PUBLISHED ON : மே 18, 2016

உறவுகளை கையாள்வது ஒரு கலை. ஒரு தேர்ந்த நிர்வாகியாக இருப்போரால் தான், தங்களின் உறவுகளை ஆரோக்கியமாக கையாள முடியும். உறவுகளை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்களோடு, தங்களை சந்தித்தவர்களின் அனுபவங்களை, இந்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர்.அந்த தம்பதி என்னை சந்திக்க வந்தபோது, காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதைப் போல என்று சொல்வோமே, அதைப் போன்றதொரு அவசரத்தில் இருந்தனர். இருவருமே நன்கு படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள். விஷயம் இதுதான். ரகசியமாக... பிளஸ் 2 படிக்கும் மகனின் மொபைல் போனை, அவனுக்குத் தெரியாமல் எடுத்து பார்த்ததில், உடன் படிக்கும் மாணவியுடன் பரிமாறிக் கொண்ட, தனிப்பட்ட தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அந்த குறிப்பிட்ட மாணவி குறித்து, பிரின்சிபாலிடம் புகார் செய்யலாமா? அல்லது இந்த விஷயத்தை வேறு மாதிரி எப்படி கையாளலாம் என்று கேட்பதற்காக வந்திருந்தனர்.
வளர்ந்த பிள்ளையின் தனிப்பட்ட விஷயங்களை, அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பது தவறு; அநாகரிகமானது. 'நல்ல வேளை, புகார் செய்வதற்கு முன் என்னைக் கேட்க வேண்டும் என்றாவது தோன்றியதே?' என்று நினைத்தபடி, அவர்களிடம், 'இன்றைய சூழலுக்கு ஏற்ப பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று மொபைல் வாங்கிக் கொடுத்தது சரி. ஆனால் என்ன செய்கிறான் என்பதை, அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பது என்பது சரியான அணுகுமுறை இல்லை' என்றேன்.நம்பிக்கை போய்விடும்அம்மாவும், அப்பாவும் தனக்குத் தெரியாமல், தன்னை கண்காணிக்கின்றனர் என்று தெரிந்தால், உங்கள் மேல் அவனுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும். பல குழந்தைகள், தங்களின் லேப் டாப், மொபைல் போன் போன்றவற்றை பாஸ்வேர்ட் போட்டு வைக்கின்றனர். உங்கள் மகன் அப்படிச் செய்யவில்லை. வீடு, தனக்கான பாதுகாப்பான இடம், இங்கு தனக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று நம்புகிறான். அவனுடைய மொபைல் போனில் இருந்த தகவல்களை பார்த்ததாகவே காட்டிக் கொள்ள வேண்டாம். படிப்பில் மற்ற நடவடிக்கையில் கவனமாக இருக்கிறான். எந்தப் பிரச்னையும் இல்லை என்றால், இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் விட்டுவிடுங்கள் என்றேன். அந்த தம்பதிக்கு இதில் முழுமையான திருப்தியில்லை. 'எப்படி டாக்டர், ஏதாவது தவறு நடப்பதற்கு முன் தடுக்க வேண்டாமா?' என்றனர்.
நீங்கள் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், குழந்தைகளோடு நட்புரீதியான ஒரு இணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால், அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அவனுக்கு வந்திருக்கும். யாருடனாவது ஸ்பெஷல் நட்பு இருந்தாலும் மறைக்காமல்
உங்களிடம் பகிர்ந்து இருப்பான். உங்களுக்கு சந்தேகம் வரும் சமயத்தில் மட்டும் அதிகமாக ரியாக்ட் செய்தால் விபரீதமான விளைவுகளையே தரும் என்று விளக்கினேன். அந்தப் பையன் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, இன்று மருத்துவக் கல்லூரியில் படிக்கிறான். அவன் தோழி வெளிநாட்டில் மருத்துவம் படிக்கிறாள். ஓராண்டு கழித்து, என்னிடம் வந்த அந்த தம்பதியினர், இந்த தகவலை சொல்லிவிட்டு இப்போதும் வாட்ஸ் ஆப்பில் பிரத்யேக, நெருக்கமான தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுவதாகவும் சொன்னார்கள். சிரித்துக் கொண்டேன்.
.

