PUBLISHED ON : ஜூலை 20, 2016

உமாவுக்கும் - ரகுவிற்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. தான் தாயாகப்போகும் தருணத்தை எதிர்பார்த்திருந்த வேளையில், உமாவிற்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு, அதிக வலி ஏற்பட்டது. அதனால் என்னிடம் வந்தனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ததில், சப்மியுகோசல் பைப்ராய்டு (Submucosal Fibroid) அதாவது கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் தசைக்கட்டி இருப்பது தெரிந்தது. ஃபைப்ராய்டு கட்டிகள் கர்ப்பப்பையில் எங்கு
வேண்டுமானாலும் ஏற்படலாம். மருத்துவரீதியில் இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதில் முதல் வகை, கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் வரக்கூடிய, சப்சிரோசல் எனும் பைப்ராய்டு; இரண்டாவது வகை இன்ட்ராமியூரல் பைப்ராய்ட்; இது கர்ப்பப்பையின் வெளிப் பகுதி மற்றும் உட்சுவரில் வரக்கூடியது. மூன்றாவது வகை சப்மியுகோசல் பைப்ராய்ட்ஸ் இது கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வரும். இதன் அறிகுறி மாதவிடாய் நாட்களில், அதிக வலி, அதிக ரத்தப் போக்கு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மலச்சிக்கல், கட்டி பெரிதாக இருந்தால், பக்கத்து உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு சில தொந்தரவுகள் ஏற்படலாம். பெரும்பாலானோருக்கு வருவது, உட்சுவரில் ஏற்படும் சப்மியூகோசல் எனப்படும் கட்டிகள்தான்.
சப்சிரோசல் கட்டிகளுக்கு சிகிச்சை தேவையில்லை. காரணம், இதனால் பெரிதளவில் பாதிப்பேதும் இல்லை. இன்ட்ராமியூரல் வகை கட்டிகளை லேப்ராஸ்கோபிக் மயோமெக்டமி (laparoscopicmyomectomy) மூலமாக எளிதில் அகற்றலாம். சப்மியூகோசல் கட்டிகளை அகற்ற, ஹிஸ்டெரோஸ்கோபிக் மயோமக்டமி என்ற சிகிச்சை செய்யலாம். இதனால் வலியோ பாதிப்போ ஏற்படாது. ஆரோக்கியமான உணவுமுறை, முறையான உடற்பயிற்சி இருந்தால், ஃபைப்ராய்டு கட்டிகள் மட்டுமல்லாது, கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கலாம். உமாவிற்கு ஏற்பட்ட, சப்மியூகோசல் கட்டிகளை அகற்ற, ஹிஸ்டெரோஸ்கோபிக் மயோமக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, உமா நலமாக இருக்கிறார்.
எஸ். புஷ்பலதா
மகளிர் சிறப்பு நிபுணர்.
சென்னை.
