பல ஆண்டுகளாக, எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. சிகரெட்டை விடப் போகிறோம் என்ற எண்ணமே, ஒருவித பதற்றத்தை தருகிறது. அதிலும்
இத்தனை ஆண்டுகளாக இருக்கும் பழக்கத்தை திடீரென்று நிறுத்தினால் ஏதாவது பாதிப்பு வருமா? விளக்குங்கள் டாக்டர்.
சசிகுமார், திண்டிவனம்
நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின் உள்ளேயும், மெல்லிய நுாலிழை போன்ற நுண்ணிய சிலியா உள்ளது. இது தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது; இந்த சிலியாவின் வேலையே, நம் செல்களில் சேரும் நச்சுப் பொருட்களை, உடனுக்குடன் வெளியேற்றுவது தான். ஆனால் தொடர்ந்து, பல ஆண்டுகளாக சிகரெட் பழக்கம் இருந்தால், நம் உடலில் சேரும் நிகோடின், இந்த சிலியாவை செயல்படாமல் செய்து விடுகிறது. நம் உடம்பின் இயற்கையான இயல்பே, பல ஆண்டுகளாக உடலில் ஒரு அன்னிய வஸ்து சேர்ந்து கொண்டே இருந்தாலும், அதை நிறுத்திய உடனேயே, அதனால் ஏற்பட்ட விளைவுகளும் உடலில் இதுவரையிலும் தங்கிய நச்சும் படிப்படியாக வெளியேறிவிடும். இன்னொரு முக்கியமான விஷயம், ௨௦, ௩௦ ஆண்டுகள் கூட தொடர்ந்து சிகரெட் பழக்கம் உடையவராக இருக்கலாம். சிகரெட்டை நிறுத்தியவுடன், உங்கள் உடல் ஆரோக்கியமான நிலைக்கு மாற ஆரம்பித்து விடும். எந்த பின்விளைவுகளும் இருக்காது. பதற்றமாக இருக்கிறது, சிகரெட் பிடிக்க வேண்டும் போன்ற உணர்வு, குறிப்பிட்ட நேரத்தில் வருகிறது என்பதெல்லாம், மனரீதியான பிரச்னை. நீங்களாகவே அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள் என்பது தான் நிஜம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அடையாறு புற்றுநோய் மையத்தின் புகையிலைத் தடுப்புப் பிரிவை அணுகினால், உங்களுக்கு வழிகாட்டுவர்.
டாக்டர் குழந்தைசாமி, இயக்குனர்,
நோய்த்தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறை
எனக்கு வயது ௮௦. 'வெரிகோசிஸ்' நரம்புகள் இருப்பதாக, அதற்கான பரிசோதனைகள் மூலம் டாக்டர்கள் உறுதி செய்து உள்ளனர். இந்தப் பிரச்னை இருந்தால் என்ன செய்ய வேண்டும்? காரணம், வெரிகோசிஸ் நரம்புகள் பிரச்னையை சரி செய்ய முடியாது. கட்டுப்பாட்டில் தான் வைக்க வேண்டும் என்கின்றனரே, உண்மையா?
கல்யாணசுந்தரம், நங்கநல்லுார், சென்னை
உங்களின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, உங்களுக்கு இதனால் வேறு ஏதும் தொந்தரவுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே, டாக்டர் இந்த ஆலோசனையைத் தந்திருப்பார். எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தால், அறுவை சிகிச்சையோ, வேறு விதமான சிகிச்சைகளோ தேவையில்லை. வெரிகோசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கென்றே பிரத்யேகமான காலுறைகள் உள்ளன; அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். பராமரிப்பிற்கான ஆலோசனைகளை மட்டும், உங்கள் மருத்துவரிடம் கேட்டு, அதை பின்பற்றுங்கள் போதும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பவர்களுக்கு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், கால் நரம்புகளில் முடிச்சுகள் ஏற்படுவதே, 'வெரிகோசிஸ்!' மரபியல் காரணங்களாலும் வெரிகோசிஸ் வரலாம். பலரும் நினைப்பது போல, இது உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், சில பேருக்கு காலில் கறுப்பு கறுப்பாக புள்ளிகள் தோன்றலாம். ரத்தக் கசிவு கூட ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் கால்களை உயர துாக்கி வைத்திருந்தால் ரத்தக் கசிவு நின்றுவிடும். காரணமே இல்லாமல் வரும் வெரிகோசிஸ் பிரச்னை; காரணங்களோடு வரும் பிரச்னை, இரண்டிற்குமே தேவையின் அடிப்படையில் சிகிச்சையோ, பராமரிப்போ நாங்கள் சிபாரிசு செய்கிறோம். ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் நிறைய பாதிப்புகள் வரும். எனவே, ௪௦ வயதிற்குட்பட்டவர்களுக்கு காலில் கறுப்பு புள்ளிகள் அதிகம் இருந்தால் மட்டும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள சொல்கிறோம். மற்றபடி, டாக்டரின்
ஆலோசனைப்படி பராமரிப்பு செய்து கொண்டால் போதுமானது.டாக்டர் எஸ்.மணிகண்டன் பிரபு,
ரத்த நாள சிறப்பு மருத்துவர், சிம்ஸ், சென்னை.

