 49 வயது அம்மா. இவர்களின் 11 வயது மகன். திருமணமாகி, 16 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை இவன். தமிழகத்தின் தென் மாவட்டததில் உள்ள கிராமம் தான், இவர்களின் பூர்வீகம். இந்த பையனின் பெரியம்மா, பெரியப்பாவிற்கும் குழந்தை இல்லை என்பதால், அவர்கள் இருவரும் பையனின் பெற்றோருடனேயே வந்து, கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். அவர்களின் வயதும், 55க்கு மேல். பெரியவர்கள் நான்கு பேரும் அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள். எல்லாருக்கும் சேர்த்து, இவன் ஒரே குழந்தை. அவர்களின் நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் இவன்தான் என்பதால், ரொம்பவே செல்லம்.
கடந்த கல்வியாண்டில், ஆறு மாதங்களாக, 'பள்ளிக்குச் செல்ல மாட்டேன்' என்று அடம் பிடித்திருக்கிறான். நான்கு பெரியவர்களும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும், அவனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. என்னிடம் அழைத்து வந்தனர். சினிமாவில் வரும் வில்லனைப் பார்த்து, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் நடுங்குவதைப் போல, 50 வயதைக் கடந்த அவனின் பெற்றோரும், பெரியம்மா, பெரியப்பாவும், இந்த, 11 வயது பையனைப் பார்த்து பயந்து கொண்டிருந்தனர். முதலில் பெரியவர்கள், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசியபோது, பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.திருமணம் ஆகி, பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பையன், குழந்தை இல்லாத தம்பதிக்கும் சேர்த்து இவன் தான் நம்பிக்கை என்பதால், நான்கு பேரும் கேட்டதையெல்லாம் செய்து, அவனை வளர்த்து வந்திருக்கின்றனர். இவர்களின், இந்த அணுகுமுறை 6, 7 வயதிலிருந்தே இந்த குழந்தையின் மனதில், ஒரு பிடிவாதத்தையும், முரட்டு சுபாவத்தையும் வளர்த்து விட்டது. அவன் கேட்டால் கேட்டது உடனே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். ஒரு சினிமா பார்த்தால், ஹீரோ வைத்திருப்பது இவனுக்கு வேண்டும். அப்படித்தான், 'ஆடுகளம்' படம் பார்த்துவிட்டு சேவல் கேட்க, இப்போது இவர்கள் வீட்டில், 6, 7 சேவல்கள் சுற்றித் திரிகின்றன. சில மீன் தொட்டிகள், ஆடுகள் என்று, வீடு மொத்தமும் பல உயிரினங்கள் வலம் வருகின்றன.வாங்கித் தரவில்லை என்றால், சுடு தண்ணீரை எடுத்து ஊற்றுவது, எதிர்பாராத சமயத்தில் கத்தியை எடுத்துக் குத்தி விடுவது என்று, அவனின் முரட்டுத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில்தான், பள்ளிக்கு போக முடியாது என்று சொல்லி விட்டான். பையனை ஒரு மாதம் உள் நோயாளியாக வைத்து சிகிச்சை தந்தேன். மருந்துகளும், அவன் வயதுக்கு ஏற்ற மனநிலையில் நடத்தை இருக்க, சில தெரபிகளும் தேவைப்பட்டது. ஒரு மாதம் கழித்து, வீட்டிற்கு அனுப்பினேன். குழந்தையிடம் நல்ல மாற்றம் தெரிந்தது. பழையபடி அடம்பிடிக்காமல், பள்ளிக்கு போக ஆரம்பித்து இருக்கிறான்.
தீ.சாய் பாலசுப்ரமணியம்
மனநல மருத்துவர், சென்னை.
98405 33345
