PUBLISHED ON : ஜூன் 08, 2016

மாரடைப்பு தவிர, வேறு என்னென்ன நோய்கள் இதயத்தை பாதிக்கும்?
இதய வால்வுகள் பழுதடைவது, இதய தசை பலவீனம், மகா தமனி வீக்கம் அல்லது கிழிசல், குழந்தைகளுக்கு
பிறவியிலேயே இதயத்தில் ஓட்டை அல்லது மரபியல் காரணமாக பிறவிக் கோளாறுகள் இதயத்தை பாதிக்கின்றன.
இதய நோய்கள் வரக் காரணம் என்ன?
கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, புகை மற்றும் குடிப்பழக்கம், உடல் பருமன், மரபியல் கோளாறுகள், துரித உணவு உண்பது உட்பட பல காரணங்கள்.
இதய நோய்களுக்கு என்னென்ன நவீன அறுவை சிகிச்சைகள் உள்ளன?
கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் சர்ஜரி, மினிமல் இன்வேஸிவ் சர்ஜரி, இதய வால்வை மாற்றுவது அல்லது சீரமைப்பது, பேஸ்மேக்கர், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட், வால்வு பொருத்துவது போன்றவை.
கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் முறை எதற்கு செய்யப்படுகிறது?
அடைப்பு ஏற்பட்ட இதயத் தமனியில், புதிதாக வேறொரு தமனிக் குழாய் மூலம் மாற்றுப்பாதை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீரமைப்பது பைபாஸ் அறுவை சிகிச்சை.
மினிமல் இன்வேஸிவ் அறுவை சிகிச்சை முறை எவ்வாறு செய்யப்படுகிறது?
ஐந்து முதல் ஏழு செ.மீ., வரை மார்புப் பகுதியில் சிறு துளையிட்டு, சிறிய மைக்ரோ கேமரா உதவியுடன், மானிட்டரில்
இதயத்தை பார்த்துக் கொண்டே அங்குள்ள ரத்தக் குழாயின் அடைப்பு அல்லது வால்வு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இதய வால்வு பிரச்னை வந்தால் என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்?
ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும் இதய வால்வுகள், வயதாகும்போது வலுவிழந்து சரியாக செயல்படாது. இதனால் பழுதடைந்த வால்வுகளை மாற்றுவது அவசியம். இளம் வயதினருக்கு இப்பாதிப்பு வந்தால், வால்வுகளை மாற்றுவதைவிட சீரமைப்பது நல்லது.
எவ்வகையான இதய நோய்க்கு பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும்?
இதயத்துடிப்பு சீரற்று பலவீனமாக இருந்தால், பேஸ்மேக்கர் எனும் சிறிய எலக்ட்ரானிக் கருவியை மார்பில் பொருத்த வேண்டும். மின் அதிர்வுகளை இதயத்திற்கு அனுப்புவதன் மூலம், சீரற்ற இதயத் துடிப்பை பேஸ்மேக்கர் சரி செய்யும்.
யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் அபாயம் உண்டு?
சிறுவயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள் தவிர, பரம்பரை காரணமாகவும் மாரடைப்பு வரலாம்.
இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை?
புகை, மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் காய்கறிகள்,
பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சைக்குப்பின் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய
முதலுதவி என்ன?
வெளியே செல்லும்போது, மாத்திரைகளை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். இதயவலி அல்லது தலைசுற்றல்,
மூச்சுத்திணறல் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
- எம்.எம்.யூசுப்,
இதய நுண்துளை
அறுவை சிகிச்சை நிபுணர்.
சென்னை

