
சத்தியமூர்த்தி, மதுரை: இதய அடைப்பு உள்ளவர்களுக்கு 'ஸ்டென்ட்' வைக்கிறார்களே. அதுபோல் மூளை அடைப்புக்கும் வைப்பதுண்டா?
ரத்தக்குழாய்களில் அடைப்புகள் நிகழ்ந்து சரியான அளவில் ரத்தம் இதயத்திற்கோ மூளைக்கோ செல்லாமல் இருந்தால் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த தாராளமாக 'ஸ்டென்ட்' வைக்கலாம். அதற்கு முன் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் எந்த அளவு அடைப்பு உள்ளது என்பதை கண்டறிய மூளைக்கான ஆஞ்சியோ டெஸ்ட் சி.டி.ஸ்கேன் மூலமாகவோ டி.எஸ்.ஏ., ஸ்கேன் மூலமாகவோ கண்டறிய வேண்டும்.
அதன் பின் ஸ்டென்ட் வைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 70 சதவீத அடைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். இந்த அடைப்பினால் ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்திருக்க வேண்டும். இதன் பிறகே 'ஸ்டென்ட்' வைப்பது உபயோகமாக இருக்கும்.
-டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம், மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர், மதுரை
பி.திவ்யா, வேடசந்துார்: இடுப்பு வலி எதனால் ஏற்படுகிறது. தீர்வு என்ன?
ஆண், பெண் இருவருக்கும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமே எலும்பு தேய்மானம் தான்.
இடுப்பில் உள்ள டிங்க் ஜவ்வு கிழிதல், ரத்த குறைபாடு ஏற்படுதல், கால்சியம் சத்து குறைபாடு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாகும். இதில் பெண்களுக்கு கூடுதலான வெள்ளைபடுதல், கர்ப்ப கட்டிகள் இருத்தல் போன்ற காரணங்களாலும் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றால் நலம் பெறலாம்.
- டாக்டர் .எஸ்.லோகநாதன், அரசு தலைமை மருத்துவர், வேடசந்துார்
ஆர் .முத்துராயர், கூடலுார்: நான் பார்க்கும் வேலையில் நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதால் கால்வலி அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு கூறுகங்கள்?
கால்சியம் குறைவாக இருந்தால் இது போன்ற பிரச்னைகள் வரலாம். சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும். இஞ்சி டீ குடித்து வரலாம். சுடுநீர் ஒத்தடம், மசாஜ், நடைப்பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள எலுமிச்சை, நெல்லிக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை செய்யும்போது அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரிலாக்ஸ் செய்த பின்னர் மீண்டும் துவக்கலாம். வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் இருந்தால் இது போன்ற பிரச்னை வரும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தால் கால் வலியை குறைக்கலாம்.
- பூர்ணிமா, பிசியோதெரபிஸ்ட், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார், தேனி
ஆர்.மதுமதி, ராமநாதபுரம்: கோடை காலத்தில் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன. எப்படி தடுப்பது?
கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கிருமிகள் கலந்த குடிநீரை பயன்படுத்துவதாலும், கடைகளில் உணவுகளை வாங்கி பயன்படுத்துவதாலும், குளிர் சாதனங்களில் வைக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாலும், கெட்டுப்போன உணவு வகைகளை பயன்படுத்துவதாலும், கடலில் குளிக்கும் போது கடல் நீரை பருகுவதாலும் வயிற்று போக்கு, வாந்தி, வயிற்று போக்கில் ரத்தம் கலந்து வெளியேறும் நிலை ஏற்படும். கடையில் உணவு வாங்கி சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கோடை காலத்தில் குடிநீரை கொதிக்க வைத்து ஆறிய பின்னர் பயன்படுத்த வேண்டும். வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர் சத்து குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.
ஓ.ஆர்.எஸ்., கரைசலை அடிக்கடி அருந்த வேண்டும். கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கிருமிகளுக்கான மருந்து, மாத்திரைகள் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சுத்தமான பிரெஷ்ஷான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஏ.அஷிதா, பொது மருந்துவ நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
சி.அபி, சிவகங்கை: பல் சீரமைப்பு சிகிச்சை எந்த வயதில் செய்வது?
ஒரு சிலருக்கு பல் முன்புறம் நீட்டிக் கொண்டிருக்கும் அல்லது கோணலாக இருக்கும். அவற்றை சரியான வரிசைக்கு கொண்டு வரும் சிகிச்சையே பல் சீரமைப்பு சிகிச்சை. இந்த சிகிச்சை எந்த வயதிலும் மேற்கொள்ளலாம். 13 முதல் 19 வயதில் இந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது. சில குழந்தைகளுக்கு மேல் மற்றும் கீழ் தாடை எலும்பின் வளர்ச்சியில் குறைபாடு இருக்கும். அவ்வாறு உள்ள பெண் குழந்தைகளுக்கு பருவம் அடைவதற்கு முன்பு அதாவது 11 வயதிற்கு முன்பும் ஆண் குழந்தைகளுக்கு 13 வயதிற்கு முன்பும் சீரமைப்பு சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும். உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க தவறியவர்கள் அறுவை சிகிச்சையின் மூலமாகவே சரி செய்ய முடியும். பல் சீராக இல்லாதவர்கள் 10 வயதிற்கு முன்பே பல் சீரமைப்பு நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் பல் சீராக இல்லாததை உணர்ந்தாலே அருகில் உள்ள பல் டாக்டரை அணுகி அவரின் ஆலோசனை பெறவேண்டும். அவரின் ஆலோசனை படி நடந்துகொண்டால் சீரான பற்களை பெறமுடியும்.
- டாக்டர் விஸ்வநாதன், பல் சீரமைப்பு நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
அருள் வேந்தன், சாத்துார்: எனது மகனுக்கு 16 வயது ஆகிறது. சாப்பிட்டவுடன் வயிறு வலித்து மலம் கழிக்கிறார், இதை தவிர்க்க என்ன காரணம்?
இப்போது ஜங்க் புட் ,பாஸ்ட் புட் அதிக அளவில் சிறுவர்கள் உண்கிறார்கள். இதன் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம். பச்சைகாய்கறிகளையும் பழங்களை உண்பதற்கு முன் அவற்றை நன்றாக கழுவி விட்டு சாப்பிட வேண்டும். காய்கறிகள் பழங்களை சரியாக கழுவாமல் சாப்பிடும் போது அதில் இருந்து புழுக்கள் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை புழு நீக்கல் மாத்திரை சாப்பிட வேண்டும். வயிற்றில் புழு இருந்தால் அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு வரும். இவை உடலில் சேர வேண்டிய சத்துக்களை சேர விடாமல் தடுத்துவிடும் என்பதால் தற்போது பள்ளிகளில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை புழு நீக்கல் மாத்திரை வழங்க அறிவுறுத்தி வழங்கி வருகிறோம். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாலும் இது போன்ற பாதிப்பு ஏற்படும். கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவிய பின்னர் உணவு சாப்பிடவேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால் இது போன்ற பாதிப்பு ஏற்படாது.
- டாக்டர் செந்தட்டி காளை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி