PUBLISHED ON : ஜூன் 08, 2016

என் டாக்டர் நண்பர் ஒருவர், வருத்தமாக என்னிடம் பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. இந்த ஆண்டு பிளஸ் ௨ தேர்வு முடிவுகள் வெளியானதற்கு முன்தினம், என் டாக்டர் நண்பனின் வீட்டிற்குச் சென்ற அவர் மகனின் வகுப்புத் தோழன், இரவு ௮:00 மணிக்குச் கிளம்பிச் சென்று விட, வழக்கம் போல அவர் மகன் இன்டர்நெட்டில் மூழ்கி விட்டான். மறுநாள் காலை வாக்கிங் செல்வதற்காக வெளியில் வந்த டாக்டர், தன் வீட்டுக் காம்பவுண்டில் புதிதாக ஒரு பைக் நிற்பதைப் பார்த்து,
மகனை எழுப்பி கேட்க, வெளியில் வந்து பார்த்த பையன் குழம்பிவிட்டான். காரணம், முதல் நாள் தன்னைப் பார்க்க வந்த நண்பனின் பைக் அது. 'அவன் நேத்து நைட் கிளம்பிப் போனப்ப, நான் வெளியில் வரலைப்பா. பைக்கை இங்கேயே விட்டுட்டு எப்படி போனான்னு தெரியலையே?' என்று சொல்ல, அவன் அப்பாவிற்கு லேசாக பதற்றம் தொற்றிக் கொண்டது. 'உங்க பையனோட பைக் எங்க வீட்டுல இருக்கு. பையன் வீட்டில தானே இருக்கான்?' என்று அந்தப் பையனின் அப்பாவிடம் போனில் விசாரிக்க, 'உங்க வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனதா அவன் அம்மா சொன்னாங்க. அங்கேயே தங்கிட்டான் போல... வரட்டும் பேசலான்னு, 'வெயிட்' பண்றேன்' என்ற பதிலில், அனைவரும் பதற்றமாகினர். சரியாக அந்த நேரம் பார்த்து, கடற்கரையில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இருந்து, காணாமல் போன பையனின் அப்பாவிற்கு ஒரு போன். 'உடனே கிளம்பி அவர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல, கடற்கரையில் அந்தப் பையன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்ததைப் பார்த்த மாத்திரத்தில், அவன் அப்பா கையை ஓங்கிக் கொண்டு, 'சே, பையனை
இப்படி வளர்த்திருக்காங்களேன்னு என்னை காறி துப்புவாங்க... அசிங்கப்படுத்திட்டியே' என்று இரைச்சலிட, பையன் நடுங்கியபடியே நண்பனின் அப்பாவின் பின்னால் ஒளிந்து, வீட்டிற்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்திருக்கிறான். 'நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க சார். நான் வீட்டிற்கு அழைச்சிட்டு போயி என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்' என்று டாக்டர் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அந்தப் பையனின் அப்பா, ஏதோ நடக்கக் கூடாத அவமானம் தனக்கு நடந்து விட்டதாக புலம்பிக் கொண்டே போயிருக்கிறார்.
ஆனால், அந்தப் பையன் எதுவும் பேசுவதாக இல்லை. அவனை சமாதானப்படுத்தி, 'ஏன் தம்பி இப்பிடி பண்ணினே?' என்று கேட்டபோது, 'என் அப்பாவைப் பார்த்தாலே பயமா இருக்கு. இன்னிக்கு, 'ரிசல்ட்' வருது; என்ன சொல்லுவாரோ' என்று மெதுவாகக் கூற, பார்த்த யாருக்கும் இரக்கம் வரும் அளவிற்கு அவனின் கை, கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்று வெளியான ரிசல்ட்டில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். ஆனாலும், வீட்டிற்குப் போக மறுத்த பையனை தன் கிளினிக்கிற்கு அழைத்து வந்து பையனிடம் பேசிய சில நிமிடங்களிலேயே டாக்டருக்கு புரிந்து விட்டது.கவுன்சிலிங், அவனது அப்பாவிற்குத்தான் தேவை என்பது. பையன் ஒழுக்கமாக வளர வேண்டும்; எந்த தவறும் செய்து விடக் கூடாது; தன்னை யாரும் எதற்காகவும் குறை சொல்லிவிடக் கூடாது என்ற அதீத பயத்தில், ௨௪ மணி நேரமும் என்ன செய்யறே, என்ன செய்யறே என்று கண் கொத்திப் பாம்பாக இவனை
கவனித்து, சுதந்திரமே கொடுக்காமல் வளர்த்திருக்கிறார். அவர் எதிர்பார்த்த மார்க் வரவில்லை என்றால், அவரின் கேள்விகளை எப்படி சமாளிப்பது என்ற பீதியில், இரவு முழுவதும் பீச்சில் தனியாக உட்கார்ந்து இருந்திருக்கிறான்.கண்டிப்பும், ௨௪ மணி நேர கண்காணிப்பும் மட்டும் எந்த குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்காது என்பதை புரிய வைப்பதற்காக, தற்போது மன நல டாக்டர், அவன் அப்பாவிற்கு கவுன்சிலிங் கொடுத்து
வருகிறார்.
டாக்டர் பூர்ண சந்திரிகா மனநல மருத்துவர்
98403 70603

