புதுப்புது அர்த்தங்கள்: வரிசை மீறலாம்... தப்பில்லை
புதுப்புது அர்த்தங்கள்: வரிசை மீறலாம்... தப்பில்லை
PUBLISHED ON : ஜன 21, 2015

உலகம் முறைப்படி இயங்க வேண்டும் என்பதற்காகவே, சில நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. எதுவும் ஒழுங்காக, முறையாக நடக்கும் பட்சத்தில், ஏற்றத்தாழ்வுகள் களையப்படும். இதனால், முரண்பாடுகள், சலுகைகள் ஆகியவற்றிற்கு வழி இருக்காது. இதற்காக ஏற்படுத்தப்பட்டதே வரிசை முறை! வரிசை முறையில், வலியவன், எளியவன் என்ற பாகுபாடு அறவே இருக்காது.
பொதுவாக, பயன்களும், பயன்பெறும் நபர்களும், எண்ணிக்கையில் ஒத்துப் போகும்போது 'இல்லாமை' என்பது இருக்காது. ஆனால், இருப்பவைகளுக்கும், பெறுபவர்களுக்குமான எண்ணிக்கை மாறுபடும் போது, இல்லாமை ஏற்பட வாய்ப்புண்டு. அந்த சூழ்நிலையில், பயன்பெறுவதற்கு போட்டி ஏற்படுகிறது. எனவே முன்னவர் யார், பின்னவர் யார் என்று பிரித்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதை வைத்தே, முன்னுரிமை தரப்படுகிறது. இதனால், ஒழுங்கீனங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையில்தான், வரிசைமுறை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், 'எப்படி இருந்தாலும், பயனை பெற வேண்டும்' என்று விரும்பும் சிலரால், வரம்பு மீறுதலும், வரிசை மீறுதலும் 'சாமர்த்தியம்' என்று பாராட்டப்படுகிறது. இதனால், அநியாயம் தலைதூக்குகிறது. காத்திருப்பதும் குற்றமாகிப் போகிறது.
ஆகையால், வரிசையை மீறுவதில் தவறில்லை! ஆனால், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் மீற வேண்டும். அதுவே, இன்றைய உலகத்தோடு ஒட்ட ஒழுகல்!
- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்.

