PUBLISHED ON : ஜூன் 11, 2023

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கே காசநோய் - டி.பி., பாதிப்பு வரும்.
அதிலும், குடும்பத்தில் ஒருவருக்கு டி.பி., பாதிப்பு இருந்தால், அவர்கள் உடன் இருப்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் பாதிப்பு வருவதற்கான அபாயம் 25 சதவீதம் அதிகம்.
கட்டுப்பாடற்ற சர்க் கரை கோளாறு, சிறுநீரகக் கோளாறுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், 'இம்யுனோ சப்ரசன்ட்' மருந்து சாப்பிடுபவர்கள், கேன்சர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காசநோய் வருவதற்கான அபாயம், மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம்.
காசநோய் பாதித்தவருடன் தெரிந்தோ, தெரியாமலோ நெருக்கமாக இருப்பதால், தொற்று வருவது ஓராண்டில் 75 சதவீதமும், இரண்டு ஆண்டுகளில் 95 சதவீதமும் நோய் வரும் வாய்ப்பு உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூலக்கூறு அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வில், ஒரு ஆண்டில் 45 சதவீதம், இரண்டு ஆண்டில் 63 சதவீதம், மூன்று ஆண்டுகளில் 83 சதவீதம் தொற்று வாய்ப்பு உள்ளதாக உறுதியாகி உள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் மிகவும் முக்கியமானவை.
காரணம், காசநோய் இருப்பது ஒருவருக்கு உறுதியானதும், அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும், குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சளி, 'எக்ஸ் - ரே' பரிசோதனை செய்து, அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
சில நோயாளிகளுக்கு சளியே வராது. ஆனால், எக்ஸ் - ரே பரிசோதனையில் நுரையீரலில் தழும்பு, பாக்டீரியா நோய் கிருமிகள் இருக்கும். இவர்களுக்கு, 'பிராங்கோஸ்கோபி' செய்ய வேண்டும்.
டி.பி.,யை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால், நம் ஒவ்வொருவரும் நினைத்தால் தான் முடியும்.
கடந்த 2020ல் டி.பி.,யை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, 2025 என்று இலக்கு உள்ளது. இதன் பின், 2030 - 2035 என்று இலக்கு நீளும். இது தான் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது.
காரணம், எல்லாருக்கும் காசநோய் பற்றி தெரியும். ஆனால் இருமல், தும்மல் வந்தால், யாராவது ஒருவர் வாயை மூடுவதில்லை.
அக்கம் பக்கம் யார் என்று கூட பார்ப்பதில்லை. இப்படி செய்தால், சுற்றி இருக்கும் அனைவருக்கும் 'ரிஸ்க்' இருக்கிறது.
டாக்டர் எஸ். சுரேஷ்,
நுரையீரல் கோளாறுகள்
சிறப்பு மருத்துவர், சென்னை

