PUBLISHED ON : ஜூலை 20, 2016

நட்பைத் தேர்வு செய்வதிலும், குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்.தற்போது கல்லுாரியில் படித்துக் கொண்டிருக்கும் இளம்பெண் அவர். சிறிய வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மா பள்ளி ஆசிரியை. இவள் ஒரே பெண். அப்பாவின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் நல்ல வசதியாக இருந்தாலும், இவளையும் அம்மாவையும், யாரும் கண்டு கொள்வதேயில்லை. இவள் அம்மாவின் உடன்
பிறந்தவர், ஒரே சகோதரர். தன் சகோதரிக்கும் அவளின் மகளுக்கும், எந்த ஆதரவும் இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில், திருமணமே செய்து கொள்ளாமல் இவர்கள் கூடவே வந்து தங்கிவிட்டார். அம்மாவும் இவளும், தனியாக இருக்கும் சமயங்களில் எல்லாம் இவள் அம்மா, 'நம்ம நிலைமை கேட்க நாதியில்லாமல் இப்படி ஆயிடுச்சே...' என்று வருத்தத்துடன் சொல்வது வழக்கம். நமக்கென்று யாரும் இல்லை என்ற எண்ணம் இந்தப் பெண்ணின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. கல்லுாரியில் சேர்ந்த முதல் நாள், வகுப்புத் தோழி ஒருவர் இவரிடம் சகஜமாகப் பேச, இவளுக்கும் அவளை மிகவும் பிடித்துவிட்டது.நாளடைவில் இருவரும் நெருங்கிய தோழிகளா னர். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வது வழக்கம். தன் தோழியிடம் இந்தப் பெண், தன் ஆதங்கம், குடும்ப நிலைமை என்று அனைத்தையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள். கல்லுாரி, ஷாப்பிங் என்று எப்போது வெளியில் சென்றாலும் தனக்குத் தெரிந்தவர் என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரை அழைத்து வருவார் தோழி. துவக்கத்தில் ஆட்டோ டிரைவருக்கும், தோழிக்கும் நெருக்கான உறவு இருக்குமோ என்று சந்தேகப்பட்டார் இந்தப் பெண்; அதை ஒருநாள் கேட்டும் விட்டார். ஆனால் தோழியோ, 'இல்லை இல்லை, அவருக்கு உன்னைத் தான் ரொம்ப பிடித்திருக்கிறது; உன்னிடம் சொல்லத் தயங்குகிறார்' என்று சொன்னதை நம்பி, டிரைவருடன் இந்தப் பெண் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். வாடகை ஆட்டோ ஓட்டுவதைத் தவிர வேறு எந்தப் பொருளாதார பின்னணியும் இல்லாத அவர், இந்தப் பெண்ணை ஒருநாள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல, வீட்டில் இருப்பவர்கள் இவள் மேல் அன்பைப் பொழிய, அப்படியே நெகிழ்ந்து போய்விட்டாள். 'எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்வோம்; நீ உன் படிப்பை விட வேண்டாம். உன் அம்மா, மாமாவிடம் பேசி, 50 சவரன் நகையும், 30 லட்சம் ரூபாயும் வாங்கி வா; 2 கார்கள் வாங்கி வாடகைக்கு ஓட்டுகிறேன். உன்னையும் மாமா, அம்மாவையும் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்று டிரைவர் சொன்னதை அப்படியே நம்பி தன் அம்மாவிடம் பேச, அதிர்ந்து போய்விட்டார் அவர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இந்த பெண் பிடிவாதமாக இருந்த நிலையில் தான், என்னிடம் அழைத்து வந்தனர். அந்த பெண்ணின் தாயிடம் தனியாக, 'இந்த வயதில் நாம் சொல்வதை முழுமையாக புரிந்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்காது; நீங்கள், அந்த டிரைவரை பற்றிய முழு விவரங்களையும், ஒரு தனியார், 'டிடெக்டிவ் ஏஜன்சி' உதவியுடன் சேகரியுங்கள்' என்றேன்.கிடைத்த தகவல்களைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டனர். இந்த ஆட்டோ டிரைவருக்கும் இவளின் தோழிக்கும் ஏற்கனவே பதிவுத் திருமணம் ஆகியிருக்கிறது. ஆட்டோ டிரைவர், அவன் குடும்பம், இவளின் நெருங்கிய தோழி என்று அனைவரும் சொத்துக்களை அபகரிப்பதற்காக போட்ட திட்டம் இது. விஷயத்தை இவளிடம் சொன்னவுடன், 'என் வாழ்கையே நாசமாகிவிட்டது' என்று அழுது புரண்டாள். 'உனக்கு ஒரு இழப்பும் இல்லை; இந்த அளவோடு தப்பித்தோமே என்று சந்தோஷப்படு. முக்கியமாக நமக்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தை உன் மனதில் இருந்து முற்றிலும் எடுத்துவிடு. அவநம்பிக்கை தான் பல நேரங்களில் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தும்' என்றேன்; அவளும் புரிந்து கொண்டாள்.
டாக்டர் வி.ஜெயந்தினி
மனநல சிறப்பு மருத்துவர்
