PUBLISHED ON : ஜன 18, 2017
எனக்கு வயது, 31 ஆகிறது; குடும்பத் தலைவி. எனக்கு அல்சர் இருக்கிறது என, மருத்துவர் கூறியிருக்கிறார். இயற்கையாக இப்பிரச்னையை எவ்வாறு சரி செய்வது?
கே.புவனா, திருமுல்லைவாயில்
வயிற்றில் சுரக்கும், அதிக அமிலங்களால் குடல் புண்ணாகி, அதன் விளைவாக வருவது தான் அல்சர். இப்படி அல்சர் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதிக மாத்திரைகளை சாப்பிடுவது, எப்போதும் கார மசாலா உணவுகளை சாப்பிடுவது, சரியாக சாப்பிடாதது, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் ஒரு வகையான பாக்டீரியா இவை தான், அல்சர் உண்டாவதற்கான காரணங்கள். இப்பிரச்னை வயிறு, ஜீரண உறுப்புகளில் உண்டாகும்.
பாதிக்கப்பட்ட இடத்தை பொறுத்து, வயிற்று அல்சர், பெப்டிக் அல்சர், இரைப்பை அல்சர் என, பல வகை உள்ளது. இந்த அல்சரை நிச்சயம் உணவு பத்தியத்தின் மூலமே குணமாக்க முடியும்.
அறிகுறிகள்
இந்த நோயின் முதல் அறிகுறி, நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவது தான். இதைத் தொடர்ந்து, அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும்; பசி இருக்காது. பின், வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும், மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும்.
*பீட்ரூட் சாறில், தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்று அல்சர் குணமாகும். நல்ல பாக்டீரியாக்கள் பெருகி புண்களை ஆற்றும்.
*தினமும், தேங்காய் பால் சாதம் சாப்பிட்டு வந்தால், குடல் புண்கள் ஆறும்; அமில சுரப்பும் கட்டுப்படும். தேங்காய் பால் எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
*காலையில் வெறும் வயிற்றில், ஆப்பிள் ஜூஸ் பருகலாம். இதுவும் அல்சரை குணமாக்கும் முக்கிய உணவாகும்.
*அகத்திக்கீரையை, தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால், இவை வயிற்று அல்சரை குணப்படுத்தும்.
*கொத்துமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி, வெதுவெதுப்பாக குடித்து வந்தால், வயிற்றுப் புண்கள் மற்றும் வாய் புண்கள் குணமாகும்.
*இளநீர் பருகலாம், கேரட் ஜூஸ் தினமும் குடிக்கலாம்.
*இவற்றை எல்லாம் செய்வதை விட, முதலில் பின்பற்ற வேண்டியது. சரியான நேரத்திற்கு அதிக காரமில்லாத எல்லாச் சத்துக்களும் நிறைந்த, ஆரோக்கிய உணவை சாப்பிட வேண்டும்.
*அல்சரை கவனிக்காவிட்டால், பின்னாளில் ஆபத்தாக மாறவும் வாய்ப்புண்டு.
கா.சுந்திரமூர்த்தி
சித்த மருத்துவர், தேனீ
