
ஜனவரி 15, 2016:அவர் பெயர் மரியா 35 வயது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை. ஆனால், இவருக்கு இருக்கும் பிரச்னையே நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி. பல மாதங்களாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்த மரியா, ஜனவரி 5ம் தேதி காலை 10:00 மணிக்கு என்னை வந்து சந்தித்தார். முதல் நாள் மாலை தலைவலி அதிகமாக இருக்கவே, அருகில் உள்ள டாக்டரிடம் சென்று காட்டியிருக்கிறார். அவர் மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலிக்கு எழுதி தந்த மருந்துகளால், எந்த பலனும் கிடைக்கவில்லை. என்னை சந்தித்தபோது, கடுமையான ஒற்றைத் தலைவலியுடன் வாந்தியும் இருப்பதாக சொன்னார். அதோடு பார்க்கும் அனைத்தும், இரட்டையாக தெரிவதாகவும் தெரிவித்தார்.
என் வாழ்நாளில், இதுவரை இதுபோன்று ஒரு தலைவலியை நான் அனுபவித்ததே இல்லை என கூறினார். நானும் அவரை பரிசோதித்தேன். அவருக்கிருந்த பிரச்னை மைக்ரேன் தானா என உறுதியாக என்னால் கணிக்க முடியவில்லை. எனவே, மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து வரும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதை அறிய, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து வரும்படி அனுப்பினேன். பரிசோதனையில், மரியாவின் பிரச்னை தெளிவாக தெரிந்தது. மூளையிலிருந்து ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தது. இதை, 'செரிபிரள் வீனஸ் த்ராம்போசிஸ்' என்பர். அதாவது ரத்தம் அதிகமாக உறையும் தன்மை என்று பொருள். உடனே மரியாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எதனால் ரத்தம் அதிகப்படியாக உறையும் தன்மையில் உள்ளது என்ற காரணத்தை கண்டுபிடித்தோம். ரத்தம் உறைவதை தடுக்க உதவும், ஆன்டி த்ராம்பின் எனப்படும் புரதம் குறைந்திருப்பதே மரியாவின் பிரச்னைக்கு காரணம். எனவே, ரத்தம் உறையாமலிருக்க மருந்துகள் கொடுத்தேன். இதில் சிக்கல் என்னவென்றால், செரிபிரள் வீனஸ் த்ராம்போசிஸ் பிரச்னைக்கு, வாழ்நாள் முழுவதும் ரத்தம் உறையாமை மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெற வேண்டும். சிலருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது சிகிச்சை தேவைப்படும். தீவிர சிகிச்சைக்கு பின், மரியாவின் உடல்நிலை சீரானது. இப்போது அவரை துன்புறுத்தும் அந்த ஒற்றைத் தலைவலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது என குதூகலிக்கிறார்.செரிபிரள் வீனஸ் த்ராம்போசிஸ், மைக்ரேன் இரண்டிற்கும் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும். பரிசோதனைகள் மூலமே இதை உறுதி செய்ய முடியும். தேவையற்ற பரிசோதனைகளை டாக்டர்கள் எடுக்கச் சொல்கின்றனர் என்று, மக்கள் மத்தியில் பொதுவாகவே ஒரு எண்ணம் உள்ளது. அது தவறு. நோயை உறுதி செய்து கொள்ள, சில பரிசோதனையின் முடிவுகள் அவசியம். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
கே.ஆர்.விஜய் சக்ரவர்த்தி
பொது நல மருத்துவர்.சென்னை.97513 10211

