பொது நல மையத்தில் நெசவாளிக்கு அரிய இதய வால்வு மாற்று சிகிச்சை
பொது நல மையத்தில் நெசவாளிக்கு அரிய இதய வால்வு மாற்று சிகிச்சை
PUBLISHED ON : அக் 20, 2013
சென்னை, மேற்கு மாம்பலம் பொதுநல மையத்தில், ஏழை நெசவாளிக்கு, அரிய இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனையில் அமலில் உள்ளதாகவும், 50 சதவீதம், கட்டணம் குறைவான சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், பொதுநல மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, மேற்கு மாம்பலத்தில், 'பொது நல மையம்' (பப்ளிக் ஹெல்த் சென்டர்), 1953 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த ஆண்டில், பிரத்யேக இதய நோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.
இதுவரை, நூறு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன், ஏழை நெசவாளிக்கு, அரிய இதய அறுவைச் சிகிச்சையை, டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து, இதயவியல் துறை நிபுணர் அருண் கூறியதாவது: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் மூர்த்தி, 38, பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று, மூச்சுத்திணறல் பாதிப்புடன் இங்கு வந்தார். பரிசோதனைகளை செய்து பார்த்தபோது, இதய வால்வில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தபோது, அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய், உரிய இடத்தில் இல்லாமல், இதயத்தைச் சுற்றி, பின்புறமாக செல்வது தெரிந்தது; இது, பிறவி கோளாறு. லட்சத்தில் ஒருவருக்கு தான், இது போன்று மாறுபட்ட நிலையில், ரத்தக் குழாய் இருக்கும்.
அதைக் கண்டறிந்தபின், இதயத்தை இயக்கும் கருவியைப் பொருத்தி, வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட இதய வால்வை பொருத்தி, மாற்றியமைத்தோம். ரத்த குழாயும் நேர் வழியில் மாற்றியமைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை நான்கு மணி நேரம் நடந்தது. அவர், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொது நல மையத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் டாக்டர். எம்.கே.சீனிவாசன் கூறியதாவது: இந்த அறுவைச் சிகிச்சையை, டாக்டர் அருண் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி கரமாக செய்துள்ளார். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது. இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்வது உள்ளிட்ட, தனியார் மருத்துவமனைகளில் உள்ள, எல்லா வசதிகளும், இங்கு உள்ளன.
பிற மருத்துவமனைகளை விட, 50 சதவீதம் குறைவான கட்டணமே பெறப்படுகிறது. 'நோ பிராபிட்; நோ லாஸ்' என்ற அளவில் மையத்தை செயல்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி. பொது நல மையத்தில், மகப்பேறு சிகிச்சைக்கு சேர்ந்தார். அறுவைச் சிகிச்சை மூலம், அவருக்கு, அழகான மூன்று குழந்தைகள் பிறந்தன. டாக்டர் பிரபா கணபதி கூறுகையில், ''இந்த மையத்தில் சுகபிரசவத்தையே வலியுறுத்துகிறோம். சிக்கலான நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்கிறோம். ஜோதி என்ற பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம், ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மூன்று குழந்தைகளும் நலமாக உள்ளன. சிக்கலான பிரசவத்தை செய்கிறோம்,'' என்றார்.
'இங்கு சுக பிரசவத்திற்கு, 5,000 ரூபாய்; சிசேரியன் என்றால், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் பெறுகிறோம். மருந்து, மாத்திரைகள் விலை, வெளியிடத்தை விட, 30 சதவீதம் குறைவாக வசூலிக்கிறோம்' என, மைய நிர்வாகிகள் சுப்ரமணியன், நாகராஜன் தெரிவித்தனர்.
