sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மனசை ரிலாக்சா வச்சுக்குங்க... எல்லாம் இனிதாய் நடக்கும்; தற்கொலை எண்ணம் வராது!

/

மனசை ரிலாக்சா வச்சுக்குங்க... எல்லாம் இனிதாய் நடக்கும்; தற்கொலை எண்ணம் வராது!

மனசை ரிலாக்சா வச்சுக்குங்க... எல்லாம் இனிதாய் நடக்கும்; தற்கொலை எண்ணம் வராது!

மனசை ரிலாக்சா வச்சுக்குங்க... எல்லாம் இனிதாய் நடக்கும்; தற்கொலை எண்ணம் வராது!


PUBLISHED ON : செப் 14, 2014

Google News

PUBLISHED ON : செப் 14, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் ஆண்டுக்கு, எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு, 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. ஆண்டுக்கு, 1.35 லட்சம் தற்கொலைகள் என, உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதில், 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன. வளர்ச்சி பெற்ற மாநிலமான, தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில்

இருப்பது, கவலை தரும் செய்தி.உலக தற்கொலை தடுப்பு நாள், செப்., 10ஐ அனுசரித்துள்ள நிலையில், 'எப்போதும் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ளுங்கள்; பிரச்னைகளைக் கண்டு பயம் வேண்டாம்; மனம் விட்டு பேசுங்கள், தற்கொலை எண்ணமும் வராது'

என்கிறார், அரசு மருத்துவமனை, மனநல நிபுணர் ஆனந்த் பிரதாப். கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்:

1சிறு சிறு பிரச்னைகளுக்கு எல்லாம் தற்கொலை என, செய்தி வருகிறதே? இந்த நிலைக்கு என்ன காரணம்?

பொதுவாக குடும்ப பிரச்னை, நோய், வரதட்சணை, போதை மருந்து, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வறுமை, வேலை இல்லாத பிரச்னை, நெருங்கிய உறவுகள் மரணம், சமூகத்தில் மதிப்பு குறைதல், கடன், பொருளாதார வீழ்ச்சி என, 11 காரணங்கள், தற்கொலைக்கு முன் வைக்கப்படுகின்றன.சிறு சிறு காரணங்களுக்கு எல்லாம் தற்கொலை நடப்பது அதிகரித்துள்ளது. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததே முக்கிய காரணம்.



2 மன அழுத்தம், தற்கொலை வரை கொண்டு செல்லுமா?


பல்வேறு உடல் நல பாதிப்புக்கு, மன அழுத்தமே காரணம். பணியிடத்தில் தொடர் நெருக்கடி, குடும்ப பிரச்னைகள் என, பல வகையில் மன அழுத்தம் வரலாம். இது போன்ற சூழலில், மற்றவர்களுடன் கலந்து பேசினால், மன அழுத்தம் குறையும். ஆனால், பலர் வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பது, நாளடைவில், தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.

3 காதல் தோல்வியால், அதிகம் தற்கொலை நடக்கிறதா? ஆண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வது ஏன்?

காதல் தோல்வியால், தற்கொலை செய்து கொள்வோர் அதிகம் என்ற கருத்து தவறானது. இது, 3.2 சதவீதமே. குடும்ப பிரச்னையால், 25.6 சதவீதம்; உடல் நலக்குறைவால், 20.8 சதவீதம் தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலை செய்து கொள்வோரில், 66.2 சதவீதம் பேர் ஆண்களே.

பொதுவாக, பெண்கள் ஆரம்ப காலத்தில், பெற்றோர், அடுத்த கட்டத்தில் கணவர், வயதான காலத்தில், மகனை சார்ந்து வாழ்கின்றனர். குடும்பத்தில் மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்பு, ஆண்களிடம் உள்ளது. இதனால் நெருக்கடி, மன அழுத்தத்திற்கு

ஆளாகின்றனர். அதனால், தற்கொலை செய்வோரில், ஆண்கள் அதிகம் உள்ளனர்.

4 பொதுவாக, யார் யார், தற்கொலைக்கு முற்படுகின்றனர்?

குடி, போதைக்கு அடிமையானோருக்கு, சிறு பிரச்னை என்றாலும், திடீரென தற்கொலை எண்ணம் வந்து விடும். அவர்களை போதையில் இருந்து மீட்பது அவசியம். திருமணமாகாமல் தனிமையில் இருப்போர், ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முற்படுகின்றனர்.

