PUBLISHED ON : ஜூலை 27, 2016
எனக்கு திருமணம் முடித்து சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் குழந்தைப் பேறு உண்டாகாததால், எங்கள் பகுதியில் உள்ள மருத்துவரிடம் சென்றோம். என்னையும் மனைவியையும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். அதில் என் ரத்தத்தில் HBS AG என்னும் வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இது என் ரத்தத்தில் 4568.97 reactive ஆக இருந்தது. முதலில் இதற்கு சிகிச்சை செய்த பிறகு குழந்தைப் பேறுக்கான சிகிச்சை செய்யலாம் என்று சொன்னார். இது என்னிடமிருந்து என் மனைவிக்கு பரவுமா? கருத்தரித்தால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா என்று விளக்கம் தேவை.
எஸ்.சுரேஷ், காஞ்சிபுரம்
எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்தபோது கரு கலைந்துவிட்டது. அதன் பின் செய்த பரிசோதனையில் என் மனைவியின் இதயத்தில் துளை உள்ளதாக டாக்டர்கள் கூறினர். திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்து அதை சரி செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் தாம்பத்ய உறவு கொள்கிறோம். ஆனால் இதுவரை ஒருமுறை கூட கரு நிலைக்கவில்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.
வி.கங்கை குமரன், மதுரை
உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று, ஹெபடைடிஸ் 'பி' வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ளது. இது பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை மற்றவர்களுக்கு ஏற்றுவதன் மூலமோ, அவர்களுக்கு குத்திய ஊசியை அடுத்தவர் பயன்படுத்துவது மூலமாகவோ பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமோ பரவக்கடியது. அதனால்தான் உங்கள் மருத்துவர் இந்த தொற்றை சரி செய்த பின் குழந்தைப் பேறுக்கு முயற்சிக்கலாம் என்று சொல்லியிருப்பார்.
இதுபோல தொற்று இருக்கும் சமயங்களில், ஒரு வேளை குழந்தை உண்டானால், குழந்தைக்கும் தொற்று ஏற்படும் என்று சொல்ல முடியாது. குழந்தை பிறந்த 72 மணி நேரத்தில் ஆன்டிபயாடித் தடுப்பு மருந்துகளை குழந்தைக்கு கொடுத்துவிடுவோம். குழந்தை பாதுகாப்பாக இருக்கும். இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றை சரி செய்தபின் கர்ப்பம் தரிக்கலாம் என்று டாக்டர் சொல்கிறார்.
இது உங்களின் பாதுகாப்பு கருதியே. பொதுவாக இந்தத் தொற்று ஏற்பட்டால், ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளியில் தெரியாது. நீங்கள் மகப்பேறு பிரச்னைக்காக டாக்டரை அணுகியதால், ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது ஒரு வகையில் நல்லது. இந்த தொற்று ஏற்பட்டால், நீண்ட நாட்களாக அப்படியே இருந்து கல்லீரலை பாதிக்கும். அறிகுறிகள் வெளியில் தெரிவதற்கு, 180 நாட்கள் கூட ஆகலாம். கங்கை குமரன், இதயத்தில் பிரச்னை இருந்து உங்கள் மனைவிக்கு அது சரி செய்யப்பட்டு விட்டது. கர்ப்பமாவதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கரு தரிக்கவில்லை என்றால் அதற்கு பல
காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, இருவரும் தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். யாரிடம் குறை இருந்தாலும் அதை சரி செய்வதற்கு தகுந்த ஆலோசனைகளை டாக்டர் தருவார்.
டாக்டர் என்.எஸ்.கனிமொழி
மகப்பேறு சிறப்பு மருத்துவர், கிளவுட் மருத்துவமனை
