PUBLISHED ON : நவ 11, 2015

கண்களை மூடிக் கொண்டு, கூழாங்கற்கள் நிரம்பிய டிராக்கில் ஒவ்வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்து, நடந்து சென்ற சந்தோஷத்தை அனுபவித்ததுண்டா. உடலும், மனமும் ஒன்றாய் கொண்டாடும் இந்த பயிற்சி, எல்லோருக்குமே அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் கவுஸ்பாஷா.
அவர் கூறியது: சாதாரணமாக நிற்கும் போது முழங்காலை சற்றே தளர்த்திய நிலையில் தான் நிற்க வேண்டும். அமரும் போது கூன் போடாமல் சாய்ந்த நிலையில் முதுகு நேராக இருக்க வேண்டும். 
இறுக்கமாக அமரக்கூடாது. நடக்கும் போது கணுக்கால், பாதம் நேராக இருக்க வேண்டும். முழங்காலை நேராக வைத்து நடக்க வேண்டும்.
கோயில்களில் அடிபிரதட்சணம் செய்வது தான் சரியான நடைஅசைவு. குதிங்காலை முதலில் வைத்து பாதத்தை அழுத்தமாக வைத்து நடந்தால், தசைகள் சரியான விதத்தில் செயல்படும். உடல் செயல்பாட்டுக்கு கால்களே பிரதானம். பாதத்தின் நடுப்பகுதி வளைவாக இருப்பது அவசியம். சிலருக்கு பாதப்பகுதி ஒரே மாதிரி தட்டையாக இருந்தால் உடல் வடிவமைப்பு மாறும். தசை விலகி பிரச்னை ஏற்படும். ஒரு தசை நிறைய வேலை செய்யும். மற்ற தசைகள் குறைந்தளவு வேலை செய்யும். இதனால் முழங்கால் வலி, முதுகுவலி, கழுத்து வலி வர வாய்ப்புள்ளது.
கூழாங்கல் பயிற்சி நல்லது கூழாங்கல்லில் நடக்கும் போது கண்களை மூடிக்கொள்ள வேண்டும். 
பார்த்ததையும், கேட்டதையும் மனதால் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். நிதானமாக ஒவ்வொரு அடியாக பாதம் பதித்து நடக்க வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் முறையாக கிடைக்கிறது. உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள தோல் ஒரே மாதிரியான உணர்வை கொண்டவை. அதனால் தான் தலையை விரல்களால் வருடும் போது உடல் சோர்வு நீங்குகிறது. அதுபோலவே பாதங்களுக்கு இந்த கூழாங்கல் பயிற்சி, புத்துணர்வை தருகிறது. 
உடல் உள்ளுறுப்புகள் தூண்டப்பட்டு நன்றாக செயல்படும். தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் உடல் வடிவமைப்பு மாறும். வலியும் குறையும். கூழாங்கற்கள் இல்லா விட்டால் அதுபோன்ற காலணிகள் உள்ளன. அதை அணிந்து நடக்கலாம். 
நிற்பது, நடப்பது, அமர்வது எல்லாமே முறைப் படியான நிலையில் இருந்தால் உடலுக்கும், மனதுக்கும் பிரச்னையில்லை, என்றார்.
மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் கூழாங்கல் நடைபயிற்சிக்கான வசதி உள்ளது. வைகையாற்று கூழாங் கற்களை 30 மீட்டர் நீளத்திற்கு நிரப்பியுள்ளனர். இதில் பயிற்சி பெறும் மதுரையைச் சேர்ந்த இல்லத்தரசிகள் சித்ரா, செல்வி கூறியது:  
இருவரும் அருகருகே வசிக்கிறோம். 12 ஆண்டுகளாக நடக்கிறோம். நடந்து முடிக்கும் போது பாதமும், ஆடுசதையும் வலிக்கும். ஷூவை கழற்றிவிட்டு வெறும் காலில் கூழாங்கல்லில் அடி பிரதட்சணம் போல நடந்து செல்வோம். பாதங்களுக்கு புத்துணர்வு கிடைத்தது போலிருக்கும், வலி குறையும் என்றனர்.