மனச்சிதைவு நோய், தீராத நோய், கேன்சர் போன்ற பாதிப்புள்ளோருக்கும், இந்த எண்ணம் வருகிறது. மருத்துவ சிகிச்சையுடன், மன நல சிகிச்சையும் அளிக்க வேண்டும்.



5 கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமா?


ஆம். கூட்டுக் குடும்பத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்து ஆலோசித்தனர். ஒருவரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டால், பாட்டி, தாத்தாவும் அவர்களை அழைத்து கனிவாக பேசி, பிரச்னைகளை அறிந்து தீர்வு காண்பர். தற்போது, கூட்டுக் குடும்ப முறை சிதைந்து, தனிக்குடும்பம் அதிகரித்து விட்டது. பிரச்னைகளை மனம் விட்டு பேச வழியில்லாததால்,

தற்கொலை எண்ணம் அதிகமாகிறது. கூட்டுக் குடும்ப நிலைக்கு திரும்புவது அவசியம்.

6 தற்கொலை எண்ணம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? முன்கூட்டியே அறிய முடியுமா?

சற்று நேரம் யோசிக்காமல், அவசர கதியில் தற்கொலை முடிவு எடுக்கின்றனர். தற்கொலைக்கு

முயற்சித்தோர், மருத்துவமனையில் உயிருக்கு போராடும் போது, அவசரப்பட்டு இப்படி முடிவு செய்து விட்டேனே; எப்படியாவது உயிர் பிழைத்து விடக் கூடாதா என, நினைக்கின்றனர்.

பிரச்னைகளுக்கு தீர்வு உண்டு. மற்றவர்களுடன் கலந்து, மனம் விட்டுப் பேசுங்கள்; சிக்கல் தீரும். ஒருவர் வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாறுபடுகிறார் என்றால், சிக்கல் உள்ளது என, உணர வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள் அவர்களிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை அறிந்து, தீர்வுக்கு முயற்சிப்பது நல்லது.

7 ஆலோசனை தர, உதவிக்கரம் நீட்ட அரசு ஏதாவது செய்துள்ளதா?

சினேகா போன்ற பல்வேறு உதவி மையங்கள் உள்ளன. தொடர்பு கொண்டால், பல்வேறு சிக்கல்கள் தீரும். தமிழக அரசு, '104' தொலைபேசி வழி மருத்துவ சேவைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இங்கு தொடர்பு கொண்டால், மன அழுத்தம் போக்கவும், தற்கொலை எண்ணம் மாறவும் நல்ல வழி வகைகள் கிடைக்கும். நிறைய பேர் பயன்பெற்று வருகின்றனர்.

8 மன நல மருத்துவர் என்ற முறையில், உங்களின் பொதுவான அறிவுரைகள் என்ன?

எவ்வளவு பெரிய பிரச்னைகள் என்றாலும், பக்குவமாக கையாண்டால் எளிதாக மீளலாம். எப்போதும், மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ள வேண்டும். இழந்து போன ஒன்றையோ, தவற விட்ட ஒன்றையோ நினைத்துக் கொண்டே இருக்காமல், அடுத்த இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். இது, நம் சிந்தனையை மேம்படுத்தும். நேர்மையாக, ஒழுக்கமான முறையில் வாழும்போது தற்கொலை எண்ணம் வராது.முறையான உணவு, மன இறுக்கத்தை போக்கும் உடல் பயிற்சி, மன பயிற்சி, யோகாசனம் போன்ற பயற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும். இயந்திரத்தனமாக வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருப்போர், வாரத்திற்கு ஒரு முறையாவது அதில் இருந்து விலகி, குடும்பத்தினரோடு கடற்கரை பகுதிக்கு செல்வது, உறவினர் வீடுகள் செல்வது, குறைந்தபட்சம், அருகில் உள்ள பூங்காக்களுக்கு சென்று வருவது நல்லது; மனம், ரிலாக்சாகும்.அதையும் மீறி பாதிப்புகள் தொடர்ந்தால், மன நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.



எம்.ஆனந்த் பிரதாப்,


மன நல நிபுணர், நிலைய மருத்துவ அதிகாரி

அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, சென்னை.






      Dinamalar
      Follow us