அளவான உணவே நோயில்லா மருந்து அன்றே சொன்னார் திருவள்ளுவர்
அளவான உணவே நோயில்லா மருந்து அன்றே சொன்னார் திருவள்ளுவர்
PUBLISHED ON : மார் 30, 2025

''அனைத்து தொற்றா நோய்களுக்கும் அளவான உணவே மருந்து,'' என்கிறார் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
அவர் கூறியதாவது:
எந்த நோய்க்கு, எந்த உணவை உட்கொள்ளலாம் என்று பேசுவது இப்போது நாகரிகமாகிவிட்டது. சர்க்கரை நோய்க்குப் பலவிதமான உணவு முறைகளை மக்கள் (முக்கியமாக மருத்துவம் படிக்காதவர்கள், உணவுத் துறையில் இல்லாதவர்கள்) பரிந்துரைக்கின்றனர்.
யாரும் அறிந்திராத பெயர்களில், உணவு வகைகள் இருக்கின்றன. அவ்வுணவு வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த உணவு வகைகளுக்காக பல ஆயிரம் ரூபாயை செலவு செய்கின்றனர். உணவு விஷயத்தில் ஒரே ஒரு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் போதும் என, 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் கூறியுள்ளார். இது மட்டும் இருந்தால் போதும் மருந்தே வேண்டாம் என, அறிந்திருக்கிறார் திருவள்ளுவர்.
முன்பு உண்ட உணவு நன்றாகச் செரித்து விட்டது என்பதை, ஆராய்ந்து அதை உணர்ந்த பின், அடுத்த வேளை உணவை உண்டால், இந்த உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
தன் வயிற்றுப்பசி தெரியாமல், மிக அதிகமாக உண்டால் அவர் உடம்பில் நோய்கள் அளவில்லாமல் வளரும். 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்ற வார்த்தைகளை மறந்து விட்டோம்.
சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லை; அந்த வகையைச் சேர்ந்த எல்லாத் தொற்றா நோய்களுக்கும் வள்ளுவர் சொல்லும் அளவான உணவு சிகிச்சை முறையே சாலச் சிறந்தது.
சத்தான உணவுகளுடன், உங்கள் கலோரிகளை கணக்கிட்டு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், மீன் மற்றும் நல்ல கொழுப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.