தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் வருகிறது. காலை, மதியம் மற்றும் இரவு என, ஏதாவது பணியில் மும்முரமாக இருக்கும் நேரங்கள் என்று எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வருகிறது; பல நேரங்களில் நெஞ்சுப் பகுதி முழுவதும் ஊசியால் குத்துவது போல உள்ளது. நெஞ்செரிச்சல் சற்று அதிகமாக இருந்த ஓரிரு சமயங்களில், மாரடைப்போ என்று பயந்து, உடனடியாக அருகில் இருக்கும் பரிசோதனை மையத்தில், ஈ.சி.ஜி., எடுத்துப் பார்த்தேன். இதயத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதுபோன்ற சமயங்களில் எதாவது ஆகிவிடுமோ என்ற பதற்றம் வருகிறது. சரியான வழிகாட்டுதல் வேண்டும்.

க.பழனியப்பன், ஈரோடு


வாயையும் இரைப்பையையும் இணைப்பது உணவுக் குழாய். உணவுக் குழாய் முழுவதும் மெல்லிய தசைகளால் ஆனது. இது, வாயில் அரைபட்ட உணவை வயிற்றுக்கு தள்ளுவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. நீரில் கல் எறிந்தால், வட்ட வட்டமாக அலைகள் உருவாவது போல நாம் விழுங்கும் உணவு, உணவுக் குழாய் வழியே உள்ளே போகும். வயிற்றிலிருந்து சுரக்கும் ஜீரண அமிலம் என்சைம்களுடன் சேரும் போது, உணவு செரிக்க ஆரம்பிக்கும். வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தால், வயிற்றின் உள் பகுதியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரைப்பையின் உட்புற சுவரில், பிரத்யேக செல்கள் ஒரு கவசம் போல இருக்கிறது. ஆனால், உணவுக் குழாயில் இதுபோன்ற பாதுகாப்பு அம்சம் எதுவும் கிடையாது. அதிகப்படியாக சுரக்கும் அமிலம் வயிற்றிலிருந்து மேல் நோக்கி வரும் பொழுது, உணவுக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துவதால் நெஞ்செரிச்சல் வருகிறது. ஜீரண அமிலம் சுரக்கும் அளவு,

ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு சரியான அளவிலும்; சிலருக்கு அதிகமாகவும்; இன்னும் சிலருக்கு குறைவாகவும் சுரக்கலாம். அதிகமாக சுரந்தால், உணவு சாப்பிட்டவுடன் உணவுடன் சேர்ந்து அமிலம் மேலே வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். சிகரெட், மது பழக்கம் இருந்தால் இந்தப் பிரச்னை வரலாம். சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, பாட்டில்களில் அடைக்கப்பட்ட கார்பனேடட் குளிர் பானங்கள், திராட்சை, பைனாப்பிள், தக்காளி, சாக்லெட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் போன்றவை

அதிக அமில சுரப்பிற்கு காரணமாகலாம். எந்த உணவினால் உங்களுக்கு இந்தப் பிரச்னை வருகிறது என்பதை தெரிந்து, அந்த உணவைத் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.

ஒரு நாளில், 3 வேளை சாப்பிடும் உணவைப் பிரித்து, 5 அல்லது 6 வேளை சாப்பிடலாம். காலை உணவை தவிர்க்க வேண்டாம்; காலை உணவானது, எல்லா சத்துக்களும் கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும். காலை உணவின் அளவை விடவும், மதிய உணவின் அளவு குறைவாகவும்; இரவில் அதை விடவும் குறைவாகவும் சாப்பிடுங்கள்; இது தான் சரியான முறை.தினமும், குறைந்தது ஆறு மணி நேர துாக்கம் அவசியம். துாங்கும் நேரத்தில் ஜீரண அமிலமோ உமிழ் நீரோ சுரப்பதில்லை. எனவே இரவு உணவை, படுக்கைக்கு செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாக சாப்பிட்டு விட வேண்டும். வயிறு தொடர்பான பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் மனப்பதற்றம், மன உளைச்சல் போன்ற மனப்பிரச்னைகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே யோகா, தியானம் போன்றவற்றை பழக்கப்படுத்திக் கொள்வதும் நல்ல பலனைத் தரும். வாரத்திற்கு, 5 நாட்களாவது முடிந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இவையெல்லாம் பலன் தராத பட்சத்தில், கண்டிப்பாக முழு மருத்துவ பரிசோதனையும் ஆலோசனையும் முக்கியம்.

டாக்டர் ராதாகிருஷ்ணன்

குடல், இரைப்பை சிறப்பு மருத்துவர், சிம்ஸ், சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us