PUBLISHED ON : மார் 10, 2013
'ரோபோ' என்று பிரபலமாக அழைக்கப்படும், இயந்திர மனிதனின் உதவி கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையே இது. மிக நுண்ணிய, திசுக்களை அணுகுவதற்கும், உடலின் முக்கிய நரம்புகள் அல்லது ரத்த நாளங்களைச் சேதப்படுத்தாமல், தேவையான அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு, இது மிகுந்த உயரிய முறையாகும். இந்த விதமான, ரோபோ அறுவை சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற சிகிச்சை நிபுணர்கள், இதை மிக எளிதில் கையாண்டு, குறுகிய காலத்தில் அதிக கடினமான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.
காலகாலமாக, மிக கடினமான அறுவை சிகிச்சைகளுக்கும், புற்று நோய் அறுவை சிகிச்சைகளுக்கும் வயிற்றிலோ, மார்பிலோ, தொண்டையிலோ பெரிய காயம் ஏற்படும் வகையில், கீறி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. தற்போது, அதே துல்லியமான அறுவை சிகிச்சையை சாவி துவாரம் போன்ற, மூன்று அல்லது அதிக பட்சம் ஐந்து துவாரங்கள் வழியாக, எளிதில் செய்து மிகுந்த பயனும் பெறமுடிகிறது. லாப்ரேஸ்கோப்பின் அடுத்த உயர்ந்த பரிணாம வளர்ச்சியே, ரோபோ அறுவை சிகிச்சை.
குறைந்த நீளமுடைய கீறலின் வாயிலாக, பழுதடைந்த உறுப்புகள் அல்லது திசுக்களை லாவகமாக எடுப்பதற்கும், அருகாமையில் உள்ள மற்ற திசுக்களுக்கு சேதம் உண்டாகாமல் இருப்பதற்கும், இத்தகைய அறுவை சிகிச்சை மிகவும் சிறந்தது. வழக்கமான அறுவை சிகிச்சைக்குப் பின், 5-7 நாட்கள் கழித்து வீடு திரும்பும் நோயாளிகள் இம்முறையினால், 2-3 நாட்களிலேயே வீடு திரும்ப முடியும்.
நடமாடும் திடம் எளிதில் உண்டாவதால், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய கால் மற்றும் நுரையீரலில் உண்டாகும் ரத்த உறைவினை தடுக்க முடியும். இப்படி, பலதரப்பட்ட நன்மைகள் அளிக்கக்கூடிய இயந்திர மனிதனைக் கொண்டு செய்யும் அறுவை சிகிச்சை, அப்போலோ மருத்துவமனையில் பிரபலமாக உள்ளது.
கழுத்து, தலை பகுதியில் ஏற்படும் கட்டிகள், சிறுநீரகம், ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகள் மற்றும் புற்றுநோய், தைராய்டு அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை சம்பந்தமான அறுவை சிகிச்சை, உடல் பருமனைக் குறைக்க மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை, இதய சம்பந்தமான குறிப்பிட்ட சிகிச்சைகள் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
அதிக பயனளிக்கக்கூடிய, மிகுந்த குறைவான பக்க விளைவுகளுடன், இத்தகைய அரிய அறுவை சிகிச்சை முறையை, அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பல என்பதே உண்மை.
டாக்டர் நரசிம்ம ராகவன்,
அப்போலோ மருத்துவமனை, கிரீம்ஸ் ரோடு, 04460601066