புதுப்புது அர்த்தங்கள் - இல்லத்தில் விட்டுக் கொடுக்காதீர்கள்
புதுப்புது அர்த்தங்கள் - இல்லத்தில் விட்டுக் கொடுக்காதீர்கள்
PUBLISHED ON : நவ 26, 2014

கணவன் என்பவனும், மனைவி என்பவளும் தனித்தனி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எப்போது ஒருவர் தனிமனிதன் என்று ஒப்புக் கொள்கிறோமோ, அப்போதே அவர்களுக்கென தனித்தனியான உரிமைகள், எண்ணங்கள், கருத்துக்கள், முடிவுகள், அபிப்ராயங்கள், ரகசியங்கள் என்று ஆகிவிடுகிறது. எனவே ஒத்துப்போவது என்பது இயலாது.
இதனால், 'என் கருத்திற்கு மற்றவர் ஒத்துப்போக வேண்டும்' என்று எதிர்பார்ப்பதை விட, ஒருவரின் தனித்துவத்தை பாராட்டத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தனித்துவத்தை போற்றி பாராட்டும்போது, பிடித்தது, பிடிக்காதது, ஏற்புடையது, மறுப்புடையது என்பதெல்லாம் இருக்கத்தான் செய்யும். அதற்கு, அவர்களுக்கு உரிமை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கருத்துப்பரிமாற்றம் மூலம், கணவன் மனைவிக்கிடையில் புரிதல் தானாக ஏற்படும். அந்நியோன்யம் அதிகமாகும். வெற்றி, தோல்வி இல்லாமல் போகும். இதை செயல்படுத்தும்போது, தோற்பது போல் தோன்றுமே தவிர, வெற்றிதான் பரிமளிக்கும்.
ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டால், அங்கே விட்டுக் கொடுப்பதற்கு இடமில்லை. 'விட்டுக் கொடுத்தோம்' என்று உணரும்போதும், 'விட்டுக் கொடுக்கப்பட்டோம்' என்று தெரியும்போதும் அவமானம்தான் ஏற்படும். அதனால், ஆத்திரம் மேலோங்கும்; குரோதம் வெளிப்படும். இவைதான் பிணக்குகளுக்கு காரணமாகும். இல்லற வாழ்வைப் பொறுத்தவரை, ஒருவர் தோற்று இன்னொருவர் ஜெயிப்பதை விட, இருவருமே ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
- திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.

