PUBLISHED ON : மார் 30, 2025

நவீன வாழ்க்கை முறைகளால் உலகெங்கும் பெருங்குடல், மலக்குடல் கேன்சர் உட்பட, எல்லா வகை புற்று நோய்களும் அதிகரித்து வருகின்றன.
மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் குடல் கேன்சர் பாதிப்பு குறைவு என்றாலும், மாறி வரும் நம் வாழ்வியல் பழக்கங்களால் சமீப காலமாக நம் நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. பொதுவாக, 50 வயதுக்கு மேல் பாதிக்கும் இந்நோய், நம் நாட்டில் 40 - -45 வயதுள்ளவர்களைக்கூட தாக்குகிறது.
குடல் புற்று நோய் (கோலான் கேன்சர்) முற்றிய நிலையில் கண்டறிவதால், பாதித்த மூன்றில் இரண்டு பேர் அந்த ஆண்டிலேயே உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.
கோலனாஸ்கோப்பி பரிசோதனை
கேன்சராக மாறும் முன், பல ஆண்டுகளாக இது பெருங்குடல் உள்பக்கம் சிறு மரு (பாலிப்) போல் தோன்றி மெல்ல வளரும். இது, எந்த வித உபாதையும் தராது. இந்த நிலையிலேயே, 'கோலனாஸ்கோப்பி' பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும்.
தடுக்கும் வாழ்வியல் முறைகள்
உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல். சீரான உடற்பயிற்சி, புகையிலை தவிர்ப்பு, அதிக மது அருந்தாமல் இருத்தல், மாமிச உணவுகளை குறைத்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள், காய்கறிகள் உண்ணுதல்.
இவற்றையும் மீறி நம்மில் சிலருக்கு பாலிப் உருவாகி, அது வளர்ந்து கேன்சராக மாறலாம். இதனால் பரிசோதனைகள் அவசியம்.
யாருக்கு அவசியம்?
குடும்பத்தில் யாருக்கேனும் கோலான் கேன்சர் குறிப்பாக, 50 வயதுக்கு முன்னதாகவே கோலான் கேன்சர், மார்பகம், தைராய்டு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு, நாள்பட்ட குடல் அழற்சி இருந்தால், கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்று, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு கோலனாஸ்கோப்பி பரிசோதனை அவசியம். இத்துடன், சில சமயங்களில் மலத்தில் கலந்த ரத்த பரிசோதனை, சி.டி., ஸ்கேன் செய்வதும் அவசியம்.
கண்டறிவது எப்படி?
மலப்பழக்கம் அண்மையில் மாறி இருந்தால், அது சில வாரங்கள் நீடித்தால், அதைப் பற்றி கூச்சப்படாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அறிகுறிகள்
புதிதாய் அடிக்கடி பேதியாய் மலம் கழிப்பது, மலத்தின் வடிவம் மெலிதாய், கடினமாய் மாறி வருவது, மலத்தில் ரத்தம் கலந்து வருவது,
அவசரமாய் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, இவற்றோடு உடல் சோர்வு, எடை குறைவு, வயிறு வலி, உப்புசம், துாக்கம் கலைந்து இரவில் எழுந்து மலம் கழிப்பது போன்ற அறிகுறிகள், 40 வயதிற்கு மேல் வந்து, சில வாரங்கள் நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத ரத்த இழப்பால், ரத்த சோகை, -ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கலாம்.
ரத்த விருத்தி மருந்துகள் எடுத்துக் கொள்ளும் முன், இதற்கான காரணம் அறிய மருத்துவ ஆலோசனை அவசியம்.
வழக்கமான அறிகுறிகளை தவிர, ஆணுக்கு எந்த வயதிலும், பெண்ணுக்கு மாதவிடாய் இல்லாத வயதுகளில் இரும்புச்சத்து குறைபாடு, பரிசோதனையின் போது வயிறு, மலக்குடலில் கட்டி, எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனையில் குடல் கட்டி இருந்தால், கோலனாஸ்கோப்பி பரிசோதனை செய்ய டாக்டர் பரிந்துரைக்க வேண்டும்.
கோலான் பாலிப் வளர்ந்து கேன்சராகி நம்மை வீழ்த்தும் முன், வாழ்வியல் மாற்றங்கள், சரியான நேரத்தில் பரிசோதனைகள் செய்தால் இந்நோயை எளிதாக வெல்லலாம்.
டாக்டர் கே.ஆர்.பழனிசாமி,
செரிமான மண்டல சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை080622 07720info@appollohospitals.com