உறவு மேலாண்மை: நெருங்கி பழகினால் ஹார்ட் அட்டாக் வரும்
உறவு மேலாண்மை: நெருங்கி பழகினால் ஹார்ட் அட்டாக் வரும்
PUBLISHED ON : அக் 26, 2016

பால்ராஜ், வீட்டில் யாருடனும் சரியாகப் பேசுவதில்லை. மூன்று வாரங்களுக்கு முன் தன்னுடைய வேலையையும் ராஜினாமா செய்து விட்டார். காரணம் எதுவும் சொல்லவில்லை. 'சரி, என்னிடம் சொல்ல வேண்டாம்; ஒரு மனநல ஆலோசகரிடம் பேசினால் ரிலீப் கிடைக்கும், போகலாம்' என்று மனைவி அழைத்த போதும் மறுத்துவிட்டார். இப்படியே இருந்தால் என்னவாகுமோ என்ற பயத்தில் எனக்கு போன் செய்தார், அவரின் மனைவி. 'அவரை உங்களிடம் அழைத்து வர முடியும் என்று தோன்றவில்லை; நீங்கள் நேரடியாக என் வீட்டிற்கு வர முடியுமா?' என்று கேட்டார். அவரின் வீடும்
அம்பத்துாரிலேயே இருப்பதால், 'சரி' என்றேன். முதலில் பேசுவதற்கே தயங்கினார். என்னை தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். அவர் போக்கிலேயே பேசியதைத் தொடர்ந்து, 'ரிலாக்ஸ்' ஆனார். 'என்ன ஆச்சு, சார்? ஏன் வேலையை ரிசைன் பண்ணீட்டீங்க?' என்று கேட்டபோது, 'சார், என் க்ளோஸ் பிரண்ட் சார் அவன். என்னைவிட சின்னவன்; 38 வயசு தான் ஆகுது. திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டான். நானும் அவனும், 10
வருஷத்துக்கு மேலே பழகுறோம்; சேர்ந்து சாப்பிடுவோம்; எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். அவனுக்கு இப்படி ஆயிடுச்சே. எனக்கும் அதே மாதிரி வந்துடுமா?' என்றார்.
குரலில் இயலாமை, பயம், நடுக்கம் எல்லாம் இருந்தது. இந்த பயம் வந்ததில் இருந்து வீட்டிற்குத் தெரியாமல் ஒவ்வொரு மருத்துவமனையாகப் போய் நிறைய டெஸ்ட்டுகள் எடுத்திருக்கிறார். எல்லாம் நார்மல். எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் அவருக்கு பயம் போகவில்லை. இதற்கு, 'ஹெல்த் ரிலேடட் ஆன்சைட்டி' என்று பெயர். இந்த மாதிரி சூழலில் அவர் இருந்த போதுதான், உயரதிகாரி இவரை அழைத்து, அலுவலகத்தில் சில கூடுதல் பொறுப்புகளைக் தந்திருக்கிறார். தனக்கு, 40 வயதிற்கு மேலாகிவிட்டது. பையன் கல்லுாரியில் படிக்கிறான்.தன் பாதுகாப்பில் இருக்கும் வீட்டை பொறுப்போடு நிர்வகிக்க வேண்டும். தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே, கூடுதல் பொறுப்புகளை தன்னால் ஏற்க
முடியாது என்று சொல்லிவிட்டார்.தொடர்ந்து பயத்திலேயே இருந்ததால் தலைவலி, படபடப்பு, வயிற்றுப் பிரச்னை, துாக்கமின்மை என்று பல பிரச்னைகள். எதிலுமே ஆர்வம் இல்லாமல் இருந்ததால் குளிப்பது, 'ஷேவ்' செய்வது போன்ற சுய வேலையை கூட சரியாக செய்யவில்லை.
'தற்கொலை எண்ணம் வருகிறதா?' என்றதற்கு, 'அதெல்லாம் செய்ய மாட்டேன்; என் குடும்பத்தோடு தான் இருப்பேன்' என்றார். இதுபோன்ற மனப் பிரச்னையில் இருக்கும் போது, எத்தனை நல்ல விஷயங்கள் நடந்தாலும், எதிர்மறையாக நடக்கும் ஒரு சில விஷயங்கள் மட்டுமே பார்த்து, எல்லாமே தனக்கு எதிராக நடக்கிறது என்ற பயம் தோன்றும்.எதிலும் நம்பிக்கை இல்லாமல் பயம் மட்டுமே இருப்பதால், உறவுகளிலும் சிக்கல் வரும். இதை புரிந்து கொண்டு பொறுமையாக கையாள, உறவுகளுக்கும் தெரியாது. இவருக்கு ஒருங்கிணைந்த, அதாவது உடல், மனம் இரண்டையும் சரி செய்யும் ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்பட்டது. நடத்தை மாற்ற சிகிச்சை, தசை தளர்வு பயிற்சி, மூச்சுப் பயிற்சியுடன் தேவையான மனநல ஆலோசனைகளையும் வழங்கினேன். கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்த போது, 20 வருடங்களாக பணி செய்த அலுவலகத்தில் மீண்டும் வேலையில்
சேர அழைப்பு வந்தது.
பி.இளையராஜா, மனநல ஆலோசகர்
99623 46966
